Skip to main content

எப்போது இறந்தார்? வாஜ்பாய் மரண மர்மம்! -டெல்லி டென்ஷன்!

Published on 22/08/2018 | Edited on 23/08/2018
vajpayee death

 

"உங்கள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே இங்கே மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மரணத்திலும் மர்மம் இருக்கிறது'' என்கிற குரல்கள் டெல்லியில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

ஜெ.வைப் போலவே வாஜ்பாயும் சர்க்கரை நோயாளி. அவருக்கும் ஜெ.வைப் போலவே மூட்டுவலி தொந்தரவும் இருந்தது. 2001-ஆம் ஆண்டிலேயே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் வாஜ்பாய். நீண்டநாள் சர்க்கரை வியாதி அவரது சிறுநீரகத்தின் செயலாக்கத்தை மிகக் கடுமையாக பாதித்தது. இரண்டில் ஒரு சிறுநீரகத்தை அவர் இழந்தார். செயல்படும் ஒற்றை சிறுநீரகத்தோடு வாழ்ந்துவந்த அவர் மிகவும் சிரமப்பட்டார். அதனால் பொது வாழ்விலிருந்து ஒதுங்கிய வாஜ்பாயை 2009-ஆம் ஆண்டு பக்கவாத நோய் தாக்கியது. அவரது பேச்சும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் நினைவும் தப்பிப் போனது. வீல்சேரில் கூட நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டார்.

அவ்வப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து மருத்துவ பரிசோதனை மட்டும் செய்து கொள்வார். அப்படி கடந்த ஜூன் 11-ம் தேதி மருத்துவ பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் நினைவிழந்த நிலையில் காணப்பட்டார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு சிறுநீர் செல்லும் பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தது. அது சிறுநீரகம் மற்றும் இதயம், நுரையீரல் அடங்கிய நெஞ்சுப் பகுதியை பாதித்திருந்தது என அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் டைரக்டர் டாக்டர் ரன்தீப் குலேரியா கண்டுபிடித்தார்.

 

 


டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாடிப்பகுதி முழுவதும் வாஜ்பாயிக்காக ஒதுக்கப்பட்டது. ஜெ.வைப் போலவே நோய்த்தொற்றிலிருந்து அவர் விடுபட அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. நரேந்திர மோடி பிரதமராகி, செங்கோட்டையில் இந்த ஆட்சிக்காலத்தில் கடைசி கொடியேற்றத்தை நிகழ்த்தப் போகிறார் என்ற நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் ஆகஸ்ட் 13 மற்றும் 14-ம் தேதிகளில் மிக மிக மோசமானது.

 

vajpayee



சுதந்திர தினத்தன்று வாஜ்பாய் இறந்துவிட்டால், அது துக்க தினமாகிவிடும் என்று டெல்லி கவலைப்பட்டது. அதனால் 14-ஆம் தேதி முதல் உடல்நிலை மிகமிக மோசமாக, வாஜ்பாயின் உடலில் செலுத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவிகளை அகற்றி வாஜ்பாயின் இதயத்தையும், நுரையீரலையும் எக்மோ (ECMO) எனப்படும் கருவியில் இணைத்தனர். அந்தக் கருவியும் மிகச்சரியாக ஆகஸ்ட் 15-ம் தேதி காலை வாஜ்பாய் இறந்துவிட்டார் என்று அறிவித்தது. எனினும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட உயர்அமைப்புகளோ, வாஜ்பாயின் மரணத்தை ஆகஸ்ட் 16-ம் தேதி 5 மணி 5 நிமிடத்திற்கு அறிவிக்க உத்தரவிட்டன என்கின்றன வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள்.