மனுநீதி தொடர்பாக சர்ச்சையை எழுந்த நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இதனை எதிர்த்தும் மனுநீதியை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆசிரியர் சபரிமாலா பேசியதாவது, "கடந்த 10 நாட்களாக பேசி பேசி போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு ஒரு கருத்தை நேரிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நாம் முன்வைத்தோம். தற்போது அதனை ஒட்டியே இந்த கூட்டமும் நடைபெற்று வருகின்றது. விபச்சாரிகள் என்று என்னுடைய பெயரையும் இணைந்து மனுநீதிக்கு ஆதரவானவர்கள் பொய் பரப்புரைகளை செய்கிறார்கள் என்று என்னிடம் இதற்கு முன் இங்கே பேசிய தோழர் சொன்னார். தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று முத்து லெட்சுமி அம்மையார் போராடியபோது, தேவதாசிகளை எல்லாம் ஒன்று சேர்த்து போராட வைத்த அந்த கும்பல்தான் இன்றைக்கு எல்லா வாட்ஸ் அப் குழுக்களிலும் சபரிமாலாவை விபச்சாரி என்று சொல்லி கருத்தை பதிவிட்டு வருகிறார். உங்களுடைய எந்த மிரட்டல், உருட்டல்களுக்கும் நாங்கள் பயந்தவர்கள் அல்ல. பாஜகவின் முகமாக எத்தனை பேர் இருக்கிறார்கள், எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும், அதுவரை விடமாட்டோம் என்று யாருடைய குரல் முதலில் வெளிவந்தது, ஒரு நடிகையின் குரல், குஷ்பு என்கிற ஒரு நடிகையில் குரல்.
என்ன மிஸ்டர் திருமாவளவன், என்று வேறு ஒரு குரல் வெளியே வருகிறது. காயத்ரி ரகுராம் என்கிற ஒரு நடிகையின் குரல். ஏன், திருமாவளவனை எதிர்த்து உங்கள் சித்தாந்த ரீதியான கருத்துகளை முன்வைக்க ஆண்மையுள்ள தலைவர்கள் யாரும் பாஜகவில் இல்லையா? இரண்டு நடிகைகளை கூப்பிட்டு வந்து எவ்வளவு மோசமாக, எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சனங்களை முன்வைக்க முடியுமோ அவ்வளவு வசவுகளை எங்கள் மீது வீசுகிறீர்கள். என்ன குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது, திருமா பெண்களுக்கு எதிராக பேசிவிட்டார் என்று. அடுத்த இரண்டு நாள் கழித்து இந்து பெண்களுக்கு எதிராக அவர் பேசிவிட்டார் என்று அது மாற்றப்படுகின்றது. அவர்களுக்கு மதம் படித்திருக்கிறது, அந்த மதம் பிடித்த யானைகள் சுதந்திர எண்ணத்தோடு களமாடும் விடுதலை சிறுத்தைகளுடன் களமாட முடியாது, தோல்வியில்தான் உங்கள் நோக்கம் முடியும். ஒருபோதும் அவர்களால் வெற்றி பெற முடியாது. நான் பல போராட்டங்களில் கலந்துகொள்ள செல்கிறபோது மனு தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று பல்வேறு இடங்களில் என்னை நோக்கி கருத்துகளை முன்வைக்கிறார்கள். ஒரு நடிகை ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது தொலைக்காட்சிகளில் பிளாஷ் நியூஸ் செய்யப்படுகிறது. இதை தமிழ்நாட்டின் அவமானமாக பார்க்கிறேன்.
அந்த செய்தியின் மூலம் தமிழக மக்களுக்கு என்ன நல்லது நடந்துவிட போகிறது என்று தெரியவில்லை. தாவுபவர்கள் தொடர்ந்து அதை செய்துகொண்டுதான் இருப்பார்கள். அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. இந்த மனுவுக்கு எதிராக பேசுபவர்களுக்கு மிரட்டல் விடுப்பதை பற்றி என்னிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அவர்களுக்கு என்னுடைய பதிலாக காலில் இருப்பதை கழட்டி காட்டினேன். சேற்றைவாறி வீசும் அவர்களுக்கு பெண்கள் அளிக்கும் தண்டனை அதுவாகத்தான் இருக்கும். பெண்களை கிள்ளுக்கீரையாக அவர்கள் நினைத்து வந்தார்கள். இன்றளவும் அதையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். மனு இப்போது எங்கே நடைமுறையில் இருக்கிறது என்று எல்லோரும் பேசுகிறார்கள், 40 போராட்டங்களில் ஈடுபட்டு அரசியல் செய்துவரும் நபர்களை பற்றி ஒரு சின்ன செய்தியையும், ஒரு தொலைக்காட்சியும் போடுவதில்லை. ஆனால் ஒரு நடிகர் கட்சி தொடங்கிவிட்டால் அது பிளாஷ் நியூஷ் ஆகிறது. ஒரு நடிகர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கிறார் என்றால் அது ஒரு பிரேக்கிங் நியூஸ். தமிழ்நாட்டின் நிலைமை இப்படி ஆகிவிட்டது. நடிகைகளையும், நடிகர்களையும் தூக்கிக்கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் ஒருநாள் அழிந்து போகும். புரட்சியையும், எழுச்சியையும் சின்ன சின்ன சேனல்கள் கொண்டு செல்கிறார்கள். நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், இன்றைக்கு சின்ன அளவில் தொடங்கப்பட்டுள்ள அந்த யூ டியூப் சேனல்கள் தான் நாளைய தமிழகத்தின் வரலாற்றை எழுதபோகிறது" என்றார்.