இந்தியா முழுவதும் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக் கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம்ஆத்மி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்பட 6 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. பா.ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகள் கலந்து கொண்டன. பாஜக கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. சார்பில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ராஜ்யசபா அ.தி.மு.க. தலைவர் நவநீதகிருஷ்ணன் இருவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அமைச்சர் சி.வி. சண்முகம் புதன்கிழமை டெல்லி சென்றிருந்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் நடந்த அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சண்முகம் சென்றபோது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அனுமதிக்கவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வர இயவில்லை என்பதால், அ.தி.மு.க. சார்பில் தான் கூட்டத்துக்கு வந்து இருப்பதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சி.வி.சண்முகம் எவ்வளவு சொல்லியும் அதிகாரிகள் அவரது விளக்கத்தை ஏற்கவில்லை. பிரதமர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டம் மிக, மிக முக்கியமானது என்பதால் கட்சி தலைவருக்கு பதில் வேறு எந்த பிரதிநிதியையும் அனுமதிக்க இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கட்சியின் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தில் இருப்பவர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அவரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சி.வி. சண்முகம் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி விமானம் நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் உடனே சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய அமைச்சர் சி.வி.சண்முகம், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம். டெல்லியில் நடைபெறும் பணிகளை கவனிப்பது தமிழக அரசின் பிரதிநிதி தளவாய் சுந்தரத்தன் பணி. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவர் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதை தளவாய் சுந்தரம் கூறவில்லை. தளவாய் சுந்தரம் இதனை தெரிவித்திருந்தால், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருக்க வேண்டியதில்லை. டெல்லி சென்று அவமதிக்கப்பட்டிருக்கவும் வேண்டியதில்லை. இவர்தாங்க காரணம். இவருக்கு அங்க என்னங்க வேலை என்று தமக்கு ஏற்பட்ட அவமதிப்பு பற்றி குமுறியுள்ளார்.
பிரதமர் கூட்டிய இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தவிர அவைத் தலைவர் என்ற முறையில் மதுசூதனன் பங்கேற்க மத்திய பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோதி கடிதம் அனுப்பி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக மதுசூதனன் டெல்லி செல்ல இயல வில்லை. இதனால் பிரதமர் நடத்திய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.