ஏழு பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. பேரறிவாளன் மனு மீதான விசாரணை யின்போது நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு, தமிழக அரசுக்கு இவ்வாறு அறிவுறுத்தியது.
தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார்.
பேரறிவாளன் பிரச்சனை தொடர்பாக சிபிஐ தரப்பில் புதிய நிலவர அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. சிபிஐ அறிக்கை அளிக்காததால் பேரறிவாளன் பிரச்சனையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தெரிவிக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.
அதற்கு, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார். தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து ஏழு பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் ஆளுநர் முன் எத்தனை மாதங்களாக நிலுவையில் உள்ளன என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆளுநருக்கு நீதிமன்றம் நேரடியாக அழுத்தம் கொடுக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், தமிழக அரசு நிலை பற்றி தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.