Skip to main content

மீடியாக்காரர்களுக்கு வெடி வைக்கும் மோடி!

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
modi


 

புண்ய பிரஜுன் பாஜ்பாய், ஏபிபி நியூஸ் தொலைக்காட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பின்னுள்ள கதையை வெளிப்படுத்துகிறார்.

 

தி வயர் வலைத்தளத்துக்கு அளிக்கப்பட்ட பிரத்யேக செய்தியின் சுருக்கமான மொழிபெயர்ப்பு

 

ஜூலை 14, 2018, ஆனந்தா பஜார் பத்திரிகைக் குழுவுக்குச் சொந்தமான ஏ.பி.பி. தேசிய செய்திச் சானலின் தலைமை ஆசிரியரும் உரிமையாளரும் என்னுடன் ஒரு உரையாடலை மேற்கொண்டார்:

உரிமையாளர்: “நீங்கள் (உங்களது நிகழ்ச்சியில்) பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் தவிர்க்கமுடியாதா? அவரது அமைச்சர்களின் பெயரை எல்லாவிதத்திலும் குறிப்பிடுங்கள். நீங்கள் விரும்பினால் அரசின் கொள்கைகளில் உள்ள தவறுகள் எதுவானாலும் குறிப்பிடுங்கள், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரின் பெயரை வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் பிரதமர் மோடியின் பெயரை மட்டும் எங்கும் குறிப்பிடாதீர்கள்.

 

நான்: ஆனால் அனைத்து அரசாங்க திட்டங்களையும் பிரதமர் மோடிதான் அறிவிக்கிறார். ஒவ்வொரு துறையின் செயல்பாட்டிலும் தன்னை சம்பந்தப்படுத்திக்கொள்கிறார். ஒவ்வொரு அமைச்சரும் எந்தவொரு திட்டத்தையோ அல்லது அரசின் கொள்கையையோ பற்றிப் பேசும்போது பிரதமர் மோடியின் பெயரை உச்சரிக்கின்றனர். பிறகெப்படி நாங்கள் மோடியின் பெயரைத் தொடாமல் இருக்கமுடியும்?

 

 

 

உரிமையாளர்: நான் சொல்றேன் நிறுத்துங்க. கொஞ்ச நாட்களுக்கு இது என்ன பண்ணுதுன்னு பார்ப்போம். உண்மையச் சொல்லணும்னா நீங்க சரியான விஷயத்தைத்தான் பண்ணிட்டிருக்கீங்க. ஆனா கொஞ்ச காலத்துக்கு அதை விட்டுப்பிடிப்போமே.

 

எனது நிகழ்ச்சியான மாஸ்டர்ஸ்ட்ரோக், அவரது சானலின் மதி்ப்பை உயர்த்தியதை உரிமையாளர் ஒப்புக்கொண்டார். அவரது வார்த்தையில் சொல்வதானால், அடித்தட்டு மக்கள் வரை சென்று செய்தி சேகரிக்கப்படும் விதம், செய்தியறிக்கையின் ஊடே அரசாங்கக் கொள்கைகள் முழுக்க அலசி ஆராயப்படுவது, செய்தியாக்கம், கிராபிக்ஸின் தரம் இவையெல்லாம் இந்த சானலில் முதல்முறையாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

 

சானலின் செய்தியளிக்கப்படும் விதத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் உற்சாகமடைந்ததாகவும் உரிமையாளரும் தலைமை செய்தியாசிரியருமான அவர், விஷயங்கள் இதே விதத்தில் தொடருமானால், வெறுமனே பிரதமரின் பெயர் மட்டும் இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துமா என தொடர்ந்து கேட்டபடி இருந்தார்.

 

இந்த நீண்ட உரையாடலைத் தொடர்ந்து, பிரதமரின் பெயர் திரையில் உச்சரிக்கப்படக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

modi


 

நிலவும் அரசியல் சூழலில், அந்த உத்தரவைப் பின்பற்றுவது மிகவும் சிரமமான வேலையாகவே இருக்கும். உதாரணமாக, வளர்ச்சித் திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது என்ற அரசாங்க கூற்றையும் இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பற்றிய செய்தியை தயாரிப்பதாகக் கொள்வோம். பிரதமர் மோடி இந்த அரசாங்க திட்டங்களின் வெற்றி பற்றிக் கூறுவதைப் பற்றி முணுமுணுக்கக்கூட செய்யாமல், கள யதார்த்தத்தை மட்டும் காட்டினால், அந்தச் செய்தி எப்படித் தோற்றமளிக்கும்?

