சென்னை மெரினா கடற்கரை மணலில் நடந்து அலையில் கால்வைப்பது என்பது முதியோர்களுக்கும், மாற்றுதிறனாளிகளுக்கும் ஒரு சவாலாகவே இருக்கிறது. சாதாரணமானவர்கள் மணலில் நடப்பது என்பதே சிரமமாகத்தான் இருக்கிறது. இதில், மாற்றுத்திறனாளிகள் அந்த மணலில் வண்டியை ஓட்டிச்செல்ல முடியாது.
இந்நிலையில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் அலையில் நனைந்து மகிழ சில தன்னார்வ அமைப்புகள் உதவின. கடற்கரை மணலில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக மணலில் சிறப்பு பாதை உருவாக்கப்பட்டது. தன்னார்வ தொண்டு அமைப்பினர் சர்க்கர நாற்காலியில் மாற்றுத்திறனாளிகளை அமரவைத்து அலையின் அருகே அழைத்து சென்றனர். பாதை ஏதுவாக இருந்ததால் முதியோர்களும் இதில் நடந்து சென்று கடல் அலையில் நனைந்து மகிழ்ந்தனர்.
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பாதை நிரந்தர பாதையாக அமைந்தால் முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் எல்லாக்காலங்களிலும் இங்கு வந்து போக ஏதுவாக இருக்கும். சென்னை மாநகராட்சியும், தன்னார்வ அமைப்புகளும் இதை கவனித்தில் கொண்டு அதற்காக நடவடிக்கை எடுத்தால் நல்லது என்று எதிர்பார்க்கிறார்கள் மெரினா ஆர்வலர்கள்.