தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், அதன் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்று தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். எதுவும் பயன் அளிக்கவில்லை.
இதனிடையே, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க முயற்சியிலும் ஈடுபட்டது. இதற்கான அனுமதி கிடைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட பணிகளையும் மேற்கொண்டது. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மக்கள், ஆலையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்பதை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பலகட்டங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடிவு செய்த மக்கள், நீதிமன்ற அனுமதி பெற்று மாபெரும் கடையடைப்பு, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி, தூத்துக்குடியில் சனிக்கிழமை காலை முதல் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 10,000 கடைகள், வணிக நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர். மேலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.
இதைதொடர்ந்து, மாலையில் சிதம்பர நகர் பேருந்து நறுத்தம் அருகே திரண்ட பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏதிராக நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், அதன் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திறக்கு, எந்த ஒரு தலைமையும் இல்லாமல், அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமலும் பல்லாயிரகணக்காண மக்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான மெரினா போராட்டத்திற்கு பின்னர் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக மீண்டும் ஒர் மக்கள் தன்னெழுச்சி போராட்டமாக அமைந்ததால், தூத்தக்குடி மக்களின் போராட்டத்தை ஒட்டு மொத்த தமிழகமே திரும்பி பார்த்தது.