 

ஒருபக்கம், திறன் மேம்பாட்டு பயிற்சி முன்னெடுப்பானது, 2022-க்குள் 40 கோடி இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் இலக்கைக் கொண்டிருக்கிறதென்கிறார் பிரதமர். ஆனால், 2018 வரை இன்னும் 2 கோடி இளைஞர்களுக்குக்கூட பயிற்சியளிக்கப்படவில்லை என்பதே உண்மை. மேலும், திறன் மேம்பாட்டு மையங்கள் எங்கெல்லாம் திறக்கப்பட்டதோ, அங்கே 10-ல் எட்டு மையங்கள் செயல்படவில்லை என்பதே களயதார்த்தம். மாஸ்டர்ஸ்ட்ரோக் டீம், மேலிருந்து வரும் உத்தரவைப் பின்பற்றுவதென்றால், கள நிலவரத்தைச் சொல்லும் ஸ்க்ரிப்ட்டிலிருந்து பிரதமர் மோடியின் பெயரை அழித்துவிடவேண்டியிருக்கும்.

 

அடுத்த 100 மணி நேரத்துக்குள், மாஸ்டர்ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் மோடியின் படத்தைக்கூட பயன்படுத்தக்கூடாது எனும் இரண்டாவது உத்தரவு வருமென நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் வந்தது.

 

இந்தமுறை, உரிமையாளருடனான விவாதம், “இந்த அரசாங்கத்தின் நாள் நெருங்குகிறது என்பதன் பொருள் வெறும் மோடிதானா? பிரதமர் மோடியின் படத்தைக் காட்டாமல் செய்தியறிக்கை தயார் பண்ண வழியிருக்கிறதா” என்னும் கேள்வியுடன் ஆரம்பித்தது.

 

மோடி மைய ஊடகத்தின் தடுமாற்றம்
 

வேறொரு விதத்தில் சொன்னால், ஏ.பி.பி. நியூஸ் சானலின் உரிமையாளர்கள் எந்த இக்கட்டின் காரணமாக பிரதமர் மோடியின் பெயரையும் படத்தையும் காட்டாமலிருக்க அழுத்தம்தரப்பட்டார்கள்? உண்மையில், கடந்த நான்கு வருடங்களாக மோடியின் அரசின்கீழ் அனைத்தும் மோடியை மட்டுமே சுற்றிச் சுழன்றுவருகின்றன. இந்தியா போன்ற ஒரு நாட்டில், செய்தி ஊடகங்கள்  மற்ற அனைவரையும் தவிர்த்துவிட்டு அவரை மட்டுமே முன்னிறுத்துகின்றன. பிரதமரின் பேச்சுகளும் மேற்கோள்களும், அவரது படமும் செய்தி சானல்களில் காட்டப்படுவது அதிகரித்து, பார்வையாளர்களால் உறிஞ்சப்பட்டு ஒருவித போதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதன் விளைவு, செய்தி சானல்களின் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்கு பிரதமர் மோடி ஒரு அத்தியாவசியமாக ஆக்கப்பட்டிருக்கிறார்.

 

செய்தி சேனல்களைக் கண்காணிக்க 200 உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழு மூன்று நிலையில் செயல்படுகிறது. 150 உறுப்பினர்கள் சானல்களைக் கண்காணிப்பதில் மட்டுமே ஈடுபடுவார்கள். 25 உறுப்பினர்கள் அரசு என்ன விரும்புகிறதென வடிவம்தருவார்கள். மிச்சமுள்ள 25 பேர் இறுதியாக உள்ளடக்கத்தை மதிப்பிடுவார்கள். இந்த அறிக்கை அடிப்படையில், மூன்று இணைச் செயலாளர் நிலையிலான அதிகாரிகள் ஒரு அறிக்கையைத் தயார் செய்து தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சருக்கு அனுப்புவர். அதைப் பெறும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், செய்தி சானல்களின் எடிட்டருக்கு என்ன செய்யப்படவேண்டும், எப்படிச் செய்யப்படவேண்டுமென வழிகாட்டுதல்களை அனுப்புவார்கள்.

 

பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர்களால் புறக்கணிக்கப்படுதல்

ஒரு சானல் எப்போதும் மோடியின் ஆட்சியை நேர்மறை வெளிச்சத்தில் காட்டிக்கொண்டிருக்கமுடியாது. ஏதோ ஒரு சமயத்தில் எதிர்மறைத் தொனியிலோ அல்லது உண்மைகளின் அடிப்படையிலோ மோடியின் அரசாங்கம் வெளிப்படுத்தும் உண்மைகள் ஒரு பொய் என காட்டுவதாகக் கொள்வோம். உடனடியாக பா.ஜ. பேச்சாளர்கள் அந்த சானலின் நிகழ்ச்சிக்கு வருவதை நிறுத்திவிடும்படி கூறப்படுவார்கள். அதாவது அந்த சானல் நடத்தும் அரசியல் விவாதத்தில் பங்கேற்கமாட்டார்கள். இது ஏ.பி.பி. சானலுக்கு இந்த வருடம் ஜூன் மாதம் நடந்தது. சில நாட்களுக்குப் பின் பி.ஜே.பி. தலைவர்கள் சானலுக்கு கருத்துச் சொல்வதைத் தவிர்த்தனர். பிரதமரின் மன் கி பாத்தின் உண்மை மாஸ்டர்ஸ்ட்ரோக்கில் வெளிப்பட்ட அன்று, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களும் சானலிலிருந்து விலகியிருக்குமாறு கூறப்பட்டனர்.

