Skip to main content

வைரஸுக்கு நடுவே சில வைரல்கள்! 2021 -ல் இதுதான் ட்ரெண்ட்...

Published on 30/12/2021 | Edited on 31/12/2021

 

most viral content social media 2021

 

என்னங்க, இப்பதான் உங்க காதலியை பார்த்த மாதிரி இருக்கா, இப்பதான் புதுசா வேலைக்கு சேர்ந்த மாதிரி இருக்கா, நேத்துதான் பசங்களோட புத்தாண்டு கேக் வெட்டிய மாதிரி இருக்கா..? ஆமாங்க நமக்கும் அப்படித்தான் இருக்கு. கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள ஒரு வருடம் டக்குனு போயிருச்சு...  சரி வாங்க அடுத்த வருஷமும் டக்குனு போறதுக்குள்ள போன வருஷத்துல நடந்த சில வைரல் சம்பவங்களை கொஞ்சம் திரும்பி பாப்போம்.

 

2021 புத்தாண்டு நமக்கு வழக்கமான ஒரு புத்தாண்டாக இருந்திருக்காது. வருஷம் தொடங்கும் போதே வேலைக்கு தட்டுப்பாடு... காரணம் கரோனா கட்டுப்பாடு... முக கவசம் அணிந்துகொண்டு நெருங்கிய நண்பர்களிடம் கூட தள்ளி இருந்தே பேசும் கஷ்டகாலத்தில் தான் இந்த ஆண்டை நாம் எல்லோரும் தொடங்கி இருந்தோம். வேகமாக பரவிய கரோனா, அதிக உயிர்பலி, அடுத்தடுத்த ஊரடங்கு என நாம் மனித உறவுகளை பிரிந்த தருணம் நிறைய இருக்கிறது. தடுப்பூசி  எனும் பேராயுதத்தால் கிட்டத்தட்ட கரோனவுடன் வாழ பழகிவிட்டோம். என்னதான் இந்த ஆண்டு கஷ்டங்களும் கவலைகளும் நிறைய இருந்தாலும் அதை மறக்க வைத்து கிச்சுகிச்சு மூட்டும் வகையில் பல சம்பவங்களும், சில சீரியஸான சம்பவங்களும் சமூக வலைதளங்களில் பெரிய பேசுபொருளானது. அந்தவகையில் இந்தாண்டு சமூக வலைதளங்களில் வைரலான நிகழ்வுகள் சிலவற்றை காண்போம்

 

'பாவ்ரி' பெண்;

 

most viral content social media 2021


சுதந்திர காலத்தில் இருந்தே இந்தியா பாகிஸ்தான் உறவுகள் அவ்வளவு இணக்கம் இல்லை. நாட்டின் எல்லை பிரச்சனைகளில் இரு நாட்டினருக்கு முரண்பாடுகள் நிறைய இருக்கிறது. ஆனால் அவ்வப்போது நடக்கும் சில சிறு நிகழ்வுகள் எல்லை தாண்டி பிரச்சனைகளை மறந்து சிரிக்கவும் சேரவும் வைக்கிறது. அப்படியான நிகழ்வு ஒன்று இந்த ஆண்டில் நடந்தது. பாகிஸ்தானை சேர்ந்த தானானீர் முபீன் என்ற பெண் தனது 4 நிமிட வீடியோ மூலம் இந்தியா பாகிஸ்தான் நாடுகளில் பிரபலமானார். தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற அவர் உணவு ஒய்வின் போது வீடியோ ஒன்றை எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.  அந்த வீடியோவில், ( Pawri ho rahi hai ) ”இது எங்கள் கார், இது நாங்கள், இதுதான் எங்கள் பார்ட்டி” எனக் கூறுவார். பார்ட்டி எனக்கூறும் இவரின் வித்தியாசமான உச்சரிப்பு அனைவரையும் கவர்ந்தது. இதனைத்தொடர்ந்து இந்த வீடியோவை வைத்து பல மீம்கள் உருவாக்கப்பட்டது. இதற்கு ஒரு படி மேலே சென்று இந்தியாவை சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவர் தனானீர் விடீயோவிற்கு மியூசிக் மாஷ் அப்பை உருவாக்கி வெளியிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, பல பிரபலங்களும் அதனை ரீல்ஸாக போட்டு லைக்ஸ்களை அள்ளினர்.

