Skip to main content

'சிட்டிசன்' பட பாணியில் பூமிக்குள் புதைந்து கொண்டிருக்கும் சப்பாக்கம்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

ddd

 

அஜித் நடித்த ‘சிட்டிசன்' திரைப்படத்தில் ‘அத்திப்பட்டி’ என்ற கிராமமே, இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அதுபோல் இப்போது உண்மையிலேயே ஒரு கிராமம், கொஞ்சம் கொஞ்சமாக புதையுண்டு காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்ற தகவல் நம்மை எட்டியது. அதிலும் சென்னைக்கு அருகிலேயே உள்ள கிராமம் காணாமல் போகிறது என்று அந்தத் தகவல் பயமுறுத்த, உடனடியாக ஸ்பாட்டை நோக்கி விரைந்தோம்.

 

சென்னையில் இருந்து இருபத்தைந்தாவது கி.மீ.யில் இருந்த காட்டுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சப்பாக்கம் கிராமம்தான் பூமிக்குள் புதைந்து கொண்டிருக்கிறது என்று சொன்னதால், மீஞ்சூர் வழியாக கரடுமுரடான சாலையில் அங்கிருந்த அத்திபட்டு என்ற கிராமத்தை அடைந்தோம். அங்கிருந்து மண்சாலையில் இறங்க, வழி நெடுக சாம்பல் புழுதி வழியை மறைத்து பனிமூட்டம் போல் கிளம்பியிருந்தது.

 

ddd

 

காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட சப்பாக்கம் இருந்த இடம் முழுக்க சாம்பல் சாம்பல் சாம்பல்..! ஆள் நடமாட்டம் கூட அதிகம் இல்லை. ஒருபுறம் ஏரி போல் தண்ணீர் தேங்கியிருந்தது, மறுபுறம் நிலக்கரி சாம்பல் கொண்டு செல்லும் பைப், சாம்பல் கழிவுகளால் மாசடைந்திருந்தது.

 

அந்தப் பகுதியைப் பார்ப்பதற்கே புயலால் ஜல சமாதியான தனுஷ்கோடி போல, சாம்பல் கடலுக்குள் மூழ்கியதுபோல் காட்சியளித்தது. எதிர்ப்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் சேதுராமன் நம்மோடு சேர்ந்துகொண்டார். பெரும்பாலான வீடுகள் சிதிலமடைந்திருந்தன. ஊருக்குள் அழைத்துச் சென்ற சேதுராமன், "இதுதான் எங்கள் மக்கள் வசித்துவரும் காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சப்பாக்கம் கிராமம். முப்பது வருடங்களுக்கு முன் இந்த பகுதியில் இருபோக விவசாயம் செய்து வந்தனர். 15 அடியில் அருமையான குடிநீர் கிடைத்துக்கொண்டு இருந்தது. சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் 1994ல் திறக்கப்பட்ட வடசென்னை அனல் மின் நிலையத்தால், எல்லாம் தலைகீழாகி விட்டது. நாள் ஒன்றுக்கு 1830 மெகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த அனல் மின்நிலையத்துக்காக, கடல் வழியே எண்ணூர் துறைமுகத்திற்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது.

 

ddd

 

பின்னர் அதன் சாம்பலை கடல் நீருடன் சேர்த்து பைப் மூலம் இந்த சப்பாக்கம் கிராமத்தில் சேமித்தார்கள். இதற்காக சுமார் 600 ஏக்கர் விளை நிலத்தைக் கையகப்படுத்தி, இந்த நிலக்கரி சாம்பல் கழிவுகளைத் தேக்கினர். இதை செயற்கைக் கல்லான செராமிக் கற்களைச் செய்வதற்காக அனுப்புகின்றனர். ஆனால் இந்த வேலைகளால் இந்தப் பகுதியின் காற்றே மாசடைந்துவிட்டது. குடிநீரும் நிலத்தடி நீரும்கூட வீணாகிவிட்டது. அதோடு சாம்பல் புழுதியில் பல வீடுகள் புதைந்துவிட்டன. பெரும்பாலான மக்களும் வெளியூர்களுக்கு ஓட்டம் பிடித்துவிட்டார்கள். இதனால் ஊர், ஊராக இல்லை. இந்த கெமிக்கல் சாம்பல் நம் உடம்பில் பட்டால், எரிச்சலும் தோல் பாதிப்பும் ஏற்படும். இது சுவாசக் கோளாறையும் ஏற்படுத்துகிறது. அதனால், இதற்குத் தீர்வு என்ன என்று தெரியாமல் தவிக்கிறோம்'' என்றார் கவலையாய்.

 

ஊர் இளைஞரான பிரசன்னாவோ, "இந்த ஊரின் நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவவரான நடிகர் கமல்கூட இங்கே வந்து பார்த்துவிட்டுப் போனார். ஆனால் தீர்வுதான் இன்னும் கிடைக்கலை. எங்க ஊரின் பிரச்சினையால் இங்கே யாரும் பெண் கொடுக்கவோ எடுக்கவோ முன் வருவதில்லை. பக்கத்தில் பள்ளிக்கூட வசதிகள் கூட இல்லை. எந்த அரசியல்வாதியும் அதிகாரிகளும்கூட எங்களைப் பத்திக் கவலைப்படலை'' என்கிறார் கலக்கமாய்.

 

ddd

 

கிராம வாசியான வள்ளி நம்மிடம் "வீட்ட சுத்தி சாம்பல் குவியலா இருக்கு. துணி துவைத்துக் கூட காயப்போட முடியாது. எங்கப் பெண்ணை வெளியூர்ல கட்டிக் கொடுத்திருக்கோம். பேத்தி பிறந்திருக்கா. சாம்பலுக்குப் பயந்து, குழந்தையை இங்கே கூட்டிக்கிட்டே வர முடியலை. எங்கள் வாழ்வையே சாம்பல் புதைச்சிக்கிட்டு இருக்கு. எங்களைக் காப்பாத்தச் சொல்லி, எத்தனையோ போராட்டங்களை நடத்திட்டோம். எதுவும் நடக்கலை'' என்கிறார் விரக்தியாய்.

 

அந்தப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. ஒ.செ.வான ரமேஷ்ராஜிடம் நிலைமையைத் தெரிவித்தோம். உடனே அவர், காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமாருடன் அங்கே விசிட் அடித்தார். தற்காலிகமாக, அதிகாரிகள் மூலம் அங்கிருந்த சாம்பல் குவியலைக் கொஞ்சம் அகற்றினர். தி.மு.க ஒ.செ.வான ரமேஷ் ராஜ் நம்மிடம், "இது தற்காலிக தீர்வுதான். தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க. ஆட்சிதான் அமையும். அப்போது இதற்கு நிரந்தர தீர்வுக்கான திட்டம் தீட்டப்பட்டு, சாம்பல் ஆபத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'' என்கிறார் நம்பிக்கையாய்.

 

மிச்சம் மீதி இருக்கும் வீடுகளும் சாம்பலுக்குள் புதைவதற்குள் அந்த கிராமத்தையும் அங்கிருக்கும் மக்களையும் அரசு மீட்குமா?

 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.