சீனாவின் புதிய பயணத்துக்கு வழிகாட்டும் ஸி ஜின்பிங்!
சீனாவின் எதிர்காலப் பயணத்தைத் தீர்மானிக்கும் கோட்பாடு அடிப்படையில் தீர்மானிக்கும் நபர்களில் மூன்றாவது நபராக தற்போதைய ஜனாதிபதி ஜின்பிங் இடம்பிடித்திருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதிகள் ஜியாங் ஜெமின் மற்றும் ஹு ஜிண்டாவோவுக்கு நடுவில்
ஸி ஜின்பிங்
சீனா பயணிக்கும் கோட்பாட்டு வழிமுறைகளை மக்கள் சீனத்தின் தலைவர் மாவோவும் அவருக்கு அடுத்தபடியாக டெங் ஸியோபிங்கும் முடிவு செய்தார்கள். காலத்திற்கேற்ப தனது கொள்கைகளில் சிறு திருத்தம் செய்து அதை அமல்படுத்தினால் மட்டுமே உலகத்தோடு இணைந்து வளர்ச்சியை பெற முடியும் என்ற கருத்தை டெங் ஸியோபிங் வலியுறுத்தினார்.
ஆனால், அவர் இறந்தபிறகே அவருடைய பெயர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சட்டத்தில் இடம்பெற்றது. தற்போதைய ஜனாதிபதி 2049 ஆம் ஆண்டுக்குள் சீன குணங்கள் கொண்ட சோசலிஸத்தை எட்டவேண்டும் என்றும் அதற்கு ஏற்ப சீனா தனது பயணத்தை திட்டமிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஸி ஜின்பிங்கின் முன்னோடிகளான ஜியாங் ஜெமின், ஹு ஜிண்டாவோ ஆகியோரின் பங்களிப்பு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சட்டத்தில் இடம்பெறவில்லை. ஆனால், வரவிருக்கிற பத்தாண்டுகளில் ஸி ஜின்பிங்கின் சிந்தனைகள் கட்சி முன்னெடுக்க வேண்டிய வேலைகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று 19 ஆவது மாநாடு தீர்மானித்தது.
திருத்தப்பட்ட கட்சியின் அரசியல் சட்டத்தில் ஸி ஜின்பிங் தொடங்கிய ஊழலுக்கு எதிரான போர் தொடரும் என்ற திருத்தம் இடம்பிடித்தது. அவர் முன்னெடுத்த புதிய வர்த்தக பாதைகள் திட்டத்தை பக்கத்து நாடுகளுடனும் அவற்றுக்கு அப்பாலும் இணைக்கிற விதத்தில் தொடரும் என்றும் கட்சிச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18 ஆம் தேதி தனது வேலை அறிக்கையை தாக்கல்செய்து பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஸி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நூற்றாண்டான 2021 ஆம் ஆண்டுக்குள் மிதமான வளர்ச்சிபெற்ற சீன சமுகத்தை உருவாக்குவது என்ற முழக்கத்தை அவர் வெளியிட்டார்.
அந்த வளர்ச்சி 2035 ஆம் ஆண்டு மொத்தம் சேர்க்கப்படும். அப்போதிருந்து சீனா மிக முன்னேறிய சோசலிஸ நாடு என்ற நிலையை நோக்கி நடைபோடும். அந்த இலக்கு மக்கள் சீனம் உருவாக்கப்பட்டு நூற்றாண்டு நிறையும் 2050 ஆம் ஆண்டு எட்டப்படும்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மாநாட்டில் 2336 பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள் 204 உறுப்பினர்கள் கொண்ட மத்தியக் குழுவையும், 172 மாற்று உறுப்பினர்களையும் தேர்வு செய்து அங்கீகரித்தது. பின்னர் மத்தியக்குழு 25 பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழுவையும், 7 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் தலைமைக்குழுவின் நிலைக்குழுவையும் அங்கீகரித்தது. இதுதவிர 133 உறுப்பினர்கள் கொண்ட ஊழல் எதிர்ப்பு குழுவையும் மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்தனர்.
அரசியல் தலைமைக்குழுவின் நிலைக்குழுவுக்கு ஜனாதிபதி ஸி ஜின்பிங், பிரதமர் லி கெக்யாங் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. ஊழல் எதிர்ப்பில் முன்னோடியாக இருந்த வாங் குய்ஸான் மத்தியக்குழுவிலும் இடம்பெறவில்லை. எனவே அவர் நிலைக்குழுவிலும் இடம்பெற மாட்டார் என தெரிகிறது.
நிலைக்குழுவிலும் அரசியல் தலைமைக்குழுவிலும் சிறிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸி ஜின்பிங் சீனாவின் ஜனாதிபதியாகவும், மக்கள் சீன ராணுவத்தின் தலைவராகவும் பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆதனூர் சோழன்