 

ரஸ்புடீன் டான்ஸ் :

 

most viral content social media 2021



கடந்த 1978 ஆம் ஆண்டு போனி எம் சிங்கிள் என்ற இசை குழுவால் வெளியிடப்பட்ட ஜெர்மனி பாப் பாடலான ரஸ்புடீன் பாடல் கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் கழித்து 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் வைரலானது. இதற்கு காரணம் வேற யாரும் இல்லைங்க கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவர்களான ஜானகி மற்றும் நவீன் ரசாக் தான். கரோனா காலத்தில் இவர்கள் தங்களின் மருத்துவ உடையில் இப்பாடலுக்கு அவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இவர்களின் இந்த நடனமும், மருத்துவ உடையும் இணையவாசிகளை கவனிக்க வைக்க, இளைஞர்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்ற தொடங்கினார்கள். இந்திய முழுவதும் ட்ரெண்டான இந்த ரஸ்புடீன் சேலஞ்ச், சில மாதங்கள் மருத்துவ மாணவர்களின் சொந்த பாடலாகவே மாறியது. இப்பாடல் சமூக வலைத்தளங்கில் பிரபலமாக மற்றோரு காரணமும் உள்ளது. கேரளாவை சேர்ந்த வலதுசாரி அமைப்பை சேர்ந்த ஒருவர், நவீன், ஜானகி நடனமாடிய ரஸ்புடீன் பாடல் வீடியோ லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதில் கடுப்பான மலையாளிகள் ஏகத்துக்கும் இப்பாடலுக்கு நடனமாடிய சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் செய்துவிட்டனர். அதேபோல வடஇந்தியாவில் பரவத்தொடங்கிய இந்த ரஸ்புடீன் சேலஞ்ச் அங்கேயும் சில காலம் வைரலாக இருந்தது.

 

மெனிகே மஹே ஹிதே :

 

most viral content social media 2021


இந்த ஆண்டில் மொழி இன பாகுபாடுகளை தாண்டி மற்றொரு பாடலும் அனைவரையும் கவர்ந்தது. நீங்கள் அந்த பாடலை ஒரு முறை கூட கேட்காமல் கடந்து சென்றிருக்க முடியாது. நண்பர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என அனைத்திலும் இந்த பாடலை பார்த்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி ரசிகர்கள் முதல் இந்திய திரை பிரபலங்கள் வரை பலரையும் கவர்ந்தது தான் 'மெனிகே மஹே ஹிதே' பாடல்.  ஒரு வருடத்திற்கு முன்பு ஆர்யன் மியூசிக் நிறுவனம் வெளியிட்ட இசை ஆல்பத்தில் இப்பாடல் இடம் பெற்றிந்தது. ஆனால் அப்போதெல்லாம் இந்த பாடல் பிரபலமாகவில்லை. யோஹானி என்ற சிங்கள மொழி பாடகி ஒருவர்  வித்தியாசமான உச்சரிப்பில் இப்பாடலை பாடி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட, காட்டுத்தீயாய் பரவி கடல் தாண்டியது இப்பாடல். இலங்கையை காட்டிலும் இந்தியாவில் இப்பாடல் பெரிய ஹிட்டடித்தது. அதன் விளைவாக பாலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகும் வாய்ப்பும் யோஹானிக்கு கிடைத்துள்ளது.