 

modi


 

ஜூலை 9, 2018 நான்கு மணி. ஏ.பி.பி.யில் விவாதமொன்று போய்க்கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சார்புகொண்ட ஒரு பேராசிரியர் நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு போன்கால். உடனடியாக ஸ்டுடியோவைவிட்டு கிளம்புமாறு சொல்லப்படுகிறது. பதிலளித்துக்கொண்டிருந்த அந்தக் கனவான், எழுந்து அப்படியே வெளியேறிவிட்டார். நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பாகும்போதே இப்படி. அவருக்கு அழைப்பு வந்த கணம், அவரது முகவெளிப்பாடு, பயங்கரமான குற்றத்தை செய்யும்போது பிடிபட்டவரைப் போலிருந்தது. அச்சுறுத்தப்பட்ட மனிதனின் முகம் என நீங்கள் அதனைக் கூறலாம்.

 

 

 

ஜார்கண்டின், கோடாவில் வரவிருக்கும் வெப்ப மின்னுற்பத்தி திட்டம் குறித்து பிரத்யேக செய்தி மாஸ்டர்ஸ்ட்ரோக்கின் ஒரு பதிப்பில் வெளியான காலகட்டம் என்பதைக் குறிப்பிடுவது முக்கியமாகும். இத்திட்டம் அனைத்து விதிகளையும் வரன்முறைகளையும் மீறிய திட்டமாகும். அதானி குழுவுக்கு இத்திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக அந்தப் பகுதி விவசாயிகளின் துயரங்களை அந்த பிரத்யேக செய்தியறிக்கை கவர்செய்திருந்தது. அந்தத் திட்டத்துக்காக தங்கள் நிலங்களை விட்டுத்தராத விவசாயிகள் எப்படி மிரட்டப்பட்டனர் என்பதை எடுத்திருந்தோம். ஒரு விவசாயி கேமரா முன்பு, “அதானி குழுமத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி, நீங்க நிலத்தை வி்ட்டுப் போகலைனா நாங்க உங்களை உயிரோட புதைச்சுடுவோம்னாரு. நாங்க போலீஸ்ல ஒரு புகார்தர விரும்பினபோது, போலீஸ் சொன்னுச்சு: அதுல பயனில்லை. அவங்க செல்வாக்கானவங்க. பிரதமருக்கு நெருக்கமானவங்க”ன்னு.  

 

அந்த மாஸ்டர்ஸ்ட்ரோக் நிகழ்ச்சிக்கு மற்ற சராசரி ஷோவைவிட டி.ஆர்.பி. ஐந்து பாய்ண்ட் கூடியது. 12-ல் இருந்த டி.ஆர்.பி. ரேட்டிங் 17 பாய்ண்ட்டுக்கு உயர்ந்தது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராளுமன்றத்தில், ஊடகங்களின் குரலை அரசாங்கம் ஒடுக்குவதாக பிரச்சினையெழுப்பியபோது, தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர், “அந்த சானலுக்கு மாஸ்டர்ஸ்ட்ரோக் நிகழ்ச்சி எந்தவிதத்திலும் டி.ஆர்.பி. ரேட்டிங் அதிகரிக்க உதவலை. யாரும் அந்த நிகழ்ச்சியை பார்க்கவிரும்பலை. அந்த சானலே அந்த நிகழ்ச்சியை நிறுத்திடும்னாரு.”

 

ஜூலை 20-ல் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் லிங்க் மூலம் அவரது அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்த விவசாயிகளோடு பேசினார். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சந்திரமணி கெளசிக் என்ற பெண்ணிடம், அவரது விவசாய வருவாய் பற்றி பிரதமர் கேட்டார். தன் வருவாய் எப்படி இரட்டிப்பானதென அவர் விவரித்தார். சத்தீஸ்கர் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் ஒன்று. அதிலுள்ள கான்கர் மாவட்டம், அந்த மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளப்படி இன்னும் பின்தங்கிய பகுதி. பிறகெப்படி சாத்தியமென சந்தேகம் எழுவது இயல்பான ஒன்று.

