அதிக பரபரப்பு இல்லை. ஆனால், அழுத்தமான சில முடிவுகளுடன் நடந்து முடிந்திருக்கிறது தி.மு.க. பொதுக்குழு! இதில் பேசிய கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், "மீண்டும் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்'' என்று சொல்லியிருப்பது சீனியர்கள் உள்ளிட்ட பலருக்கும் கிலியைத் தந்திருக்கிறது. அறிவாலயத்திற்கு வெளியே முதன்முதலாக கட்சியின் பொதுக்குழுவை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். கலைஞர் நினைவிடம் சென்று விட்டு அப்படியே பொதுக்குழுவிற்கு ஸ்டாலின் வருவது போல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நேராக பொதுக்குழு அரங்கத்துக்கு வந்தார் ஸ்டாலின்.
காலை 10 மணிக்கு பொதுக்குழு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 9.45க்கெல்லாம் ஸ்டாலின் மேடைக்கு வந்துவிட்டதால் 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே கூட்டம் துவங்கியது. பொதுக்குழு கூட்டத்தை மாநாடு போல ஏற்பாடு செய்திருந்தார் எம்.எல்.ஏ.வும் மா.செ.வுமான ஜெ.அன்பழகன். அண்ணா மற்றும் கலைஞரின் உருவப்படங்களுக்கு ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதை அடுத்து, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனையடுத்து, மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 20 தீர்மானங்களை வாசித்தார் பொன்.முத்துராமலிங்கம். கட்சியின் வரவு-செலவு திட்ட அறிக்கையை குழந்தைவேலும், கட்சியின் சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை வழக்கறிஞர் வில்சனும் வாசித்தனர்.
இதற்கிடையே, இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி வருகிற 26-ந்தேதி நாடாளுமன்றத்தில் விழா எடுக்கப்படுவதால், அரசியலமைப்புச் சட்டத்தில் தேவைப்படும் மாநில சுயாட்சி தொடர்பான சில திருத்தங்களை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை கொண்டு வந்தார் ஸ்டாலின். இவை அனைத்துக்கும் ஒப்புதல் தந்தது பொதுக்குழு. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலிவுற்று இருப்பதால், அவரிடமிருக்கும் அதிகாரத்தை தலைவர் ஸ்டாலினுக்கு மாற்றுவது, கட்சியின் உறுப்பினர்களாக திருநங்கைகளை சேர்ப்பது, கட்சியில் மீண்டும் கிளைக்கழகத்தை உருவாக்குவது உள்ளிட்ட சட்டத்திருத்தங்கள் பொதுக்குழுவில் முக்கியமாக கவனிக்கப்பட்டன.
பொதுக்குழுவில் துணைப்பொதுச் செயலாளர்கள், கொள்கைப்பரப்பு செயலாளர்கள், அணிகளின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பேச வாய்ப்பளிக்கப்படும். ஆனால், இந்த முறை, 10 பேர் அளவிற்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டு மதியம் 1 மணிக்கெல்லாம் பொதுக்குழுவை நிறைவு செய்தார் ஸ்டாலின். பொதுக்குழுவில் பேசியவர்கள் கோஷ்டி அரசியல், மா.செ.க்களின் புறக்கணிப்பு, மரியாதை இல்லாதது, மா.செ.க்கள் மீது குற்றச்சாட்டு, அ.தி.மு.க.வுடன் ரகசிய உடன்பாடு என ஏகப்பட்ட மனக் குமுறல்களை வெளிப்படுத்தினர். இருப்பினும் பொதுக்குழுவுக்கே உரிய அழுத்தமான பிரச்சனைகள், இடைத் தேர்தலில் மோசமாக தோல்வியடைந்திருக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான விவாதங்கள், கட்சியின் தற்போதைய நிலைகுறித்த விமர்சனங்கள், மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்களை எதிர்கொள்ளும் வலிமையான யுக்திகள் என எதுவும் அவர்களிடமிருந்தோ பொருளாளர் துரைமுருகனிடமிருந்தோ எதிரொலிக்கவில்லை.
எல்லாருடைய எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யக்கூடியதாக இருந்தது, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சுதான். "நான் கலைஞர் அல்ல' என, கட்சித்தலைவராகப் பொறுப்பேற்றபோது பேசியதைக் குறிப்பிட்ட ஸ்டாலின், "என் சக்திக்கு முடிந்தளவுக்கு உழைத்தேன். என் சக்தியை மீறியும் உழைத்தேன்; உழைப்பேன்; உழைத்துக்கொண்டிருப்பேன். ஏற்கனவே 89 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தோம். இப்போது 100 உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம். இது தனிப்பட்ட என்னுடைய சாதனை அல்ல. இந்த சாதனை உங்களைச் சேரும். உங்களை உருவாக்கிய தொண்டர்களைச் சேரும்.
