வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதும், பழங்குடியினத் தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் குறித்தும் அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜை சந்தித்துப் பேசினோம். அவர் நமக்கு அளித்த பேட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராகப் போகிறார் என்று அண்ணாமலை கூறுகிறாரே?
அண்ணாமலை தரப்பில் இருந்து எந்த நகைச்சுவையும் வரவில்லை என்று பார்த்தேன். அதுபடியே நகைச்சுவை வந்துவிட்டது. ஒரு ஆபாச கலப்பு இல்லாமல், வன்முறை கலப்பு இல்லாமல் அண்ணாமலை நேரடியாக பேசியது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன்.
கோ பேக் ஸ்டாலின் என்று கூறினால் தொண்டர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள் என்று ஆர்.எஸ். பாரதி கூறியதற்கு நாங்களும் அரிவாள் பிடித்த கை தான் என்று அண்ணாமலை கூறுகிறாரே?
அரிவாளை எடுத்து யார் வெட்டினாலும் வெட்டும். அது அண்ணாமலை வெட்டினால் தான் என்று இல்லை. ஆர்.எஸ். பாரதி வெட்டினாலும் வெட்டும். அரிவாளை எடுத்தவன் எல்லாம் வெட்டுவான் என்று இல்லை. வெறும் செய்தியாளர்களை மட்டும் மிரட்டி வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர் தான் அண்ணாமலை. சென்ற வாரம் அண்ணாமலை நடத்திய பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் காலியாக இருந்தது. ஒரு பொதுக்கூட்டத்தையே ஒழுங்கா நடத்த தெரியவில்லை. இவர் அரிவாளை எடுத்து வெட்டப் போகிறாரா.
பழங்குடி தொழிலாளர் மீது பா.ஜ.க பிரமுகர் சிறுநீர் கழித்த வீடியோ வந்ததற்கு பின் அந்த மாநில முதல்வர் அந்த தொழிலாளர் காலை கழுவினாரே?
இவர்களே சிறுநீர் கழித்துவிட்டு காலையும் கழுவுகிறார்கள். இந்த மாதிரி விவகாரங்கள் எல்லாம் வருணாசிரமம் வந்த காலத்தில் வைத்துக் கொள்ளலாம். இந்த காலத்தில் ஏகலைவன் இருந்தால் துரோணாச்சாரியார் விரலை வெட்டி எடுத்திருப்பான். தேர்தல் நெருங்குவதால் காலை கழுவுகிறார்கள். என்னதான் வாக்குப்பதிவு இயந்திரம் வைத்திருந்தாலும் 10 ஓட்டாவது இருக்க வேண்டும் என்பதற்காக தான் இதுபோன்று செய்கிறார்கள். அந்த நிர்வாகியை கைது செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அது தீர்வு ஆகாது. மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். காலம் காலமாக இவர்கள் மக்கள் தலையில் ஏற்றி வைத்து விட்டார்கள்.
அந்த பழங்குடி தொழிலாளர்க்கு ஐந்து லட்சம் நிவாரணமும், வீடு கட்ட ஒன்றரை லட்சம் முன் பணமும் கொடுத்திக்கிறார்களே?
இந்த பணம் எல்லாம் அந்த இளைஞரை திருப்தி படுத்துவதற்காக கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த இனம் இதை ஒப்புக் கொள்ளுமா? மோடியைப் பற்றி ஏதோ ஒரு வார்த்தை பேசிவிட்டார். இரண்டு வருடம் சிறை தண்டனை கொடுத்தார்கள். சிறுநீர் கழித்தவருக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள். இந்த வழக்கை குஜராத் நீதிமன்றத்தில் அதே நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும். அப்போது என்ன தண்டனை கொடுப்பார்கள் என்று பார்ப்போம். வெறும் காலை மட்டும் கழுவி விட்டால் தீட்டு கழிந்து விடுமா.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்,’ ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொன்ன இனம் தமிழ் இனம். இது எல்லாம் ஆரியர்கள் அதிகம் இருக்கும் வட மாநிலத்தில் இல்லை. இதைத் தான் நீங்கள் எல்லாம் ஆரிய வந்தேறி, மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறோம் என்று மல்லிகார்ஜூன கார்கே பாராளுமன்றத்தில் பேசினார். மத்தியப் பிரேதசம் பக்கத்து மாநிலமான பீகாரில் தான் புத்தர் பிறந்தார். அவர் இதைத் தான் ஒழிக்கப் பாடுபட்டார். ஆனால் அங்கு இப்படி நடக்கிறது.