
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சத்தியம் முழக்கம் சபை சார்பில் தேவாலயம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் பெ.கீதா ஜீவன், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையின மக்கள் தொடர்பான அவர்களது கோரிக்கைகளை கேட்டறிவதற்காக ஒரு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பங்கேற்ற சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகள், நாங்கள் சொந்தமாக இடம் வாங்கி அரசு விதிமுறைக்கு உட்பட்டு எல்லா அனுமதிகளையும் வாங்கி இருந்தாலும் கூட வழிபாட்டு ஆலயம் கட்டுவதற்கு தடையின்மை சான்று கொடுக்கப்படுவதில்லை. அனுமதியும் அளிக்கப்படுவதில்லை அப்படியே அனுமதி அளித்தாலும் கட்டடப் பணிகளை மேற்கொள்ள விடுவதில்லை. இப்படி ஒரு நெருக்கடி உங்கள் ஆட்சியில் இருக்கிறது என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து வந்தார்கள்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சிறப்பு அரசாணை ஒன்று வெளியிட்டார்கள். அதில் தேவையற்ற காலதாமதம் கூடாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த தருணத்தில் தான் இந்த சத்தியம் முழக்கம் சபையின் நிர்வாகிகள் என்னை வந்து சந்தித்தனர். தங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை தெரிவித்தனர். நிச்சயம் தீர்வு ஏற்படுத்தித் தருகிறோம் எனத் தெரிவித்தோம். அதன்படி ஏற்பாடுகளை செய்து தந்தோம். இன்றைக்கு அதற்குரிய அனுமதி உங்களுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு இந்த சத்திய முழக்கம் சபையை பற்றி நான் கேள்விப்படவில்லை. ஏனெனில் நிறைய சபைகள் உள்ளது. தேவனுடைய ஊழியத்தை செய்யக்கூடிய நிறைய சபைகள் . ஆங்காங்கே நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.

இங்கே எனக்கு கூறிய நன்றி.. புகழ்.. எல்லாமே நம்முடைய முதலமைச்சருக்கு சேரும். பொதுவாக மதங்கள் ஒழுக்கத்தை போதிக்கிறது. நற்போதனைகளை போதிக்கிறது. எந்த மதமாக இருந்தாலும் மனிதனை நல்வழிப்படுத்தக்கூடிய வழிகளை காண்பிக்கிறது. நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கூடங்கள், ஆலயங்கள், மருத்துவமனைகள் நிர்வகிக்க அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு தான் திமுக எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என எங்கள் கொள்கைகளில் ஒன்றாக கொண்டுள்ளோம்.
கலைஞர் காலம் முதல் இப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலகட்டம் வரை அதை கடைப்பிடித்து வருகிறோம். அத்தகைய அமைச்சரவையில் நானும் ஒரு அமைச்சராக பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது என்றால் அது இறைவனுடைய கிருபை. கர்த்தருடைய இரக்கம் என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் 1996ல் அரசியலுக்கு வருவது பொறுப்புக்கு வருவது என முடிவெடுத்து வந்தபோது, அந்த நேரத்தில் எனது மாமியார் எனக்கு கையில் கொடுத்த ஒரு வசனம் என்னவென்றால்.. ‘நீங்கள் செய்யத்தக்க திராணி இருக்கும் போது செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இருக்காதே..’ அப்படிங்கற ஒரு வசனத்தை கையில் கொடுத்து, ‘அம்மா நீ இதைக் கடைப்பிடித்து தான் நடக்க வேண்டும். யாருக்கெல்லாம் நீ உதவி செய்ய முடியுமோ அவ்வளவு பேருக்கும் நீ உதவி செய்ய வேண்டும்..’ என்றார். அதை நான் இப்போதும் இதுவரைக்கும் கடைப்பிடித்து வருகிறேன். எல்லாம் இறைவனுடைய செயல். அவருடைய கிருபை. அவருடைய இரக்கம் என்பதை நன்றியோடு கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒற்றுமையே பலம். என்றைக்குமே இந்த அரசு உங்களுக்கு பாதுகாவலராக இருக்கும்” எனப் பேசினார்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி