நடிகர் ராஜேஷ் அவர்கள் கலை, இலக்கியம், தமிழர்களின் வாழ்வியல், பிரபலங்களின் அறியாத பக்கம், அவர்களுடனான தன்னுடைய நெருக்கம், ஜோதிடம் எனப் பல்வேறு தலைப்புகளில் நம்மோடு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நடிகர் மைக் மோகனின் உயர்ந்த குணத்தையும், அவருடனான தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்த செய்தியில் ஒரு சிறு பகுதி....
நடிகர் மைக் மோகன் என்னுடைய காணொளிகளை வலையொளியில் பார்த்துவிட்டு, தொலைபேசியில் அழைத்து மிகவும் பாராட்டினார். மேலும் அவரது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார். நாங்கள் பழகிய காலம் குறித்து மிகவும் சிலாகித்து பேசினார். இதுவரை அவருடன் இணைந்து நான் வெறும் இரண்டு படங்கள் தான் நடித்துள்ளேன். நேரில் உட்கார்ந்து பேசும்போது அவ்வளவு ஆத்மார்த்தமாக பேசுவார். என்னுடைய திருமணத்திற்கும், என்னுடைய மகள் திருமணத்திற்கும் நேரில் வந்தார். எம்.ஜி.ஆர் அவர்களின் இறுதி சடங்கின் போது, "எப்படி ராஜேஷ் அனைத்து திருமணம் மற்றும் மரண நிகழ்ச்சியில் உங்களால் கலந்து கொள்ள முடிகிறது. அதற்கான நேரத்தை எப்படி ஒதுக்குகிறீர்கள்" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
"இது என்னுடைய அப்பா, அம்மா கொடுத்த அறிவுரை. திருமண நிகழ்ச்சிக்கு யார் அழைத்தாலும் போய் விடு. நம் வீட்டு நிகழ்ச்சிக்கு அவர்கள் வந்திருந்தால் அவர்கள் அழைக்கவில்லை என்றாலும் சென்று, அவர்களை வாழ்த்திவிட்டு அவர்கள் நமக்கு என்ன தொகை மொய்யாக எழுதினார்களோ அதை எழுதிவிட்டு வா என்று என்னிடம் அடிக்கடி கூறுவார்கள் . அதைத்தான் நான் இன்று வரை பின்பற்றுகிறேன். எந்தவொரு மரணமாக இருந்தாலும் தவறாமல் சென்று, கலந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய தாத்தா கண்டிப்போடு என்னிடம் கூறியுள்ளார். கல்யாணத்திற்கு செல்லவில்லை என்றால் கூட நேரில் சென்று அடுத்து முறை சொல்லிவிடலாம். ஆனால் மரணத்திற்கு செல்லவில்லையென்றால் மேலோகத்தில் தான் சென்று சொல்ல முடியும். அதனால், அன்று செல்ல முடியாவிட்டாலும் கூட முடிந்த அளவுக்கு விரைவில் அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிவிட வேண்டும். ஆகையால் தான் எந்த அழைப்பிதழ் வந்தாலும் அந்த நிகழ்ச்சியில் நான் தவறாமல் கலந்துகொள்வேன்..."