உயிரை உலுக்கும் புகைப்படங்கள்...
சமீபத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்து, எதுவுமே அறியாத அவர்களது இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரும் உயிரிழந்த துயரம் நிகழ்ந்தது. அந்தத் துயர சம்பவம் நடந்த பொழுது, அங்கிருந்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அவர்களைக் காப்பாற்றுவதை விட புகைப்படம் எடுப்பதை முக்கியமாகக் கருதி செய்ததாக சிலர் குற்றம் சாட்டினர். ஆனால், அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவியதும் அங்கிருந்த புகைப்படக்கார்கள் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனாலும், இப்படிப்பட்ட கொடுமையை ஆவணப்படுத்தி மக்களுக்கு காண்பித்ததால் தான் இன்று அதனைப் பற்றிய விவாதங்களும், அரசுக்கான அழுத்தமும் அதிகமாக இருக்கிறது. இது போன்ற சமயங்களில், புகைப்படக்காரர்கள் தங்கள் கடமையை செய்ய வேண்டுமா அல்லது பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டுமா என்பது எப்பொழுதுமே விவாதமாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட புகழ்பெற்ற சில புகைப்படங்கள் இங்கே...
காத்திருக்கும் கழுகு (The Vulture and the little girl)
இப்புகைப்படம் 1993ல் சூடானில் உள்நாட்டு போர் காரணமாக ஏற்பட்ட பஞ்சத்தை வெளிக்காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இதனை எடுத்தவர் 'கெவின் கார்ட்டர்'. இதில் எழும்பும் சதையுமாக ஒரு பெண் குழந்தை தரையில் கிடக்கும். அந்தக் குழந்தையின் சாவை எதிர்பார்த்து, கழுகு ஒன்று பின்னே இருக்கும். இந்தப் புகைப்படத்தை அவர் எடுத்ததால்தான், உலக மக்கள் கண்களுக்கு ஒரு நாடே பஞ்சத்தால் அழிந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. பிறகு இந்தப் புகைப்படத்தை எடுத்த கெவினை பலரும்,"இவர் மனிதாபிமானம் அற்றவர், இப்புகைப்படத்தை எடுக்காமல் அந்தக் குழந்தையை காப்பாற்றிருக்கலாம்" என்றெல்லாம் விமர்சித்தனர். ஆனால் அவர் இதனை எடுத்ததால் தான் உலகெங்கும் சூடான் பஞ்சம் பற்றி தெரிய வந்தது. அந்நாட்டிற்கு உதவிகளும் கிடைத்தன. கடைசியில் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் கெவின் தற்கொலை செய்து கொண்டார்.
போரின் அவலம் (Terror of War)
இப்புகைப்படம் 1973 ல் வியட்னாமில் நடந்த போரின் போது அங்குள்ள மக்கள் எந்த அளவு துன்பப்பட்டார்கள் என்பதை தெரிவிக்கின்றது. இதனை எடுத்தவர் நிக். இந்த புகைப்படத்தை அவர் எடுத்து வெளியிட்டதால் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இப்போரின் கொடுமை தெரியவந்தது. 9 வயது சிறுமி உடலில் துணி இல்லாமல் தீக்காயத்துடன் போட்டோகிராஃபரை நோக்கி அழுது கொண்டே ஓடி வருவாள். அதனை ஆவணப்படுத்திருப்பார் நிக். இப்புகைப்படம் வியட்நாமில் நடந்த போருக்கு ஒரு முற்றப்புள்ளி வைத்ததாக லண்டன் 'கார்டியன்' பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
எரியும் துறவி ( Burning Monk)
இப்புகைப்படத்தில் இருக்கும் காட்சி 'தீச் குவாங் டக்' எனும் புத்த துறவி தன்னை தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டது. இது 1963 ல் வியட்நாம் அரசு புத்த மதத்திற்கு எதிராக சட்டங்கள் போட்டு அவர்களைத் துன்புறுத்தி வந்ததை வெளிக்கொண்டுவந்தது. இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் 'மால்கம் ப்ரௌன்'. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அப்போதைய அமெரிக்க பிரதமர் ஜான் எஃப் கென்னடி,"வரலாற்றில் இந்த புகைப்படத்தை போல வேறேதுவும் என் மனதை உலுக்கியது இல்லை" என்று கூறினார்.
இந்த புகைப்படங்கள் உலக வரலாற்றின் கரும்பக்கங்களின் முக்கிய ஆவணங்கள். இவை ஏற்படுத்திய தாக்கங்களும் மாற்றங்களும் விளைவுகளும் பெரிது. பாதிக்கப்பட்டவருக்கு உதவும் மனிதாபிமானம் மிக மிக முக்கியமென்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட உண்மை. அதே நேரம், பாதிப்பின் ஆழத்தை ஆவணப்படுத்தி உலகுக்குத் தெரிவிப்பது என்பதும் மிக முக்கியம். 'கேமரா' இல்லாததால் ஒரு முதல்வருக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் போனவர்கள் நாம். கேமராக்கள் இல்லாமல் போனால் பல கொடுமைகள் மறைக்கப்பட்டிருக்கும்.
சந்தோஷ்