Skip to main content

"வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருந்தால் 130 கோடி பேர் வீட்டில் முடங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.." - திருமுருகன் காந்தி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 

gf



இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் உணவுப்பொருள்கள் வழங்கப்படும் என்றும், மாநில அரசுகள் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

கரோனா தொற்று காரணமாக பிரதமர் 21 நாள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். மத்திய மாநில அரசுகள் இந்த இடைப்பட்ட நாட்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அறிவித்துள்ளது. இவை போதுமானதாக கருதுகிறீர்களா?

ரொம்ப தீவிரமாக இந்த நோயின் தாக்கம் இருக்கின்றது. இதற்காக நாம் வீடுகளில் தனிமைபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்வதையோ, உறவினர்களை சந்திப்பது என்பதோ சாத்தியமில்லை. அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களை விட முதியவர்களை தீவிரமாக இது பாதிக்கின்றது.  அதற்காக சில கடினமான முடிவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசுகள் தெரிவித்து வருகின்றன. இதற்காக இந்த 21 நாள் லாக் டவுனை கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் இதில் பாதிக்கப்படும் ஏழை எளியவர்களுக்கு, அன்றாடம் காட்சிகளுக்கும் அரசாங்கம் என்ன செய்ய இருக்கின்றது என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த இடைப்பட்ட நாட்களுக்கு 5 கிலோ அரிசியும், 1 கிலோ பருப்பும் தருவதாக சொல்கிறார்கள். அவர்கள் தரும் உணவுப்பொருட்கள் இந்த 21 நாட்களுக்கு போதுமா? பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருக்கும் இந்த நாட்டில் இது எப்படி போதுமானதாக இருக்கும். 

இந்த யூ டியூப் பார்ப்பவர்கள், பேஸ்புக் பார்ப்பவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இவர்களிடம் இரண்டு மாதத்துக்கு வடிக்க அரிசியாவது இருக்கும். ஆனால் இந்த நிலைமை நாடுமுழுவதும் இருக்கிறதா என்றால் இல்லை. இன்றைக்கும் கூலி வேலைக்கு போயிட்டு 500 ரூபாய் சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் நிலைமை என்ன?  அவர்கள் எங்கே போய் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு கரோனா பற்றி கவலை வருமா? என் குடும்பம் சாகக்கூடாது என்ற கவலை தான் அவர்களுக்கு மேலோங்கி இருக்கும். மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு அதிகம் இருக்கின்றது. இதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முதலில் எடுங்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 30 கிலோ அரசி கொடுங்கள். இல்லை என்றால் இறக்குமதி செய்தாவது கொடுங்கள். இது தற்போது இருக்கின்ற முதல் பிரச்சனை. 

அடுத்து இந்த நோய் வெளிநாட்டில் இருந்துதான் வந்தது என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் என்ன செய்திருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமை படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் வெளிநாட்டில் இந்த நோய் தீவிரமாக பரவியதை நாம் அனைவரும் முன்னரே பார்த்து வருகிறோம். அப்படி இருக்கையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எத்தனை லட்சம் பேர் இருக்க போகிறார்கள். 10 லட்சம் பேர் இருப்பார்களா? அவர்களை தனிமைப்படுத்தி 14 நாட்கள் வைத்திருந்தால் 130 கோடி மக்கள் வீட்டுச்சிறையில் இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது அல்லவா? இதை ஏன் அரசாங்கம் செய்யவில்லை. இதை செய்திருந்தால் இவ்வளவு சிரமங்களை மக்கள் அனுபவிக்க தேவையில்லை.