இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசியலைப்பில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம், சர்வ வல்லமைப் பெற்ற அதிபராக சர்வாதிகாரியாக உயர்ந்திருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே!
இலங்கை நாடாளுமன்றத்திற்கு அண்மையில் தேர்தல் நடந்தது. கோத்தபாய ராஜபக்சேவின் சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். ராஜபக்சே சகோதரர்களின் ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனா கட்சி, மூன்றி இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி அசூர வெற்றி பெற்றது. பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே!
தம்பி அதிபர்; அண்ணன் பிரதமர் என்கிற கோதாவில் இலங்கை ஆட்சியும் அரசியலும் சிக்கியது. இனி, இவர்கள் வைத்ததே சட்டம் என்கிற பயம் சிங்களவர்கள் அல்லாத மக்களிடம் உருவானது. இருப்பினும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளாக வெற்றிப் பெற்றவர்களால் எந்த அரசியலையும் முன்னெடுக்க முடியவில்லை!
இப்படிப்பட்ட சூழலில் தான், அதிபருக்கே அனைத்து அதிகாரமும் என்கிற வகையில், அரசியலமைப்பின் 20-வது சட்டத்திருத்தத்தை செய்திருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே! கடந்த 2015-ல் நிறைவேற்றப்பட்ட 19 -வது சட்டத்திருத்தத்திற்கு பதிலாக நிறைவேற்ற வேண்டிய 20 -வது சட்டத் திருத்தம் தொடர்பான நடைமுறைகள் குறித்து கடந்த 15 நாட்களாக ஆராய்ந்திருந்தார் கோத்தபாய!
இந்த நிலையில், அதிபரின் நிறைவேற்றும் அதிகாரம் குறிந்த 20-தாவது சட்டத் திருத்தம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று இரவு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
கெஜட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘’இலங்கை நாடாளுமன்றம் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற பிறகு அதிபர் விரும்பினால் நாடாளுமன்றத்தை கலைக்கலாம். இரட்டை குடியிரிமைப் பெற்றவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம். பிரதமர் உள்பட அமைச்சர்களை பதவியிலிருந்து அதிபர் நீக்கலாம். இதற்காக, அதிபருக்கு எதிராக விசாரணை நடத்த யாரும் உத்தரவிட முடியாது. அமைச்சர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் நியமிக்க வேண்டும் என்கிற வரையறை நீக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற 3 ஆணையங்களும் கலைக்கப்படும். இவைகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே உண்டு. அடிப்படை உரிமை எனச் சொல்லி அதிபருக்கு எதிராக யாரும் வழக்கு தொடர முடியாது‘’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ள இந்த திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு பிறகு சட்டமாக்கப்படும் என்கின்றன இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்கள். சட்டத்திருத்தத்தின் மூலம் வானளாவிய அதிகாரத்துடன் சர்வாதிகாரியாக வலிமையடைந்திருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே!