கடந்த பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா என்ற இடத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளது இந்தியா.
இன்று அதிகாலை 03.30 மணிக்கு, 1000 கிலோ அளவிலான வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது இந்திய விமானப்படை. இதில் 12 மிராஜ்2000 என்ற விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பலாகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த விமானங்கள் அம்பாலா என்ற விமான ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டுள்ளன. பலாகோட்டில் 3.45 முதல் 3.53க்குள்ளும், முஸாஃபராபாத்தில் 3.48 முதல் 3.55க்குள்ளும், சாக்கோதியில் 3.58 முதல் 4.04க்குள்ளும் தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்திய விமானம் புறப்பட்டவுடனேயே ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு சென்றவுடனேயே பாகிஸ்தானின் ரேடாரில் அவை தெரிந்துவிடும். இருந்தும் வெற்றிகரமாக தாக்குதல் நடத்திவிட்டு, எவ்வித சேதாரமுமின்றி திரும்பியுள்ளனர். தங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து பாகிஸ்தான் பின்வாங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 வருடங்களுக்கு பிறகு இந்தியா எல்லை தாண்டி சென்று தாக்குதல் நடத்தியுள்ளது என்பதும், கடைசியாக 1971ம் ஆண்டு வங்காளதேசத்தின் விடுதலைக்காக பாகிஸ்தானுக்குள் சென்று போரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.