"தீரன்' சினிமா பட பாணியில் கொள்ளையடித்து "ஜென்டில்மேன்' பட அர்ஜுனைப் போல உதவிகளைச் செய்துள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளைக் கும்பலின் தலைவன் திருவாரூர் முருகனைப் பற்றித் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை. அவனிடம் செல்போன் கிடையாது. பொது நிகழ்ச்சிகளில்கூட போட்டோ எடுத்துக்கொள்ள மாட்டான். ஒரு திருட்டுக்கு வந்த கூட்டாளிகளை அடுத்த திருட்டுக்கு வைத்துக்கொள்ள மாட்டான். இவை எல்லாம் க்ளூ கண்டு பிடிப்பதில் போலீசுக்கு சவாலாக உள்ளது.
முருகன் குறித்து நன்கு தெரிந்த சிமெண்ட் கலவை தொழிலாளி ஒருவரை திருவாரூர் மாவட்டம் கச்சனத்தில் சந்தித்து விசாரித்தோம். "முருகனுக்கு சொந்த ஊர் திருவாரூர் கிடையாது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமம். பிழைப்புக்காக திருவாரூர் வந்து, நான்கு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் கொளுத்தும் வெயிலில், காலில் செருப்புக்கூட இல்லாமல் சாலை போடும் வேலைகளை செய்தாங்க. திருவாரூர் சீராத்தோப்புலதான் முருகனின் குடும்பம் ஆரம்பத்திலிருந்தே இருக்கு. அக்கா கனகவள்ளிதான் குடும்பத்தைக் காப்பாற்றினார். சாலைப் பணியில் பொழுதுக்கும் வேலை வாங்கிக்கொண்டு சம்பளம் கொடுக்கும் போது குறைத்தும், இழிவாகப் பேசுவதையும், தனது சமூகத்துப் பெண்களை தவறாகப் பேசுவதையும் தினசரி கண்டு கோபப்பட்ட முருகன், அந்த வேலையை வெறுத்துவிட்டு, பெங்களூர் சென்று விட்டான். அங்கு டிரைவர் வேலையில் திருநெல்வேலியை சேர்ந்த தினகரன் என்பவனோடு முதல் நட்பு ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்கத் துவங்கியவன், பிறகு வங்கிகள், நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையடித்தான். அங்கேயே மஞ்சுளா என்கிற பெண்ணுடன் வாழ்க்கையை ஆரம்பித்தான். இரண்டு குழந்தைகளோடு எலக்ட்ரானிக் சிட்டியில் வீடு வாங்கிக் கொண்டு அங்கிருந்தபடியே கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் கொள்ளையைத் தொடர்ந்தான்.
அந்தப் பணத்தில், சாலை போடும் வேலையில் அல்லல்படும் தனது சமூகத்து மக்களுக்கு உதவிகளை செய்யத் தொடங்கினான். காலில் அணியும் செருப்பில் தொடங்கிய உதவி, ஜே.சி.பி. ரோடு ரோலர், கான்கிரிட் கலவை மெசின் எனத் தொடர்ந்தது. அவர்கள் குடும்பத்து திருமணங்களில் மெயின் செலவும் முருகனுடையதுதான். எங்க ஊருக்கு அவன் காட்பாதர். எங்களை எல்லாரையும் பிடித்தாலும் அடித்தாலும் அவன் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது. அப்படியே தெரிய வந்தாலும் சொல்லமாட்டோம்''’என்றார்.
ஒரு வழக்கு விஷயமாக முருகனுக்கு உதவிய வழக்கறிஞர் ஒருவரிடம் விசாரித்தோம். "நான்கு மாநிலங்களில் முருகன் மீது வழக்கு இருந்தாலும், அவனது குடும்பம் எங்கு இருக்கிறது என்கிற தகவல்கூட காவல்துறையிடம் இல்லை. திருவாரூர் ஏரியாவுக்குள் அவன் கைவரிசை காட்டாததால், அந்த மாவட்ட காவல்துறை கண்டுகொள்ளவில்லை. கொள்ளையடித்த பணத்தில் ஹைதராபாத்தில் வீடு, பாண்டிச்சேரியில் வீடு, பெங்களூரில் வீடுன்னு எல்லா மாநிலத்திலும் அவனுக்கு வீடு இருக்கு. அங்கங்கே பெண் துணையும் இருக்கு. ஆந்திராவில் இருக்கும்போது சினிமாவில் ஆசைப்பட்டு, படமும் எடுத்தான். அதில் அவனது அக்கா மகனையும் நடிக்கவைத்தான். அப்போது நிறைய துணை நடிகைகளோடு தொடர்பில் இருந்தபோது, அவனுக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது, எய்ட்ஸ் நோயால் அதிகமாக பாதித்த முருகனை பெங்களூர் போலீஸார் தேடத் துவங்கினர்.