நாடாளுமன்றத்தில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றவர்கள் மட்டும் 24 பேர். நாடாளுமன்றத்தில் 3-வது இடத்தில் இருக்கிறோம். இது தொண்டர்களின் உழைப்புக்கு கிடைத்த சாதனை. இங்கு பேசிய 10 பேரும் குறிப்பிட்டு சில பிரச்சனைகளைச் சொன்னார்கள். அந்த பிரச்சனைகளில் 90 சதவீதம் நாங்கள் அறிந்தவைகள்தான். ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகளை அழைத்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். அதன்பேரில் சில நடவடிக்கைகளை எடுத்தோம். இங்கு சொல்லப்பட்டிருக்கும் பிரச்சனைகள் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
செயல்தலைவராக நான் இருந்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தியபோது, சர்வாதிகாரியாக நான் மாறப்போகிறேன் என சொன்னேன். அது வெறும் பேச்சுக்காக அல்ல. கட்சியின் வளர்ச்சிக்காக நாளடைவில் சர்வாதிகாரியாக நிச்சயம் மாறுவேன். நீங்கள் முன்வைத்துள்ள உண்மையான விமர்சனங்களை சம்பந்தப்பட்ட வர்கள் ஏற்று திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவார்கள். தொண்டர்கள்தான் கழகம். தொண் டர்களை அரவணைத்துச்செல்லுங்கள். அவர்களின் ஆலோசனைகளை கேளுங்கள். அவர்களோடு சில நிமிடங்களாவது செலவிடுங்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் கட்சி பணியாற்றாமல் அனைத்து நாட்களில் கட்சி வேலைகளை பார்க்கவேண்டும். அப்படி திட்டமிட்டு பணியாற்றினால் நம்மை வீழ்த்த எவனாலும் முடியாது.
அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் கட்சியின் சட்டத்திருத்தத்தில், ஊராட்சிக் கழகங்களை கிளைக்கழகங்களாக மாற்றும் திருத்தத்தை செய்திருக்கிறோம். இதுவரை 12,500 ஊராட்சி கழகங்களாக இருந்தது இனி 99,420 கிளைக்கழகங்களாக மாறப்போகிறது. அதன் மூலம் 99,420 கிளைக்கழக செயலாளர்கள் வரப்போகிறார்கள். அப்படி வருபவர்கள் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்ற வேண்டும். அதுதான் கட்சிக்கு வலிமையை சேர்க்கும். நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை பெருமையாக சொல்லிக்கொள்கிற போது, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்களில் தோல்வியடைந்திருக்கிறோம். ஆளும் கட்சி பணம் செலவளித்தது, அமைச்சர்கள் முகாமிட்டு அரசு அதிகாரத்தை பயன்படுத்தினார்கள் என நாம் சொல்லலாம். ஆனா, 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தி.மு.க.வை நோக்கி மக்கள் வரவேண்டுமெனில் நாம் மக்களை நோக்கிச் செல்ல வேண்டும். நமது வெற்றியை தடுப்பதற்கு மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசும் சதித் திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறது. கடுமையான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். சாதாரணமாக நாம் ஜெயிக்க அவர்கள் விடமாட்டார்கள்.
கட்சியில் கோஷ்டிகள் இருக்கும். அது கட்சிக்கு வலுச் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர பலகீனமாக்குவதாக இருக்கக் கூடாது. கூட்டம் நடத்துவதில், பிரச்சாரம் செய்வதில், உறுப்பினர்களை சேர்ப்பதில் போட்டிகள் இருக்க வேண்டும். ஒற்றுமையோடு திட்டமிட்டு உழைக்க வேண்டும். நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்து நடக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் இப்போதைவிட ஆளும் கட்சி அதிகமாகத்தான் செலவு செய்யப்போகிறார்கள். அந்த பணத்தை வெற்றிகொள்ளக்கூடிய திறமை நம் ஒற்றுமையிலும் உழைப்பிலும்தான் இருக்கிறது.
1991-96 ஜெயலலிதா ஆட்சியை விட மிக மோசமான கொள்ளைக்கும்பலிடம் இன்றைய ஆட்சி இருக்கிறது. அதை பிரச்சாரம் செய்யாமல் மக்கள் தானாக வந்து வாக்களித்துவிட மாட் டார்கள். கலைஞரின் ஆட்சியை அமைக்க இந்த பொதுக் குழு தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும். இனி வரப்போகிற காலம் நமக்கு சவாலான காலமாகத்தான் இருக்கப்போகிறது. அந்த சவாலை சமாளிக்க தயாராக வேண்டும். கோட்டையை விட்டு கொள்ளைக் கும்பலை விரட்டியடிப்பதுதான் இந்த பொதுக்குழு மூலம் நாம் எடுக்க வேண்டிய சூளுரை'' என்றார் மிக அழுத்தமாக.
