ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜராம், ‘துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தெரியும் என்று’ மெரினா கடற்கரையில் காவல் பணியில் இருந்த அதிகாரிகளை ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபட்ட சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரது வழக்கைப் பற்றியும், காவல்நிலையத்தில் குற்றவாளிகள் பாத் ரூமில் வழுக்கி விழுந்து அடிபடும் பின்னணி பற்றியும் நம்மிடையே விவரிக்கிறார்.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜராம் பேசுகையில், “மெரினா கடற்கரை நடந்த சம்பவத்தால் சமூக வலைத்தளங்களில் பலரும் காவல்துறை எளிய மக்களிடம் மட்டும்தான் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர் என்ற விமர்சனத்தை முன் வைக்கின்றனர். ஆனால் அந்த இருவரும் நல்ல மதுபோதையில் தங்கள் வந்த காரை கடற்கரை அருகே லூப்சாலையில் நிறுத்தி இருக்கின்றனர். பொதுவாகப் பார்வையாளர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் காவல் துறையினர் அனுமதி கொடுப்பதில்லை. அந்த நேரத்தில் சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரிடம் காரை இங்கே நிறுத்த வேண்டாம். அங்கிருந்து சென்றுவிடுமாறு காவல் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆனால் மதுபோதையில் இருப்பதால் காவல் அதிகாரிகளை சந்திரமோகனும் தனலட்சுமியும் ஆபாசமாகத் திட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
அங்கிருந்த அதிகாரிகள் நினைத்திருந்தால் உடனடியாக மடக்கிப் பிடித்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அந்த இருவரில் அந்த பெண் போதையில் எதாவது செய்துகொண்டால் அந்த காவலருக்குப் பிரச்சனை ஏற்படும். ஏனென்றால் பெண் காவல் அதிகாரி இல்லையென்ற காரணத்தினால் அவர் பொறுமையாக வீடியோ எடுத்திருக்கிறார். அதற்காக அவர் பயந்து பின் வாங்கினார் என்று அர்த்தமில்லை. அந்த வீடியோவை வைத்தும் அவர்கள் வந்த வண்டி நம்பரை வைத்தும் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் அந்த காவல் அதிகாரி பணி செய்ய விடாமல் தடுத்தாக கூறி புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் பேரில் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
மறுநாள் காலையில் காவல்துறையினர் சந்திரமோகன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு அவரின் மனைவி மட்டும் இருந்துள்ளார். பின்பு சந்திரமோகனின் நம்பரை வாங்கிக்கொண்டு அவர் இருக்கும் இடத்தை ட்ரேஸ் செய்துள்ளனர். பின்பு வேளச்சேரியிலுள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து சந்திரமோகனையும் தனலட்சுமியையும் கைது செய்துள்ளனர். பின்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்த காவலர், சந்திரமோகன் தனலட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டினார் என்று சொல்வதற்கெல்லாம் இடமே இல்லை. போதையில் இருவரும் ஆபாசமாகப் பேசிவிட்டு உடனே அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர். அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அந்த காவலர் செய்திருக்கிறார். உண்மையிலேயே பதவியில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் இந்த மாதிரி ரகளையில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். சொன்னது சரி என்று கேட்டுக்கொண்டு செல்வார்கள்.
குற்றவாளிகளுக்கும் காவல்துறையினருக்கும் எந்தவித முன் பகையும் கிடையாது. குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிடுகின்றனர். அப்போது அவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா? நிரபராதியா? என்று நீதிமன்றத்தின் நியாயம் கிடைக்கும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யும்போது அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் காவல்துறையினரைத் தாக்கும்போது பதிலுக்கு அவர்களும் தற்காப்புக்குத் தாக்குகின்றனர். பாத் ரூமில் வழுக்கி விழுந்து அடிபடுவதைத் திட்டமிட்டு காவல்துறையினர் செய்வதில்லை. அப்படியே செய்தாலும் அதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மீது எடுக்கலாம். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கும். இதனால் பெரும்பாலும் இதுபோன்ற செயலில் காவல்துறையினர் ஈடுபடமாட்டார்கள். அவர்களே தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றத்தான் வேலை செய்கிறார். தேவையில்லாத வேலையைச் செய்ய மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.