அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதுமலையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள சென்ற போது அங்கே நின்று கொண்டிருந்த மலைவாழ் சிறுவர்களை அழைத்து தன்னுடைய செருப்பை கழட்டிவிட சொன்னார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பை கிளப்பிவரும் நிலையில் இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதுமலையில் நடைபெற்ற யானைகள் முகாமில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்றபோது பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து தன்னுடைய காலணிகளை கழட்ட சொல்லியிருக்கிறார். இதுதொடர்பாக பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் அவரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். சாதியவாதம் இந்த செயலில் அப்பட்டமாக இருப்பதாக கூறி, சில அமைப்புக்கள் அமைச்சருக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய அமைச்சர், நான் சிறுவர்களை என் பேரன் மாதிரி நினைத்துதான் உதவி கேட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதைபற்றிய உங்களின் பார்வை என்ன?
வனத்துறை அமைச்சர் செய்த இந்த செயல் சட்டப்படி தவறான ஒன்று. பேரன் மாதிரி என்று அவர் சொல்வதெல்லாம் தனி. சட்டம் இதை தவறு என்று கூறுகின்றது. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின்படி அவர் கைது செய்யப்பட வேண்டிய குற்றத்தை செய்திருக்கின்றார் என்பதைத்தான் நாம் முதலில் பார்க்க வேண்டி இருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் அல்லது பழங்குடியின மக்களை சார்ந்த யாரையும் இந்த செயலை செய்ய சொன்னால் அவர்களை இந்த சட்டத்தின்படி கைது செய்யலாம். சட்டத்தை மதிக்கக்கூடிய அவர் இந்த செயலை செய்திருக்க கூடாது. அது வன்மையான கண்டனத்துக்குரியது.
அப்படிப்பட்ட எண்ணம் எனக்கு இல்லை, நான் உதவி கேட்பது போலத்தான் அவர்களை அழைத்து செய்ய சொன்னேன், இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளாரே?
கலாஷேத்ரா பள்ளிகளுக்கு சென்று இதே மாதிரி அங்கு இருக்கும் மாணவனை செருப்பை கழட்ட சொல்வாரா? பழங்குடியின பகுதிகளுக்கு செல்லும் போது மட்டும் அவருக்கு இந்த எண்ணம் எப்படி வருகின்றது. அவர்கள் மனதில் ஊறி திளைத்திருக்கின்ற சாதி வெறிதானே அதற்கு காரணமாக இருக்கின்றது. அவர் அந்த மாணவர்களிடம் சொன்ன விதமே ஒரு ஆதிக்கத்தை வெளிப்படுத்துகின்ற மாதிரியான தொனி. இதுவே உயர்சாதி மாணவர்கள் இருக்குமிடத்தில் இவர் இவ்வாறு நடந்துகொள்வாரா என்றால் அங்கே அவர் அப்படி நடந்துகொள்ள அவர் மனம் ஒப்பாது. ஏன் அவருடையசொந்த பேரனையே அவ்வாறு செருப்பை கழட்ட சொல்ல அவர் முன்வருவாரா? அதையே அதிகாரத் தோரணையில் செய்தால் அதனை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்படி அவர் தவறு செய்துள்ளார். சுய மரியாதை இருக்கும் யாரும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.