அப்போது மஞ்சுளாவுடன் வந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்ந்தான். இதை ஸ்மெல் செய்த பெங்களூரு காக்கிகள் திருவாரூர் வந்துவிட்டனர். அதன் பிறகு வழக்கறிஞர்கள் சிலரோ மாவட்ட ஆட்சியரிடம் கருணை மனு கொடுத்துவிட்டு கொள்ளையடித்த நகைகளை, அந்தக் காவலர்களிடமே ஒப்படைக்க வைத்தோம். அவன் பிழைக்கமாட்டான் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். ஆனா இந்தப் போடு போட்டிருக்கான். சமீபகாலமாக முருகனின் அக்கா மகன் சுரேஷ், முருகனின் அண்ணன் மகன்கள், நண்பர்களோடு முருகனைப் போலவே கொள்ளையடிப்பதாக தகவல் கிடைத்தது. அவன் பெரும்பகுதி பாண்டிச்சேரியிலும், பெங்களூரிலுமே அதிகமாக இருப்பான். ஒரு வேலைக்கு ஒருவனை ஒருமுறைதான் பயன்படுத்துவான், வழக்கறிஞரையும் கூட அப்படித்தான். அவனைப் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அவனுக்கு நான்கு மாநில காவல்துறையிலும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. ஆறு மாதங்களுக்கு முன்புகூட ஒரு காவல் துறை அதிகாரி ஒருவருக்கு சைலோ கார் வாங்கிக் கொடுத்துள்ளான்''’என்கிறார் விவரமாக.
முருகனைத் தேடும் தனிப்படையில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேச்சு கொடுத்தோம். திருவாரூரில் பிடிபட்ட மணிகண்டனையும் முருகனின் அக்கா கனகவள்ளி, அண்ணன் மகன் முரளி, நண்பர்கள் குணா உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரித்தோம், சமீப காலமாக துணை நடிகை ஒருவரோடு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் பிடித்துவிடுவோம். மணிகண்டன், சுரேஷின் நண்பன். மடப்புரத்தைச் சேர்ந்த 17 வது வார்டு அ.தி.மு.க. அவைத்தலைவர் இளங்கோவனின் மகன். அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் கட்சிக்கும் அணிக்கும், பிறகு திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்திலும் இணைந்து நகர பொருளாளராகவும் இருக்கிறான். நாகையில் உள்ள தாஸ் என்கிற பத்தரின் (நகை ஆசாரி) உதவியோடு கொள்ளையடித்த தங்கத்தை காயினாக மாற்றி விற்றுள்ளனர். தங்களைத் தேடும் போலீஸ் மீது உள்ள கோபத்தை விநாயகர் ஊர்வலத்தில் வைத்து வஞ்சம் தீர்த்தனர்.
முருகன் செய்துள்ள உதவிகளுக்கான நன்றியும், அவனைப் பற்றிச் சொன்னால் தீர்த்துடுவாங்கிற அச்சமும் அவங்ககிட்ட இருக்கு''’என்கிறார். சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக, திருவாரூரைச் சேர்ந்த திருமாறனும், பிரதீப்பும் கைது செய்யப் பட்டு விசாரணையை எதிர்கொண்டனர். புதிய கைதுகள் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். "தி.மு.க.வின் முன்னாள் நகரச் செயலாளர் இரா.சங்கரின் அண்ணன் திருமாறன் என்கிற மாறன் அ.தி.மு.க.வில் முக்கியமானவர். ஜெயலலிதாவின் அம்மா சந்தியா பெயரில் மன்றம் ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். ஏற்கனவே இவர் மீது ஆக்கிரமிப்பு, பஞ்சாயத்து, புலிகளுக்கு டீசல் சப்ளை என வழக்குகள் போடப்பட்டாலும் அவற்றிலிருந்து சட்டப்படி விடுதலையானவர். தனது தனிப்பட்ட செல்வாக்கால் பலரிடமும் தொடர்பில் உள்ள திருமாறன், முருகன் தரப்புக்கும் நன்கு அறிமுகமானவர் என்பதால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறோம் எந்த ஒன்றையும் அலட்சியப்படுத்துவதில்லை''’என்றார்.
இதற்கிடையில்தான் கடந்த இதழில் காக்கி ஒருவருக்கு முருகனுடன் நெருக்கம் இருக்கிறது என்று கூறியிருந்தோம். அந்த காக்கியை ஸ்மெல் செய்த விசாரணை உயர் அதிகாரி ஒருவர் சில தகவல்களைக் கறந்துள்ளார். அதன்படியே பாண்டிச்சேரிக்கு ஒரு டீம் சென்றுள்ளது.