Skip to main content

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 28/04/2025 | Edited on 28/04/2025

 

Good news for govt employees CM MK Stalin makes new announcements

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ்  அரசு ஊழியர்களுக்கு இன்று (28.04.2025) 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பைச் சரண் செய்யும் நடைமுறை, வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். முன்னதாக அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வரும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டே அமல்படுத்தப்பட உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்படும். அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ. 20 ஆயிரம் ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கப்படும். கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு 1 லட்சம் ரூபாயும், கலை, அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ. 500இல் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ. 4 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்படும். பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பின்போது தகுதி காண் பருவத்தை (Probation Period) கணக்கில் எடுக்காததால் பெண் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பின்போது தகுதிகாண் பருவத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக 3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய தமிழக நியமித்த குழு வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கையை அளிக்கும்.” என அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்