Skip to main content

கட்சி! சின்னம்! -ரஜினியின் சீக்ரெட் விசிட்!

Published on 15/12/2020 | Edited on 15/12/2020
ddd

 

கட்சிப் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டவுடன் ரஜினி சென்ற இடம், தனது சூப்பர் ஸ்டார் வாழ்க்கைக்கு முந்தைய இடமான பெங்களூரு. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் ரஜினி குடும்பத்தின் மூத்த உறுப்பினரான அண்ணன் சத்தியநாராயணா கெய்க்வாடு, பெங்களூரு நகரில் உள்ள மைசூர் சாலையில் பசவன்குடி என்கிற இடத்தில் குடியிருக்கிறார். அவரது மனைவி கடந்த வருடம் இறந்துபோனார். அதற்கு வந்த ரஜினி, மறுபடியும் சத்தியநாராயணாவை ஒரு வருடம் கழித்து இப்பொழுதுதான் பார்க்கச் சென்றிருக்கிறார்.

 

MICO  என்கிற கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற சத்தியநாராயணா, ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என பலரும் சொல்லி வந்த நிலையில் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என உறுதிபட சொல்லி வந்தவர். கர்நாடகாவில் செல்வாக்குப் பெற்ற பாஜக தலைவர்கள் மூலம் மராட்டியதைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தொடர்பு வைத்திருக்கும் சத்தியநாராயணா, ரஜினிக்கு அரசியலில் மட்டுமின்றி, ஆன்மிகத்திலும் வழிகாட்டியாக இருப்பவர்.

 

பெங்களூருவில் வாழும் மராட்டிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சதாசிவ நகரில் ஆன்மீக குருவாக திகழும் அந்த பெரியவர் முக்கியமானவர். ரஜினிக்கும் நெருக்கமானவர். அண்ணனும் தம்பியும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். ரகசியமாக நடந்த இந்த ஆன்மீக சந்திப்பு ரஜினியின் சொந்த ஊர் அடங்கியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியிலும் எதிரொலித்தது.

 

கர்நாடகா, ஆந்திரா எல்லையான அந்தத் தொகுதியில் மராட்டியர்களும், கன்னடர்களும் அதிகம் வசிக்கின்றனர். அந்த தொகுதியை மையப்படுத்தி ஏகப்பட்ட கதைகள் ரஜினியின் வருகையையொட்டி கன்னட மீடியாக்களில் எதிரொலித்தது. பெரிய சேனல் முதல் லோக்கல் சேனல்கள் வரை பெங்களூருவிலும் வேப்பனஹள்ளியிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிக் கதையை ஒளிபரப்பிக்கொண்டிருந்தன.

 

ரஜினி தனது சொந்த கிராமத்திற்கு ஒரு குடிதண்ணீர் டேங்க் அமைத்துக் கொடுத்துள்ளார். அங்குள்ள அவரது ஆதரவாளர்கள், ரஜினி எங்கள் மண்ணின் மைந்தர். அவர் வேப்பனஹள்ளியில் போட்டியிட்டால் நாங்கள் அவரை வெற்றிபெற செய்வோம் என கன்னடத்திலும், மராட்டிய மொழியிலும், தெலுங்கிலும் தமிழிலும் பேட்டி அளித்துக்கொண்டிருந்தனர்.

 

பெங்களூருவை கலக்கிய ரஜினி விசிட்டின்போதே டெல்லி பரபரப்படைந்தது. டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் ரஜினி சார்பாக சென்ற வழக்கறிஞர் ஒருவர் ரஜினியின் கட்சியை சைலண்டாக பதிவு செய்வதாக தகவல் கசிந்தது. பாஜக என்பது மூன்று எழுத்து. அதேபோல ரஜினி தன் கட்சிக்கும் மூன்று எழுத்து அடங்கிய நான்கு பெயர்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். அத்துடன் பாஜகவின் சின்னம் தாமரை, தாமரை போலவே பூ ஒன்றை சின்னமாக கேட்டு தேர்தல் கமிஷனில் விண்ணப்பித்திருக்கிறார்.