ஸ்டாலினின் இந்த பேச்சு பொதுக்குழு உறுப்பினர்களிடம் சூடேற்றியிருந்தது. பொதுக்குழுவுக்கு முதல்நாள் துரைமுருகன், ஜெ.அன்பழகன் சகிதம் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்த ஸ்டாலின், நாற்காலி அமைப்பு, பேசும் முறை உள்பட சில ஒத்திகைகளைப் பார்த்திருக்கிறார். மேடையில் 14 இருக்கைகள் போடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. குறிப்பாக, இளைஞரணியின் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதற்கு பிறகு நடக்கும் பொதுக்குழு என்பதால் அவரை மேடையில் உட்கார வைக்க முடிவு செய்திருந்தனர்.
அவரை மட்டும் அமர்த்தினால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகும் என நினைத்து மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி உட்பட சில முக்கிய அணிகளின் செயலாளர்களையும் உட்கார வைக்கலாம் என்கிற அளவில் ஆலோசனை நடத்தியபோதுதான் 14 இருக்கைகள் போட வேண்டிய சூழல் எழுந்தது. அதற்கேற்ப மேடை யில் இருக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என ஒத்திகை பார்த்தார் ஸ்டாலின். உதயநிதியை மேடையில் ஏற்ற வேண்டுமென்பது சித்தரஞ்சன் சாலையின் விருப்பம். சீனியர்கள் மத்தியில் இது புகைச்சலை ஏற்படுத்தியது. தொண்டர்களிடமும் மீடியாக்களிடமும் இது எப்படி பார்க்கப்படும் என்பதை எடுத்துச் சொல்லினர். இதனால் 14 நாற்காலிகள் என்பது 9 நாற்காலிகளாக சுருங்கியதுடன், உதயநிதிக்கு பந்தலில் 7-வது வரிசையில் இடமளித்தனர்.
இந்த பொதுக்குழுவில் இளம்பெண்கள் பேரவையை துவக்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக பெண் பிரபலங்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டுமிருந்தனர். பொதுக்குழுவில், அதற்கான தீர்மானம் நிறைவேற்றவும் முடிவு செய்திருந்தனர். ஏற்கனவே கனிமொழியிடம் பேசி ஒப்புதலையும் பெற்றிருந்தார் ஸ்டாலின். அது குறித்து கனிமொழியிடம் சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் விவாதித்தபோது, "இது தேவையா' என மறுதலித்த கனிமொழி, ஒரு கட்டத்தில் "அண்ணனுக்கு எது விருப்பமோ அதை செய்யுங்கள். நான் தடையாக இருக்க மாட்டேன்' என ஒப்புதல் தந்திருந்தார்.
இந்த நிலையில், என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றலாம் என ஒரு நாள் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் சீனியர்களிடம் ஸ்டாலின் விவாதித்தபோது, இளம்பெண்கள் பேரவை துவக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது சீனியர்கள் சிலர், "இளைஞரணியின் கட்டுப்பாட்டில் இளம் பெண்கள் பேரவை செயல்படுகிறபோது தேவையற்ற பிரச்சனைகள் வரலாம். விரும்பத்தகாத பிரச்சனைகளை கொண்டு வரும். அது உதயநிதிக்கும் ஒட்டுமொத்த இளைஞரணிக்கும் சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கும்' என்கிற ரீதியில் சொல்ல, பிரச்சனைகளை உணர்ந்த ஸ்டாலின், இளம் பெண்கள் பேரவை துவக்குவதை தள்ளி வைத்ததனால் அது குறித்த தீர்மானம் வரவில்லை. கனிமொழி தலைமையிலான மகளிரணியை டம்மியாக்க நினைத்தவர்களுக்கு உள்ளூர வருத்தம்.
அதேபோல, பேராசிரியர் செயல்பட முடியாமலிருப்பதால் பொதுச்செயலாளர் பொறுப்பு என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதில் ஒருவரை நியமிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அதற்கு சீனியர்களோ, "கலைஞர் இருக்கும்போது இப்படி ஒரு விவாதம் நடந்தது. அப்போது, எந்த சூழலிலும் பதவியில் இருக்கும் சீனியர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்கள் வகிக்கும் பதவிக்கு பொறுப்பு என ஒருவரை நியமிக்கக் கூடாது' என கலைஞர் திட்டவட்டமாக சொல்லியதை நினைவுபடுத்த பொறுப்பு என்பதும் கைவிடப்பட்டது. அதன்பிறகுதான், பொதுச்செயலாளர் அதிகாரத்தை தலைவருக்கு மாற்றியமைக்கும்படி கட்சியின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.
பொதுக்குழுவுக்கு முந்தைய நாட்களில் இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கும் நிலையில், "சர்வாதிகாரியாக மாறுவேன்' என ஆரம்பித்து பல எச்சரிக்கைகளை ஸ்டாலின் எதிரொலித்ததை உற்றுக் கவனித்த தொண்டர்கள், "எதையெல்லாம் எதிர்பார்த்தோமோ அதையெல்லாம் தலைவர் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் செய்வாரா? கட்சி நலனுக்காக உண்மையாகவே சர்வாதிகாரி ஆவாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்தளவுக்கு தி.மு.க.வுக்குள் செய்ய வேண்டிய செயல்கள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஏராளம் உள்ளன'' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.