நாடாளுமன்றத்தில் 2023 - 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாங்கள் நேருவின் பெயரை பயன்படுத்தவில்லை என்றால், காங்கிரஸ் கட்சியினர் ஆதங்கம் அடைகின்றனர். நேரு சிறந்த மனிதர் என்றால் அவர் பெயரை குடும்ப பெயராக வைக்காமல் ஏன் காந்தி பெயரை வைக்கிறீர்கள்... அவர் பெயரை பயன்படுத்துவதில் என்ன தயக்கம்” என்று பேசியிருந்தார்.
இது தொடர்பாக நாம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுசாமியிடம் கேட்டோம்.
அதற்கு அவர், “என் மனைவிக்கு திருமணமாகும் முன் அவருக்கு தனது தந்தை பெயர்தான் இனிஷியல். திருமணம் முடிந்த பிறகு என் பெயர்தான் இனிஷியல். இந்தியாவில் நாகரிகம் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஒருவேளை கல்யாணம் செய்து பிள்ளைகள் பெறாததால் வந்த குழப்பமோ என்னவென்று தெரியவில்லை. இந்திரா காந்தி நேருவின் மகள். பின் அவர் பெரோஸ் காந்தியை திருமணம் செய்துகொண்டார். எனவே திருமணம் முடிந்த பிறகு கணவர் பெயரான காந்தி தானே வரும். அதேபோல், அவர்கள் குழந்தைகளுக்கும் தன் தந்தையின் பெயர் தானே இனிஷியலாக வரும்” என்று தெரிவித்தார்.