 

ரஜினி கேட்ட சின்னத்தில் ஒன்று ரோஜா மலர் என டெல்லி தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து என்ன நடக்கும் என தேர்தல் வட்டாரத்தில் கேட்டோம். ரஜினி சார்பில் கொடுத்துள்ள கட்சிப் பெயர்களை நாங்கள் பரிசீலிப்போம். அவர் கொடுத்த பெயரில் வேறு ஏதாவது கட்சிப் பெயர் இருக்கிறதா? அரசியல் கட்சி வேறு ஏதாவது பதிவு செய்யப் பட்டுள்ளதா என ஆராய்வோம். அப்படி ஏதாவது ஒரு கட்சி ரஜினி கொடுத்த பெயரில் பதிவு செய்யப்படாவிட்டால், அந்தப் பெயரிலேயே அவர் கட்சி தொடங்க பதிவு செய்வோம். அதேபோல் ரஜினி கொடுத்த சின்னமான ரோஜா உள்பட மலர்களின் சின்னம் ஏதாவது தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆராய்வோம்.

 

ரஜினி கட்சியை பொறுத்தவரை ஒரு சுயேச்சை கட்சி. எனவே ஒரு குறிப்பிட்ட சின்னத்தை எப்படி வழங்குவது என்பதில் ஏகப்பட்ட நடைமுறைகள் இருக்கிறது. இவை அனைத்தையும் ஆராய்ந்த பிறகு ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் வழங்கப்படும். இதற்கு சராசரியாக 30 நாட்கள் தேர்தல் கமிஷன் அவகாசம் எடுத்துக்கொள்வோம் என்கிறார்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகள்.

 

இதற்கிடையே ரஜினிக்கு சிறப்பு சலுகை அளிக்க வேண்டும். அவர் என்ன பெயரை கேட்கிறாரோ, அந்தப் பெயரை கொடுக்க வேண்டும். என்ன சின்னத்தில் அவர் போட்டியிட விரும்புகிறாரோ அதே சின்னத்தில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என மத்திய பாஜக அரசிடம் இருந்து அழுத்தங்கள் வருவதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள், தெரிவிக்கின்றன. இதற்கிடையே சென்னைக்கு திரும்பிய ரஜினி, மன்றம் சார்பில் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி ஆகியோர் படம் போட்டு எந்த போஸ்டரும் அடிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

 

ரஜினி தனிப்பட்டமுறையில் பலரை சந்தித்து அரசியல் குறித்து விவாதித்து வருகிறார். ஆடிட்டர் குருமூர்த்தி வழக்கம்போலவே நான் கட்சி கொள்கை, தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசு தொடர்பு ஆகியவற்றை பார்த்துக் கொள்கிறேன் என களம் இறங்கியுள்ளார்.

 

கரோனா காலம் ரஜினி மிகவும் கவனமாக இருந்தார். ஒருமுறை ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை செய்ய போலீஸார் வந்தனர். அவர்களைக்கூட ரஜினியின் குடும்பத்தார் கரோனா பயம் காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. ரஜினிக்கு நெருக்கமான நண்பராக இருந்த சினிமா விநியோகஸ்தரான தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தது ரஜினியை பெரிதும் பாதித்திருக்கிறது.

 

பா.ஜ.க தரப்பிலோ, இந்த பயத்தை நீக்கும் வகையில் நிதின் கட்கரி தரப்பிலிருந்து பேசப்பட்டுள்ளதாம். இங்கிலாந்தில் இப்பொழுது நடைமுறையில் கொண்டுவரப்பட்ட கரோனா தடுப்பு ஊசியை நாங்கள் தூதரகம் மூலம் இறக்குமதி செய்து உங்களுக்கு தருகிறோம். அதை போட்டுக்கொண்டால் கரோனா குறித்த அச்சம் தேவையில்லை என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள் என்று ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையே "அண்ணாத்த' பட வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள ரஜினி ஒரு மாதத்திற்கு பிறகு அரசியலுக்கு வரும்போது அவரை ஸ்டாலின், எடப்பாடி ஆகியோருக்கு போட்டியாக முதல்வர் வேட்பாளர் என அறிவிப்பாரா என்கிற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் காணப்படுகிறது.

 

ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை என்றால், அவரது அரசியல் கட்சி மீது ரசிகர்களுக்கே ஈர்ப்பு ஏற்படுமா என்பதும் ஆய்ந்து அலசப்படுகிறது. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளில் உள்ள ரஜினி ஆதரவாளர்களான வி.ஐ.பி.க்கள் மதில்மேல் பூனையாக காத்திருக்கிறார்கள்.