 

எஞ்சாமி பாடல்:

 

most viral content social media 2021


மற்ற நாட்டு பாடல்களை நாம் ட்ரெண்ட் செய்துகொண்டிருந்த இதே ஆண்டில் தான் நம் தமிழ் பாடல் ஒன்று உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆனது. சந்தோஷ் நாராயணன் இசையில் தெருக்குரல் அறிவு மற்றும் தீ இருவரும் இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் இந்திய ரசிகர்ளை தாண்டி உலக ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. வித்தியாசமான இசை, கவனம் ஈர்த்த வரிகள், கலர்ஃபுல்லான காட்சிகளுடன் வெளியான இப்பாடல் பட்டிதொட்டி எல்லாம் சக்க போடு போட்டது. பெருசுகள் முதல் சிறுசுகள் வரை இந்த பாடலை முணுமுணுக்காதா வாயே இருக்காது என்று சொல்லும் அளவிற்கு என்ஜாய் செய்தார்கள் இந்த எஞ்சாமி பாடலை.

 

ஸொமேட்டோ:

 

most viral content social media 2021



ஸொமேட்டோ சாப்பாடு டெலிவர் செய்யாததால் உண்டான ஒரு பிரச்சனை தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது இவ்வாண்டு. ஸொமேட்டோ செயலியில் விகாஷ் என்ற நபர் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த உணவு அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஸொமேட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்ட அவர், இதுதொடர்பாக புகாரளித்ததுடன் பணத்தைத் திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார்.  இந்த உரையாடலின் போது, சேவை மைய ஊழியர், இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்றும், எனவே அனைவரும் அதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இதன் ஸ்க்ரீன்ஷாட்களை விகாஷ் ட்விட்டரில் பதிவிட அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் ஸொமேட்டோ நிறுவனம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், #RejectZomato என்ற ஹாஷ்டேக்கும், #HindiIsNotNationalLanguage என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டாக தொடங்கியது. அதேபோல் #Hindi_Theriyathu_Poda என்ற 2020 -ல் ட்ரெண்டான ஹாஷ்டேக்கையும் திரும்ப தோண்டியெடுத்து ட்ரெண்ட் செய்தனர் இணையவாசிகள். இதனை தொடர்ந்து அந்நிறுவனத்தில் தலைவர் இச்செயலுக்கு மன்னிப்பு கோரியதையடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது.

 

தலிபான் :

 

most viral content social media 2021



உலக நாடுகளே பார்த்து மிரளும் அமெரிக்காவை மிரட்டிய தலிபான்கள் நேட்டோ படைகளும், ஐரோப்பிய படைகளும் இல்லாத நேரத்தில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை அகற்றி அமெரிக்கா அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சியை நிறுவியது. அப்போதிலிருந்தே ஆப்கானிஸ்தான் அரசு படைகளும் தலிபான்களும் மோதலில் ஈடுபட்டு வந்தனர். அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கப்படைகளும் ஐரோப்பியபடைகளும் களத்திற்கு வந்தனர்.  இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அறிவித்தார். இதனால் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். பழமைவாத தலிபான்கள் வசம் அதிகாரம் வந்துவிட்டதால் ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் அச்சமடைந்து, மூட்டை முடுச்சிகளுடன் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளில்  மிக முக்கியமான நிகழ்வும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிரித்தால் ஜெயில்:

 

most viral content social media 2021



கேக்கவே சிரிப்பா இருக்குல்ல... வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்னு சொன்ன காலம் போய் சிரிச்சாலே ஜெயிலுக்கு போவணும் என்ற வினோத நிகழ்வுகளும் இந்தாண்டில் நடந்தது. வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, 10 நாட்கள் துக்க அனுசரிப்பு தினமாக அறிவித்தது வடகொரிய அரசு. இந்த துக்க அனுசரிப்பு காலத்தில், சிரிப்பது மட்டுமின்றி மதுபானம் அருந்துதல், மளிகைப் பொருட்களை வாங்குதல், ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கும் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. உலகின் மர்ம தேசமான விளங்கும் வடகொரியாவின் இந்த முடிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. என்னதான் விஷயம் சீரியஸாக இருந்தாலும், சும்மா விடுவார்களா நம்ம ஊர் நெட்டிசன்கள், இதனையும் வைரலாக்கி சமூக வலைத்தளத்தை கிம் ஜாங் உன் மீம்களால் தெறிக்கவிட்டனர்.

