தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமைகளில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் மணிரத்னம் முக்கியமானவர்கள். இவர்களில் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் காலத்தால் அழியாத காவியப்பாடல்களாய் இன்றும் நிலைத்து நிற்கின்றன. என்றும் நிலைத்து நிற்கும்.
உணர்வுகளால் நகரும் இந்த வாழ்க்கையில் எந்த உணர்வுகளின் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் எனக் கண்களுக்கு நெருக்கமாக மூளைக்கு மூர்க்கமாகக் காண்பிப்பது சினிமா. அந்த சினிமாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடங்களில் தங்கள் தனித்திறமையால் மக்களை கட்டி போட்டுவைத்திருப்பார்கள்.
பல்வேறு வேலைகளினூடே பாடல்கள் கேட்பது என்பது இன்றைய தலைமுறைக்குப் பொழுதுபோக்காக இருக்கிறது. அப்படிப் பாடல்கள் கேட்கப்படும் போது பெரும்பாலும் ஓடவிடப்பட்ட பாடல்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தாலும் வேறு வேலைகளில் மூழ்கியிருப்பார்கள். ஆனால் இளையராஜா – மணிரத்னம் கூட்டணியிலான பாடல்கள் ஒளியாக ஓடுகையில் காட்சி அமைப்பைப் ரசிப்பதையும் ஒலியாக இசைக்கையில் பாடலை ரசிப்பதையும் யாராலுமே தவிர்க்கமுடியாது எனலாம். கேட்பவர் எந்த தலைமுறையாயினும் சரி. அதுவே இத்தனை ஆண்டுகாலமாய் இவர்களை இளந்தலைமுறையினருடன் போட்டிப்போட வைத்துக்கொண்டிருக்கும் மேஜிக்.
இளையராஜா – மணிரத்னம் இணைந்து பணியாற்றிய பாடல்களில் காதல், நட்பு, உறவுப்பாசம், பெரும் வலியைச் சுமக்கின்ற தருணம் என பல்வேறு உணர்வுகளை அடக்கிய பாடல்கள் அடங்கியிருக்கின்றன. அதில் குறிப்பாக இப்போதும் நம்மை ரசிக்க வைக்கும், லயிக்க வைக்கும், தாளம்போட வைக்கும் ஐந்து பாடல்களைப் பார்ப்போம்...
இதயத்தை திருடாதே – ஓ பாப்பா லாலி;
நோயுற்ற நாயகன் தன் காதலி நோயுற்றதாக இருப்பதாய் நினைத்துப் பாடும் பாடல். இது காதலிக்கு காதலன் பாடும் தாலாட்டு பாடல் என்பதை ‘தொடைகளில் தாங்கியே தாலாட்டிட காதலன் குழந்தை தான் காதலி’ என்னும் வரி நிரூபிக்கும். இருவர் மட்டுமே தனியாய் இருப்பதன் பின்னணியிலும் ஒரு குளிரான சூழலிலும் இந்த பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். திரையில் காட்டப்பட்டிருக்கும் அந்த இதமான குளிர் இப்பாடலைக் கேட்கையில் நமது புலன்களையும் வருடிவிட்டுத்தான் செல்கிறது.
மெளன ராகம் – மன்றம் வந்த தென்றலுக்கு;
நிச்சயித்த திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படாத போதான இந்த பாடல், வரிகள் தொடங்குவதற்கு முன்னால் வரும் ஹம்மிங் கேட்டாலே அது இந்த பாடல் என்று அனைவரும் சொல்லும்படியான ஒரு பாடல். அதிலும் தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன? நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன என்னும் வரி ஒட்டுமொத்த பிரச்சனைக்கான சூழலை வார்த்தைகளால் வர்ணித்துவிடும். அதை மாண்டேஜ் பாடலாக அருமையாகக் காட்சிப்படுத்தி உறவின் சிக்கல்களைத் திரையில் ஓடவிட்டிருப்பார் தேர்ந்த கதைசொல்லியான மணிரத்னம்.
நாயகன் – தென்பாண்டி சீமையிலே;
சாதாரண ஒரு மனிதன் பெரும் ஆளுமையாகப் பெருமையுடன் கொண்டாடப்படும் சூழலிலும், அவரின் வளர்ச்சியின் போதும், இறப்பின் போதும் என நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் ஒலிக்கும் இந்த பாடல், அது தோன்றும் ஒவ்வொரு தருணத்திலும் நம்மை இசையில் லயித்துப்போக வைத்திருக்கும். இந்தப் பாடலை கமல்ஹாசன், பாலசுப்பிரமணியம், இளையராஜா என மூவர் பாடியிருப்பார்கள். ஒவ்வொரு தருணத்திலும் இந்த பாடல் ஏற்படுத்தும் உணர்வுகள் வித்தியாசமானதாக இருக்கும்.
கஷ்டமான சமயத்தில் தட்டிக்கொடுப்பதாகவும், அழுபவரை ஆற்றுப்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்கும். பாடல் தொடங்கும் முன்னரே இளையராஜாவின் ஹம்மிங், பாடலைக் கேட்பதற்காக நம் மனதை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதைப் போலவே அமைந்திருக்கும்.
அக்னி நட்சத்திரம் – ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா;
இந்தப்பாடல் அன்றும் சரி, இன்றும் சரி ராஜாவிற்காகவே எழுதப்பட்ட பாடலைப் போலவே இருக்கும். ஆனால் இயக்குநர் மணிரத்னம் அந்தப் படத்தில் இந்தப் பாடலில் நாயகன் நடனமாடுவதைப் போலக் காட்சி அமைத்திருப்பார்.
ஒரு படம் முடிவதற்குள்ளேயே இயக்குநரும் இசையமைப்பாளரும் முரண்பட்டுச் சண்டையிட்டுக் கொள்வதையெல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்படியான ஒரு பாடலை படத்திற்காக ராஜா பாடியதும் அதை மணிரத்னம் படத்தில் பயன்படுத்தியதும் அவர்களின் நட்பின் நெருக்கத்தை இன்றைக்கும் பிரதிபலிக்கிறது
தளபதி – ராக்கம்மா கையத்தட்டு;
கொண்டாட்டமான ஒரு திருவிழா பாடலாய் இளைஞர் கூட்டம் ஆடி கலைத்து மகிழும் பாடல். இப்பாடலுக்கான இசையில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாம். வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்திருந்தாலும், ஆர்ப்பரிக்கும் கொண்டாட்ட உணர்வை நமக்குள் உண்டாக்கிவிடுகிற சக்தி இந்த பாடலுக்குள் உண்டு. துள்ளல் பாடல் என்றால் எப்படி இருக்க வேண்டுமென அக்காலத்தில் எடுத்துக்காட்டாய் விளங்கிய பாடல் இது.