Skip to main content

வீடு இல்லாமல் வாழ்கின்ற மக்களிடம் குடியுரிமை சான்று கேட்கிறீர்கள்..? - சீமான் கேள்வி!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை சாடி பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது,"  சாலையில் நம்முடைய அம்மாவோ, அக்கவோ அல்லது குழந்தைகளோ செல்லும் போது அவரிடம் உள்ள பொருளை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடுகிறார்கள் என்றால் நாம் அவர்களை என்ன செய்வோம். பொருளை பறித்துக்கொண்டு ஓடியவர்களிடம் உள்ள பொருளை மீட்டு அவர்களை வெளுப்போம். அதைப்போலத்தான் பலநூறு வருடங்களுக்கு முன்பு நம்முடைய வழிபாட்டு உரிமையை பறித்துக்கொண்டவர்களிடம் இருந்து நம்முடைய உரிமையை மீட்க வேண்டும். இன்றைக்கு பெருவுடையார் கோயிலில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இதற்காக நம்முடைய சக்திவேல் முருகனார் எடுத்துவைத்த வாதங்கள் மிகமுக்கியமானது. தெருவில் ஒரு கோயில் இருக்கிறது என்றால் அந்த தெருவில் யாராவது இறந்துவிட்டார்கள் என்றால், அந்த கோயிலின் கருவறையை மூடிவிடுவார்கள். அதை போலவே செத்துபோன மொழியான சமஸ்கிருதத்தை கோயில் உள்ளே வர அனுமதிக்க கூடாது. அதை நம்முடைய அய்யா பதிவு செய்தாரே அந்த நொடியில் அவர்கள் செத்தே போனார்கள். சமஸ்கிருதத்துக்காக நம்மிடம் எவ்வளவு தர்க்கம் செய்கிறார்கள். அதற்கு ஒரு பவர் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி பவர் இருந்தால் நாம் ஏன் அணு உலையை வைத்திருக்கிறோம். சமஸ்கிருதத்தை வைத்தே தேவையான பவரை பெற்றுக்கொள்ளலாமே? நம்மை முட்டாளாக்க பார்க்கிறார்கள். 
 

fg



எத்தகைய அரிய கருத்துக்கள் நம்முடைய  மொழியில் இருக்கின்றது. அறிவார்ந்த அறிஞர் பெருமக்கள் நம்முடைய முன்னோர்களாக நமக்கு கிடைத்துள்ளார்கள். சிவனுக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். ஆனால் நம்முடைய தமிழே அவர் தந்ததுதான் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். நீங்கள் நாத்திகரா அல்லது ஆத்திகரா என்று கேள்வி எழுப்புகிறார்கள், அது எல்லாம் உங்களுக்கு தேவையில்லாத ஒன்று. எங்களுடைய தமிழ் கோயில்களில் ஒலிக்க வேண்டும். எங்கு தமிழ் இருக்கோ அங்கே என்னுடைய இறைவன் இருப்பான். நாங்கள் ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறோம். தகப்பன் என்கிறவன் என்னை பெற்றவனாக இருக்க வேண்டும். தலைவன் என்கிறவன் என் இரத்தமாக இருக்க வேண்டும். என் மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது. என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது. இவன் என்னுடைய இறைவன். அதனால் தமிழில் மந்திரங்கள் கூறச் சொல்கிறோம். விமானத்தில் ஏறியவுடன் என்னை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை வணக்கம் என்றுதான் என்னை பார்த்து விமான பணியாளர்கள் கூறுகிறார்கள். அது வேறு ஒன்றுமில்லை. ஆள் பார்த்து செய்வதுதான்.   

யார் ஒருவர் இந்திய நாடு நம் நாடு, நமக்கு சொந்தமானது என்று பேசுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்த நாட்டிற்கு  சம்மந்தமில்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அந்த நபர்கள் சொந்த வீட்டுக்காரர்களிடம் உங்கள் வீட்டு பத்திரத்தை காட்டு என்கிறார்கள். பரம்பரை பரம்பரையாக இங்கே வாழ்பவர்கள் நாங்கள். இந்த நாடு நாடாவதற்கு முன்பே இங்கே வாழ்ந்தவர்கள் தமிழர்கள். எங்களிடம் நீங்கள் தற்போது சான்று கேட்கிறீர்கள். சரி நாங்கள் கொடுக்கிறோம். வருடாவருடம் திரிவேணி சங்கமத்தில் 3 கோடி பேர் கோவணம் கட்டிக்கொண்டு குளிக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஆவணம் கேளுங்கள். அவர்கள் என்ன தருகிறார்கள் என்று பார்ப்போம். பிரதமர் 2022-க்குள் அனைவருக்கும் வீடு வழங்கிடுவோம் என்று சொல்லும்போது, இன்னும் வீடு இல்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வீடே இல்லாமல் வாழ்கின்ற மக்களிடம் குடியுரிமை சான்று கேட்கிறீர்களே உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா? நாட்டை வழிநடத்தி செல்லும் தலைவர்கள் அந்த இலட்சணத்தில் இருக்கிறார்கள்" என்றார்.