 

நிருபரை அங்கே அனுப்பினோம். பதினான்கு நாட்களுக்குப் பின் அந்தப் பெண் எப்படி டெல்லி அதிகாரிகளால், பிரதமர் கேட்கும்போது என்ன சொல்லவேண்டுமென பயிற்றுவிக்கப்பட்டாள் என்பதை நாங்கள் வெளிப்படுத்தினோம். இந்த செய்தி, சத்தீஸ்கரில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சத்தீஸ்கரில் ஐந்து மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது என்பதை மனதில் வைத்து அந்தப் பெண் அப்படி பயிற்றுவிக்கப்பட்டு பேசவைக்கப்பட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜூலை 9-ல், அந்த செய்தி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து, அரசின் அச்சுறுத்தும் மெளனமே, அது ஏதோ செய்யுமென்பதன் அடையாளமாகத் திகழ்ந்தது. அன்றைக்கு இரவே, ஊடக கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவர் போன்செய்து, மாஸ்டர்ஸ்ட்ரோக்கின் சமீபத்திய செய்தி அரசாங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதென குறிப்பிட்டார்.

 

அதற்கான சமிக்ஞையாக, அந்த செய்திவந்த அடுத்த இரவு, ஏ.பி.பி.யின் சாட்டிலைட் லிங்க் முதன்மை நிகழ்வு நேரத்தில் குறும்புசெய்யத் தொடங்கியது. இந்த இடையூறு ஒரு மணி நேரத்துக்குத் தொடர்ந்தது. பார்வையாளர்கள் மாஸ்டர்ஸ்ட்ரோக் பார்ப்பதிலிருந்து தடுக்கப்பட்டு, வேறு சானலுக்கு மாறச் செய்யப்பட்டனர். சரியாக 10 மணிக்கு சாட்டிலைட் லிங்க் பிரச்சினை சரியானது. இது ஏ.பி.பி.க்கு பலத்த அடி. தலைமைச் செய்தியாளரும் உரிமையாளரும், தொழில்நுட்பக் குழுவை பிரச்சினையின் மூலமென்ன என கண்டறியச்சொன்னார். பலனில்லை. சில நாட்களுக்கு இந்தப் பிரச்சினை தொடர்ந்தது.

 

 

 

அடுத்து, பல்வேறு விளம்பரதாரர்கள் பெயரில்லாத மூலத்திலிருந்து இந்த சானலுக்கான விளம்பரங்களை நிறுத்துமாறு தகவல்களைப் பெறுவதாக தெரியவந்தது. பதினைந்து நாட்கள் ஹிந்தி சானல் மட்டுமல்லாது, எங்களது பிராந்திய மொழி சானல்களும் சாட்டிலைட் லிங்க் பிரச்சினையால் பாதிக்கப்பட்டன. அதே நேரத்தில் சில விளம்பரதாரர்கள் தங்களது விளம்பரங்களைத் திரும்பப்பெற்றனர்- தனது பொருட்களை விற்க, வெளிநாட்டு ப்ராண்டுகளோடு ஒப்பிட்டு, தனது சுதேசி பிராண்டின் ஆற்றலையும் பலத்தையும் விளம்பரம் செய்யும் பெரிய விளம்பரதாரர், நொடிப்பொழுதில் ஏ.பி.பி.க்கான விளம்பரங்களை நிறுத்தினார்.

 

மக்கள் உங்களது சானலை அதிகபட்சம் பார்வையாளர்கள் கொண்ட ஸ்லாட்டான 9- 10 மணிக்கு பார்க்கமுடியாமல் போனால், டி.ஆர்.பி.யில் சரிவு ஏற்படுவதுதான் முடிவு.

இந்த நீண்ட கதையின் முடிவும் சுவாரசியம் குறைந்ததல்ல. தலைமைச் செய்தியாசிரியரும் உரிமையாளரும் உங்கள்முன் கைகளைக் கட்டியபடி, என்ன செய்யலாம் என உங்களைக் கேட்கிறார். இந்தச் சூழலில், நீங்கள் என்ன செய்யமுடியும்- ஒன்று விடுப்பில் போகலாம், அல்லது பணியைவிட்டு விலகலாம். அதிசயத்திலும் அதிசயம், நான் என் பணிவிலகலைச் சமர்ப்பித்ததும், பதஞ்சலி விளம்பரங்கள் திரும்பவும் வரத்தொடங்கின. முன்பு மாஸ்டர்ஸ்ட்ரோக் நிகழ்ச்சிக்கு 15 நிமிடங்களுக்கு விளம்பரம் வரும். இது பிரச்சினையின்போது மூன்று நிமிடங்களாக குறைந்தது. நான் விலகியதும் அது 20 நிமிடங்களாக அதிகரித்தது. நான் ஆகஸ்ட் 2-ஆம் தேதி பணிவிலகினேன்.  அன்றைக்கு இரவே சாட்டிலைட் லிங்க் பிரச்சினை சரியானது.

 

 

 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.