Skip to main content

"திருக்குறளில் கடவுள் பற்றிய கருத்துக்கள் இருந்தாலும்.." - வள்ளுவரை விவரிக்கும் புலவர் ப.வீரமணி

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

திருக்குறள் தொடர்பான விவாதங்கள் கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவிப்பது, அவரின் சிலைக்கு மை அடிப்பது, சிலையை சேதப்படுத்துவது என்று தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திருக்குறள் தொடர்பாகவும், திருவள்ளுவர் தொடர்பாகவும் புலவர் ப.வீரமணி அவர்கள் நம்மோடு சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவரின் கருத்துக்கள் பின்வருமாறு,

கடந்த சில நாட்களாக திருக்குறள் பற்றிய சர்ச்சைகள் அதிகம் எழுவதை பார்த்திருப்பீர்கள். தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும், உத்ராட்சை மாலை போட்டும் புகைப்படம் வெளியிட்டு இருந்தார்கள். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உடையவர் தான். கடவுள் வாழ்த்தை எழுதியவரும் கூட. அப்படியிருந்தும் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தங்களுக்கானவராக திருவள்ளுவரை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்?

திருக்குறளில் கடவுள் பற்றி சில இடங்களில் கூறப்பட்டுள்ளது உண்மை. புராணக் கருத்துக்களும் சில இடங்களில் சொல்லப்பட்டிருப்பது உண்மை. ஆனால், அதை வைத்து மட்டும் அவர் கடவுளை பற்றிதான் அதிகம் பேசினார் என்பது தவறான ஒன்று. அவர் எந்த தனிப்பட்ட கடவுளை பற்றியும் அவர் பேசவில்லை. அவரை தங்கள் பக்கம் திரிக்க நினைப்பவர்கள் அவர் இவ்வாறு சொன்னார், என்று தங்களுக்கு சாதகமானவற்றை சொல்கிறார்கள். பல திருக்குறள்களில் பண்பு நலன்களை வைத்துத்தான் அவர் கருத்தை தெரிவிக்கிறாரே அன்றி எந்த தனிப்பட்ட கடவுளை பற்றியும் அவர் பேசவில்லை. அதில் அவரின் பொதுமை பண்பை நாம் காணலாம்.

ஆனால் மூவாயிரம் வருங்களுக்கு முன்பு எந்த கடவுள் இருந்தது, எந்த மதம் இருந்தது என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறதே?

அவருடைய காலத்தில் சமணம் இருந்தது, பௌத்தம் இருந்தது. இதர சமயங்கள் எல்லாம் அதற்கு பிறகு வந்தது. ஆதிகாலத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை இருந்து வருகிறது. மனிதன் எப்போது இயற்கைக்கு பயந்தானோ அப்போது இருந்தே கடவுள் நம்பிக்கை இருந்து வருகிறது. இறை நம்பிக்கை இருப்பதாக திருவள்ளுவர் நம்பினரே அன்றி, அவர் ஒரு சமயத்தை சார்ந்தவர் என்று எப்போதும் அவர் நினைக்கவில்லை. ஆனால் தற்போது அதனை பொய்யாக்க முயற்சி செய்கிறார்கள்.
 

hh



இறை நம்பிக்கை உடையவர்களாக திராவிடர்கள் இருந்தார்கள் என்றால் அதனை பெரியாரிஸ்ட்டுகள் ஏற்றுக்கொள்வார்களா? பெரியார் ஏற்றுக்கொண்டாரா? அங்கு நீங்கள் முரண் படுவதாக தெரிகிறதே?

பெரியாருக்கு அதில் கருத்து வேறுபாடு உண்டு. வள்ளுவர் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார், திருக்குறளில் சமய கருத்துக்கள் கூட சில இடங்களில் வருகிறது. அது ரொம்ப சிறும்பான்மை கருத்தாகத்தான் இருக்கும். அதுவும் இரண்டு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் வருகிறது. மீதி 98 சதவீதம் திருவள்ளுவர் சமூதாயத்தை பற்றித்தான் கவலைப்படுகிறார். கடவுள்தான் உன்னை ஆக்குபவர் என்று வள்ளுவர் ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் கடவுளா, மனிதனா என்ற கேள்வி வரும் வேளையில் வள்ளுவர் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார். அதில், ஒரு மனிதன் பிச்சை எடுத்துத்தான் வாழ வேண்டும் என்ற நிலை இருக்குமானால், இந்த உலகத்தை படைத்த கடவுள் அழிந்து ஒழிவானாக என்று ஒரு குறளில் அவர் சொல்கிறார்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர் இவ்வாறு சொல்ல முடியாது. அவர் இந்த உலகில் இயற்கையின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடகவே இதனை நாம் கருத வேண்டியுள்ளது. முதல் குறளில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்று கூறுவதாக சிலர் கூறுகிறார்கள். ஆமாம், எல்லா எழுத்துக்களும் அகரத்தை அடிப்படையாக கொண்டு ஒலிப்பதுதான். அதை தவிர மனித உழைப்புக்கோ, முன்னேற்றத்துக்கோ இறைவன்தான் காரணம் என்று திருவள்ளுவர் எங்கேயும் கூறவில்லை. இதுதான் உண்மை. மனிதத்துக்கு முன்னுரிமை கொடுத்ததால் தான் பெரியார் போன்றவர்கள் அவரை போற்றி பாராட்டினார்கள். பிறப்பை கொண்டோ, தொழிலை கொண்டோ மனிதர்களை பிரிக்கக் கூடாது என்றும் அவர் தெளிவாக கூறுகிறார். பகவத்கீதையில் உள்ளதை போன்று எந்த கருத்துக்களும் திருக்குறளில் இல்லை என்பது நூறு சதவீதம் உண்மையான ஒன்றாகும்.