Skip to main content

உதயநிதியின் பிஆர்ஓ எடப்பாடி..? கேலி செய்யும் உடன்பிறப்புகள்!

Published on 03/08/2019 | Edited on 03/08/2019


வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளை விட திமுகவின் மீது சற்று கடுமையாகவே சொல்லப்படும். கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் அரசியல் பிரவேசம் செய்தபோது, தொடங்கிய அந்த குற்றச்சாட்டு இன்று உதயநிதி வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஸ்டாலின் அரசியலுக்கு வருவதற்கு முன்பே சில திரைப்படங்களில் நடித்தை போல, உதயநிதியும் சினிமாவில் கால்வைத்து விட்டே அரசியலில் களமாட வந்துள்ளார். அவரின் முதல் களமாக கடந்த நாடாளுமன்ற தேர்தல் இருந்தது. சினிமா மூலம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்ததால் மக்களிடம் அவர் எளிதாக சென்றடைந்தார். அவரின் எளிமையான பேச்சும் தேர்தலில் எடுப்பட்டதாக கூறுகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். அதற்கு பரிசாக அவருக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. தற்போது வேலூர் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ள அவர், கதிர் ஆனத்துக்காக கடுமையாக வாக்கு சேகரித்து வருகிறார்.

 

palanisamy




இந்நிலையில், வேலூரில் நேற்று பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக பேசிய அவர், திமுக தலைவராக உதயநிதியை கொண்டு வருவதற்காகவே அவர் சினிமாவில் நடிப்பதற்கு அனுப்பப்பட்டார் என கூறினார். நம்முடைய பேச்சு திமுகவிற்கு எதிராக திரும்பும் என்ற நினைப்பில் எடப்பாடி உதயநிதியை விமர்சித்தார். ஆனால், நிலைமை அவருக்கு எதிராக திரும்பி உள்ளதாக சொல்கிறார்கள் உதயநிதி ஆதரவாளர்கள். இதுதொடர்பாக பேசிய உதயநிதி ஆதரவாளர்கள், " இளைஞர் அணி செயலாளர் ஆனதில் இருந்து அண்ணனை (உதயநிதி) மக்கள் முன் கொண்டு செல்வதற்கு எங்களால் ஆன பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டுதான் இருந்தோம். அது நல்ல பலன் அளித்துகொண்டே வந்தது. ஆனால், நேற்று அண்ணனை விமர்சித்து எடப்பாடி பேசியது எங்களுக்கு ஆச்சிரியமாகவும், ஒருவிதத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.


ஏனெனில் திமுக தலைவர் கலைஞர், ஜெயலலிதாவை தவிர வேறு தலைவர்களை விமர்சிக்க வேண்டும் என்றால் சில இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்திருப்பார். ராமதாஸை விமர்சனம் செய்ய வீரபாண்டி ஆறுமுகத்தைதான் கலைஞர் பரிந்துரைப்பார். அதையேதான் தளபதியும் செய்வார். அன்புமணியை திமுக மாவட்ட செயலாளரை கொண்டு விமர்சனம் செய்து அறிக்கை வெளியிடுவார். ஜெயலிலதா கூட கலைஞர், ஸ்டாலினை தவிர மற்றவர்களை அதிகம் விமர்சனம் செய்ததில்லை. இவ்வாறு அவர்களை விமர்சனம் செய்வதும் ஒருவிதத்தில் அவர்களுக்கு விளம்பரத்தை கொடுத்துவிடும் என்று அவர்கள் நினைப்பதுண்டு. ஆனால், அரசியலில் முதல் அடியை எடுத்துவைத்துள்ள அண்ணனை, முதல்வர் கடுமையாக விமர்சனம் பண்ணியது, அடுத்த தலைவர் யார் என்று தமிழக மக்களுக்கு அவர் அடையாளம் காட்டியுள்ளார் என்றே நாங்கள் கருத வேண்டியுள்ளது. முதல்வரின் எண்ணம்  விரைவில் நிறைவேறும்" என்கிறார்கள் உதயநிதி ஆதரவாளர்கள்.