Skip to main content

இந்தியர்களுக்கு பிற நாடுகள் குடியுரிமை மறுத்தால் அவர்களுக்கு மத்திய அரசு சம்பளம் கொடுக்குமா..? - சீமான் கேள்வி!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019


குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தில்லியில் உள்ள அலிகர் மற்றும் ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இந்த விவகாரம் இந்திய அளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிமைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த மதோதா மற்றும் அதை தொடர்ந்து இப்போது கொண்டுவரப்பட்டுள்ள என்ஆர்சி ஆகிய இரண்டும் இந்திய மக்களுக்கு எதிரானவை. இந்திய இறையாண்மைக்கு எதிரானவை. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்துக்கு எதிரானது. தனமனித சுதந்திரத்துக்கு வேட்டுவைப்பது. நாம் தமிழர் கட்சி இதை கடுமையாக கண்டிக்கிறது. ஒருபோதும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த பூமியில் வசிக்கின்றவனுக்கு இந்த நாட்டில் வாழ உரிமையில்லை என்று கூறுவதை நீதி, நேர்மை ஆகியவற்றோடு யோசிப்பவன் ஒவ்வொருவனும் உணரமுடியும் இதனால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று. உயிர்களை கொள்வதே பாவம் என்று சொன்ன புத்தர் பிறந்த பூமி இது. புல், பூண்டை கூட தேசப்படுத்த கூடாது என்று வாழ்ந்த மகாவீரர் அவதரித்த புண்ணிய பூமி இது. அகிம்சையை போதித்த காந்தி பிறந்த இந்த மண்ணில் இந்த செயலை செய்வது என்பது மிக இழிவாக இருக்கிறது. குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த இந்துக்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பு தெரிவிக்கிறீர்கள். உலகம் முழுவதும்  பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில்  இந்தியர்கள் வசிக்கிறார்கள். 

 

k



நல்ல நிலையில், நல்ல பணியில் வாழ்ந்து வருகிறார்கள். உங்களை போன்று அவர்களும் இவ்வாறு ஒரு சட்டத்தை போட்டு குடியுரிமை இல்லை என்று கூறினால் அவர்களுக்கு, நீங்கள் அங்கு வாங்கும் சம்பளத்துடன் கூடிய பணியை வழங்குவீர்களா? இது தேவையில்லாத விளைவுகளை உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களுக்கு ஏற்படுத்தும். இது எந்த மாதிரியான அணுகுமுறை என்றே தெரியவில்லை. வேண்டாத விளைவுகளை ஏற்படுத்த வழி ஏற்படும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேர்தலில் வாக்களிப்பதற்கு ரேஷன் கார்டை பயன்படுத்தினோம். டி.என் சேஷன் தேர்தல் ஆணையராக வந்த பிறகு வாக்காளர் அடையாள அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போதெல்லாம் யார் வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. இப்படிதான் கன்னியாகுமரியில் உள்ள கிருஸ்துவ மீனவர்கள் 40,000 பேரின் வாக்குகளை இல்லாது ஆக்கிவிட்டார்கள். அதை போலத்தான் இந்த சட்டம் மூலம் நாம் இங்கே பிறக்கவில்லை, இந்த நாட்டின் குடியுரிமையை வழங்கமாட்டோம் என்று சொல்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கின்றது. நீங்களே நிரூபியுங்கள் என்றால், நம்மை கணக்கெடுக்க வரும் அதிகாரி நினைத்தால் எதையும் செய்ய முடியுமே? அதில் நாம் என்ன செய்ய முடியும். 

நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் குளுகோஸ் ஏற்ற ஒரு ஸ்டாண்ட் இல்லாமல் ஒரு தாய் மூன்று மணி நேரம் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறார். இந்த அவலத்தை போக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டின் பொருளாதார சூழ்நிலை முன் எப்போதையும் விட பாதாளத்தில் இருக்கின்றது. அண்டை நாடுகளை விட பொருளாதாரம் சரிந்துள்ளது. அதை மீட்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வங்கியில் இருந்து பெரிய அளவிலான பணத்தை கடன் வாங்குகிறீர்கள். ஏன் என்று இதுவரை காரணம் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். பேனா, பென்சில் வாங்குவதற்கு கூட ஜிஎஸ்டி போடுகிறீர்கள். அந்த பணத்தை எல்லாம் என்ன செய்கின்றீர்கள் என மக்களுக்கு சொல்லவில்லை. அவை எல்லாம் எந்த வழியில் மக்களுக்கு போய் சேர்கிறது என்றும் தெளிவுப்படுத்தவில்லை. குடிமக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் முதலில் நாட்டில் உள்ள மாணவர் சமூகம்தான் களத்துக்கு வருவார்கள். அவர்கள்தான் போராட்டத்தை முன் எடுப்பார்கள். அவர்களை அடித்து மிரட்டி பணிய வைக்கலாம், அல்லது துப்பாக்கிச்சூடு செய்யலாம் என்று நினைப்பது எல்லாம் அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது. இதற்கெல்லாம் மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்றார்.