‘ரமணா’ பட பாணியில் தமிழக காவல்துறையில் அரங்கேறிய ஒரு சம்பவத்தை அசால்ட்டாக கண்டுபிடித்து ஆரம்பத்திலேயே களையெடுத்துள்ளது திருச்சி காவல்துறை.
காவல்துறையில் கட்டுப்பாடுகள் மிக அதிகம். மற்ற அரசுத் துறைகளைப்போல அல்லாமல், பொதுமக்களின் அச்சமற்ற வாழ்க்கைக்கு அச்சாணியாக விளங்கும் காவல்துறையில் சங்கம் அமைத்து செயல்பட நீதிமன்றமும் அனுமதி மறுத்துள்ளது. மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட திருச்சி நகர காவல்துறையில் கடைநிலைக் காவலராக பணியாற்றுபவர் ஜார்ஜ் வில்லியம். பொதுமக்களைப் பாதுகாக்கும் காவல்துறையில் பணியாற்றும் பலரும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக டெபுடேசனில் பணியமர்த்தப்படுவதுண்டு. அப்படித்தான், கடந்த சில மாதங்களுக்கு பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவரின் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டார் ஜார்ஜ் வில்லியம்ஸ். அப்போதே அரசியல் நோக்கில் ஆசைவார்த்தை காட்டி அவரது மூளையை சிலர் சலவை செய்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து ரெகுலர் டூட்டிக்குத் திரும்பிய அவர், சமீபத்தில் நடந்த எஸ்.ஐ. தேர்வில் கலந்துகொண்டு அதில் தோல்வியைத் தழுவினார்.
அதன்பிறகு, அவர் செய்த சில காரியங்கள்தான், ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என இருந்த நேர்மையான காவலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பல கட்டங்களாக நடந்த எஸ்.ஐ. தேர்வில் பொதுமக்களோடு சேர்ந்து தற்போது காவல்துறையில் பணியாற்றும் பலரும் தேர்வு எழுதினார்கள். அதில், தகுதியான பலரும் தேர்வாகி தற்போது பயிற்சியில் இருக்கும் நிலையில், ‘அந்தத் தேர்வே முறையாக நடத்தப்படவில்லை’ என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. தோல்வியடைந்த யாரோ சிலர்தான் இதுபோன்ற விஷமத்தனமான கருத்துக்களை பரப்புகிறார்கள்’ என அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது காவல்துறை.
ஆனால், அதன் தொடர்ச்சியாக காவலர் சமூகத்தில் நடக்கும் பொதுவான சில விசயங்களும் பூதாகரமாக்கப்பட்டு வெளியில் கசியவே, நேர்மையான காவலர்கள் மத்தியில் அது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில்தான், ‘அந்தக் குழப்பத்திற்கான ஆணி வேரே காவலர் ஜார்ஜ் வில்லியம்ஸ்தான்’ என்பதை தற்போது கண்டறிந்துள்ளனர் திருச்சி குற்றப்பிரிவு காவல்துறையினர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது “குறிப்பிட்ட அந்த பா.ஜ.க. முக்கிய பிரமுகரிடம் ஜார்ஜ் வில்லியம்ஸ் பணியாற்றிய போது அக்கட்சியின் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட அவர், காவல் துறையில் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் சில தகவல்களையும், உயரதிகாரிகள் சிலரின் நடவடிக்கைகளையும் கண்டறிந்து, அவற்றை தங்களுக்கு ‘பாஸ்’ செய்யச்சொல்லி அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட, பயிற்சிப்பாசறை போலவே நடந்த அவர்களின் ரகசிய ட்ரைனிங்கில் கலந்து கொண்ட அவருக்கு சில அசைன் மெண்டுகளும் தரப்பட்டனவாம்.
அதன்படி, காவல்துறையில் தன்னைப் போலவே வெறுப்பு மனநிலை கொண்டவர்களையும், பணிச்சுமை காரணமாக விரக்தியில் உள்ளவர்களையும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி கண்டறிந்து, அவர்கள் மூலமாக உயரதிகாரிகள் மற்றும் காவல்துறையில் சர்வசாதாரணமாக பின்பற்றப்படும் நடைமுறைகளையும் பெரிதுபடுத்தி, அவற்றை சமூக வலைத்தளத்தின் மூலம் பரப்புவதுதான் அவருக்கு அளிக்கப்பட்ட அசைன்மெண்ட்.
அதன்படி, ‘காவலர் புரட்சி’என்ற பெயரில் ‘ஃபேக் ஐடி’ மூலம் முகநூல் கணக்கு ஒன்றைத் துவங்கிய அவர், அதைப் பயன்படுத்தி பல்வேறு ஃபேக் ஐடிக்கள் மூலம் காவல்துறையினரின் ஆபத்பாந்தவனாகவும், ‘ரமணா’பட ஹீரோ போலவும் தன்னைக் காட்டிக்கொண்டு, அதில் பல்வேறு மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடம் ஆர்டர்லிகளாக பணியாற்றும் பலருக்கும் தூண்டில் போட்டதாகவும், அதில் ஏமாந்து சிக்கிக்கொண்டவர்கள் தங்களுக்கென தனி வாட்ஸ்அப் குழு அமைத்து, கிட்டத்தட்ட காவலர்களுக்கான நலச்சங்கம் போலவே செயல்பட்டு, தங்கள் பிரிவுகளில் அல்லது தாங்கள் பணியாற்றும் இடங்களில் நடக்கும் குறைகளை அதில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஃபேக் ஐடிக்களை நிர்வகிப்பதற்கும், அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று தங்கள் தலைமைக்கு பாஸ் செய்வதற்கும் என பா.ஜ.க.வின் ஐ.டி. விங்கிலுள்ள எக்ஸ்பீரியன்ஸான சிலர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் காவல்துறையில் நிர்வாக ரீதியாக நடந்து வரும் சில விசயங்களை உண்மைக்குப் புறம்பாகப் பெரிதுபடுத்தி காவல்துறையினர் மத்தியில் வெறுப்பை விதைப்பதையும், பொதுமக்கள் மத்தியில் காவல்துறைக்கு உள்ள நல்ல பெயரைக் கெடுப்பதையும், அதன் மூலமாக ஆட்சியாளர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அந்த ஆர்.எஸ். எஸ். நபர்களின் பின்னணி தெரியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தாங்கள் பணியாற்றும் துறைக்கே துரோகம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த திருச்சி மாநகர குற்றப்பிரிவு மற்றும் சைபர் க்ரைம் போலீசார், ‘இத்தனை குளறுபடிகளுக்கும் மூலகாரணமே அங்கு பணியாற்றும் ஜார்ஜ் வில்லியம்ஸ்தான்’ என்பதையும், ‘இந்த விசயத்தில் அவருக்கு தோளோடு தோள் நின்றது திருச்சி மாவட்ட சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த மதன் என்ற காவலர்’ என்பதையும் கண்டறிந்து, அதுபற்றிய அறிக்கையை தங்கள் உயரதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
காவல்துறையில் நடந்துள்ள இவ்விசயம் அரசல் புரசலாக கசிந்துள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அறிவதற்காக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினியிடம் பேசினோம். “கேள்விப்பட்ட விசயங்கள் உண்மைதான்” எனக்கூறிய அவர், “காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி, கடமைகளை மறந்த அந்தக் காவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
விரைவில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல நூறு போலீசார் மீது நடவடிக்கை பாயலாம் என பரவி வரும் தகவல்களால் உச்சக்கட்ட பரபரப்பிலிருக்கிறது தமிழக காவல்துறை.