உலக நாடுகளை கரோனா ஆட்டிப்படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் கூட அதன் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வரும் சூழ்நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு என்பது சமூகப்பரவல் என்ற அளவிற்குச் செல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அந்தப் பாதிப்புக்கு உள்ளாகி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளார்கள். இந்நிலையில் இந்த நோய்தொற்றுக்கு ஆளாகி இறந்தவர்களின் உடலைப் புதைப்பதற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வீடியோ காட்சி மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், "கரோனா தொடர்பாக ஒரு செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். சிறிது நேரத்திற்கு முன்பு தொலைக்காட்சியில் கேப்டன் உள்ளிட்ட அனைவரும் ஒரு காட்சியைப் பார்த்தோம். அதில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர் அந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரை அடக்கம் செய்ய சுகாதாரப் பணியாளர்கள் முயன்ற போது அதனைப் பொதுமக்கள் தடுத்துள்ளார்கள். தடுத்தது மட்டுமின்றி வாகனத்தையும் அடித்துள்ளார்கள். பணியாளர்களைத் தாக்கியுள்ளார்கள். இது மிகவும் வருத்தத்துக்கு உரிய ஒரு நிகழ்வாகும். கண்டிக்கத்தக்க ஒரு சம்பவம் ஆகும்.
சுகாதாரத்துறையினர் இந்த நோயின் காரணமாக இறப்பவர்களைத் தகுந்த பாதுகாப்பு முறைகளோடுதான் இறுதிச் சடங்கு செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதனாலோ அல்லது எரியூட்டதல் காரணமாகவோ இந்த வைரஸ் தொற்று பரவாது. இதனைச் சுதாதாரத்துறை பலமுறை கூறியுள்ளது. அப்படி இருந்து மக்கள் இந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்திருக்க வேண்டும். இந்தக் கடினமான காலகட்டத்தில் நமக்காகச் சேவை ஆற்றுபவர்கள் அவர்கள். அவர்களுக்கு நாம் பெருமை சேர்க்கவில்லை என்றாலும், அவர்களை அவமானப்படும் காரியங்களைச் செய்யாது இருக்க வேண்டும்.
இதுவே அவர்களுக்கு நாம் செய்யும் நன்மையாகும். எனவே பொதுமக்கள் மருத்துவர்களை மதிக்க வேண்டும் என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே கரோனா சிகிச்சை அளிக்க தேமுதிக தலைமை அலுவலகத்தையும், ஆண்டாள் அழகர் கல்லூரியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசுக்குத் தெரிவித்திருந்தோம். தற்போது பொதுமக்கள் கரோனா நோயாளிகளை இறுதிச் சடங்கு செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் தங்களின் கல்லூரியில் ஒரு பகுதியை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்." என்றார்