பொதுவாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை அண்மைக்காலமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது என பொதுமக்கள் கவலையடைந்து வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தினருக்குப் பெரும் சிரமத்தைக் கொடுத்துள்ளது. இந்த விலை உயர்வு, 'அன்றாடம் வேலைக்குச் செல்வதற்கே கூடுதல் செலவாகிறதே' என்ற மலைப்பை நடுத்தர மக்களின் மனதில் வேரூன்றவைத்துவிட்டது. இந்த விலை உயர்வால் ஷேர் ஆட்டோ, ஆட்டோ, கார் என அனைத்துக் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.
ஏற்கனவே கரோனா ஊரடங்கில் வேலையிழப்பு, குறைந்த வருமானம் போன்றவற்றால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெளியூரில் இருந்து வந்து தங்கி பணியாற்றுபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வும், அதன் நீட்சியாக ஏற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும் மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன.
கரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் சாப்பிடும் சென்னையில் உள்ள பிரபலமான உணவகங்களில் மினி டிஃபன் 45 ரூபாயில் இருந்து 55 ரூபாய் வரை இருந்தது. தற்போது அதே உணவகங்களில் மினி டிஃபன் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வைக் கண்டு சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதே ஒரு இட்லி, ஒரு மினி தோசை, ஒரு கரண்டி பொங்கல், ஒரு மினி வடை, ஒரு சின்ன கப்பில் கேசரி, ஒரு மினி காஃபி. வேறு எதுவும் இல்லை. இதற்காக ஏன் 45 ரூபாய் ஏற்றினார்கள் என்று சாப்பிட வந்தவர்கள் புலம்பிக்கொண்டே சென்றனர்.
ஹோட்டல்களில் சாப்பாடு மட்டுமல்ல, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் போக்குவரத்துக் கட்டணங்கள், பருப்பு, எண்ணெய் போன்ற மளிகைப் பொருட்கள், அத்தியாவசியமாகப் பயன்படும் மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆனால், வாங்கும் சக்திதான் மக்களுக்கு இன்னும் உயரவில்லை.
அதிமுக அரசோ பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்குமாறு கடும் கண்டனமோ, எதிர்ப்போ மத்திய அரசுக்குத் தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சியான திமுகவோ பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ஐந்து ரூபாய், நான்கு ரூபாய் குறைப்பதாகச் சொல்கிறார்களே தவிர, அவர்களும் மத்திய அரசு திரும்பிப் பார்க்கும் அளவுக்குக் கடும் கண்டனமோ, எதிர்ப்போ காட்டவில்லை எனப் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போதும், உணவங்களில் சாப்பிடும்போதும் எப்படி உஷாராக இருப்பது? பெட்ரோல், டீசல் வேறு வழியில்லை, எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்தான் போட்டாக வேண்டும். அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டரும் வாங்கித்தான் ஆகவேண்டும். ஆனால், முடிந்த அளவுக்கு வாகன இயக்கத்தைக் குறைத்துக்கொள்வது நமது பர்ஸ் பஞ்சர் ஆவதை சற்றே தள்ளிப்போடக்கூடும். அதேபோல, மளிகைப் பொருட்களைப் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய பல மளிகைக் கடைகளும் உள்ளன. அக்கம் பக்கத்தில் விசாரித்து அதுபோன்ற கடைகளிலோ மொத்த விநியோகம் செய்யும் இடங்களிலோ வாங்கலாம்.
பிராண்டட் பொருட்கள்தான் பெரும்பாலும் அதிக விலை கொண்டவை. எனவே, பிராண்டட் பொருட்கள்தான் சிறந்தது என்ற எண்ணத்தை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, பிராண்டட் இல்லாத பொருட்கள் எவ்வளவோ தரமானவையாகவே இருக்கின்றன, அவற்றை வாங்கலாம். அதைப்போலவே நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்து சிறிய, அதேநேரம் சுவையான உணவங்களில் உணவு உண்ணலாம். மெஸ் போன்று சிலர் நடத்துகின்றனர். அதிலும் உணவு வகைகள் குறைந்த விலைக்கு விற்பனையாகின்றன. உடலுக்கும் கேடு குறைவு.
இப்போதைய சூழலில், மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, திறமையாக வாங்கும் வித்தையை நாம் கற்றுக்கொண்டால் இன்றைய இந்த நிலையை நம்மால் ஓரளவு சுலபமாகக் கடந்துவிட முடியும் என நம்பலாம்.