 

மனிதம் போற்றும் மனிதன் :

 

most viral content social media 2021



பெரம்பலூரை சேர்ந்த பிரபு என்பவர் கார் ஓட்டுநராக இருந்து வருகிறார். கடந்த 9 ஆம் தேதி பிரபு தனது வீட்டின் அருகில் தெரு நாய்களால் கடிக்கப்பட்டு மரத்தில் குரங்கு ஒன்று மயக்க நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்தபிரபு மயங்கிய குரங்கை தனது மடியில் போட்டு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் கொடுத்து அதன் உயிரை காப்பாற்றினார். அதன் பின் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார். இதனை அருகில் இருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பிரபுவின் இந்த செயலை பார்த்து நடிகர் சூர்யா , சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். ஆனால், அவரால் முதலுதவி அளிக்கப்பட்ட அந்த குரங்கு மறுநாள் உயிரிழந்தது. இருப்பினும் குரங்கு தானே என்று பாரபட்சம் பார்க்காமல் மனிதம் போற்றிய அந்த மனிதனை அனைவரும் பாராட்டி தீர்த்தனர்.

 

ஒரே நேரத்தில் 10 குழந்தை:

 

most viral content social media 2021



கடந்த ஜூன் மாதத்தில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கோசியமே தாமர சித்தோலே என்ற 37 வயதான பெண் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டது. மேலும், கின்னஸ் புத்தகத்திலும் இந்த சாதனை இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. "என்னது ஒரே பிரசவத்தில் பத்து குழந்தைகளா" என இதனை பார்த்து வியப்படைந்த நெட்டிசன்கள் இவர் குறித்து இணையத்தில் தேட தொடங்கினர். ஆனால், இறுதியில் அந்த பெண் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளையும் பெற்று எடுக்கவில்லை என்றும் அந்த நேரத்தில் கற்பமாகவே இல்லை என்றும் செய்திகள் வெளிவந்தது. இப்படியாக ஃபேக் நியூஸையும் உண்மையும் நியூஸையும் கலந்துகட்டி இதனையும் ட்ரெண்ட் செய்துவிட்டனர் இணைய தலைமுறையினர்.

 

தங்கத்தை பகிர்ந்துகொண்ட தங்க மகன்கள் :

 

most viral content social media 2021



டோக்கியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வித்தியாசமான வரலாற்று நிகழ்வு ஒன்று நடந்தது. ஒலிம்பிக் 2020  தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியின் இறுதி சுற்றில் இத்தாலியன் ஜியான்மார்கோ தம்பேரி மற்றும் கத்தாரின் முடாஸ் எஸ்ஸா பார்ஷிமுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. இருவரும் 2.37 மீட்டர் உயரத்தை தாண்டி ஒரே புள்ளியில் இருந்தனர். இதனால் யாருக்கு தங்க பதக்கம் என்ற கேள்வி எழுந்தது.  அதனால்  வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் சுற்று தொடங்கியது. கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலும் இருவரும் தோல்வி அடைந்தனர். மீண்டும் வெற்றியாளர் யார் என்று தீர்மானிப்பதில் சிக்கல் எழுந்த நிலையில் நடுவர் இருவரிடமும் வந்து கடைசியாக ஒரு முறை தாண்டுகிறீர்களா என கேட்க, முடாஸ் எஸ்ஸா பார்ஷிம் தங்கப்பதக்கத்தை நாங்கள் பகிர்ந்து கொள்ளலாமா என நடுவரை பார்த்து கேட்டார். அதற்கு அவரும் கீரின் சிக்னல் கொடுக்க ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை, தங்க மகன்கள் இருவரும் பகிர்ந்து கொண்டனர். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை விளையாட்டு வீரர்களை தாண்டி பலரும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து இரு விளையாட்டு வீரர்களுக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர்.