Skip to main content

முற்றிலும் செவிதிறன் போனபோதிலும் இசையமைத்த மேஸ்ட்ரோ! 

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

beethoven

 

 

உலகம் போற்றிடும் இசை மாமேதைகளில் ஒருவர், பலருடைய துயரை தனிமையை மறக்கடிப்பவர், லுட்விக் வான் பீத்தோவன் என்ற பெயரைகொண்ட மேஸ்ட்ரோ. கடந்த 1770ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்போது ஜெர்மனியாக இருக்கும் பகுதியில் பிறந்தவர். இவர் பிறந்த தேதி அறியப்படவில்லை. ஆனால், ஞானஸ்நானம் தரவுகளின்படி டிசம்பர் 16ஆம் தேதி என்று சொல்லப்படுகிறது. 

 

இசை குடும்பத்தில் பிறந்த பீத்தோவனின் இசை திறமை என்ன என்பது அவருடைய தந்தைக்கும் தாத்தாவுக்கு சிறு வயதிலேயே புரிந்திருக்கிறது. அவருடைய நான்கு வயதிலிருந்தே மியூசிக் கீபோர்ட் வாசிக்க தொடங்கிவிட்டார். தரையில் இரண்டடிக்கு டேபிள் வைத்து அதில் மேல் ஏறி நின்றால்தான் அப்போது அவரால் கீயை தொட்டு வாசிக்கவே முடியும். வயலின் வயலோ எனப்படும் இசைக்கருவிகளையும் வாசிக்கத் தொடங்கிவிட்டார். 

 

பீத்தோவன் சிறுவயதில் இசை பயிற்சி எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரது கண்டிப்பான தந்தைதான். ரொம்பவே அழுத்தம் கொடுத்து கண்டிப்புடன் இசையை பீத்தோவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். லுட்விக் பள்ளி படிப்பை அவரது குடும்பத்தினர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இசைத் துறையில் பீத்தோவன் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக 10 வயதிலேயே பள்ளிப் படிப்பும் நிறுத்தப்பட்டது. இதனால் பெருக்கல் வகுத்தல்கூட தெரியாமல் போனது. தனது 7வது வயதில் மேடையில் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இந்த குட்டி ஜீனியஸை இசை ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வளர்த்தனர். 12வது வயதில் அனைவராலும் கவனம்பெற்ற இசைக்கலைஞராகினார். சிறு வயது முதலே கல்லீரல் நோய், பெருங்குடல் அழற்சி, வாதநோய், தோல் நோய்கள், கண், இதய பாதிப்பு, என பலவற்றால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், அவரது இசைப் பயணம் மட்டும் சீராகத் தொடர்ந்தது.

 

பீத்தோவனுக்கு 16 வயது இருக்கும்போது மேற்கத்திய இசையில் சிறப்பாக விளங்கிய ஆஸ்திரியாவின் தலைநகராக வியன்னாவுக்கு சென்றுவிட்டார். ‘சிம்பொனி இசையின் தந்தை’ என்று போற்றப்பட்ட ஜோஸப் ஹைடனிடம் இசை கற்றார். இதுமட்டுமல்லாமல் அங்கு மோசார்ட் என்னும் மற்றொரு இசை மேதையிடம் பீத்தோவன் பணியாற்றியதாகவும் பேச்சுகள் உண்டு. பீத்தோவன் இசைத்துறையில் ஒரு நாள் ஜொலிப்பார்’ என்று மோசார்ட் தனது நண்பர்களிடம் சொன்னதாகவும் சில தகவல்கள் சொல்கின்றன.

 

ஆனால், இது உண்மையானது. பீத்தோவனின் 45 வருட இசை வாழ்க்கையில் 700க்கும் மேலான இசை குறிப்புகளை எழுதியுள்ளார். அதில் ஒன்பது சிம்பொனி, 32 பியானோ சோனாடோஸ் மற்றும் ஒரு ஒபேரா உள்ளிட்டவை அடங்கும். அவருடைய முப்பது வயதிற்குள் செவிதிறன் குறைந்துவிட்டபோதிலும் இசையமைத்துகொண்டே இருந்தார். அவருடைய காதினுள் ஒலித்துகொண்டிருக்கும் அந்த ஒலியை கேட்காமல் தவிர்ப்பதற்காக பெரும்பாலும் பஞ்சு வைத்து அடைத்திருக்கிறார், பொதுவெளிக்கே வராமல் வீட்டிலேயே அடைபட்டிருந்திருக்கிறார். அவருடைய நாற்பத்தி ஐந்தாவது வயதில் முற்றிலுமாக செவிதிறனை இழந்துவிட்டார் பீத்தோவன். ஆனால் அதுவும் அவருடைய இசை உருவாக்கத்திற்கு தடையாக இல்லை. மனதிலேயே இசையமைத்து அதை இசைக்குறிப்பாக எழுதிவைத்துள்ளார். பயன்படுத்தும் பியானோவால் தரையில் உருவாகும் அதிர்வுகளை உணர்ந்து இசையை கேட்டு க்ளாஸிக் இசைகளை உருவாக்கினார் பீத்தோவன்.

 

பீத்தோவனின் ஒன்பதாவதும் இறுதி சிம்பொனியுமான ‘ஓடே டு ஜாய்’ என்னும் இசையை அவர் மேடையில் அரங்கேற்றியபோது, அதை ரசித்து கொண்டாடிய மக்களின் கைதட்டல் ஓசையை பீத்தோவனால் கொஞ்சம் கூட அவரால் கேட்கமுடியவில்லை. அதை பீத்தோவனால் பார்க்கதான் முடிந்தது. அவருடைய இறுதிகட்டத்தில்  செவிதிறன் முற்றிலுமாக குறைந்துவிட்டதால் தனது ரசிகர்களிடம் நோட்டு புத்தக்கத்தில் எழுதிதான் உரையாடியுள்ளார் இசைமேதை பீத்தோவன். இதுபோல அவருடைய ரசிகர்களிடம் உரையாடிய 400 டைரிகளை சேகரித்து வைத்துள்ளார். இப்படிப்பட்ட மனிதன் பிறந்து 250 ஆண்டுகளாகிவிட்டன. 

 

பீத்தோவனை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள், அதுகூட அவசியமில்லை, அவரது இசையை கேட்க தொடங்குங்கள். உங்கள் வாழ்வில் எத்தனை துயர் இருந்தாலும் எவ்வளவு வெறுமை உங்களை ஆட்கொண்டாலும் அதிலிருந்து விலகி மன அமைதி கிடைக்க செய்து புத்துணர்ச்சி ஊட்டச் செய்வார் பீத்தோவன். 

 

 

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

இசை நிகழ்ச்சியில் தாக்குதல்; சிதறிக் கிடந்த 260 உடல்கள்;கண்ணீர் வடிக்கும் எல்லை மக்கள்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Assault at concert venue; 250 bodies scattered; Tearful Israel

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், நேற்று முன்தினம் காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இருதரப்பும் மோதி வரும் சூழலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 260 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஆங்காங்கே மனித உடல்கள் சிதறிக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை மீட்ட அரசு சாரா அமைப்பினர் இது குறித்து தங்களது வேதனையைப் பதிவு செய்துள்ளனர்.

 

ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்த சூப்பர் நோவா இசை நிகழ்ச்சியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட புத்தர் சிலையின் கீழ் நடனமாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 'அமைதிக்கான இசை நிகழ்ச்சி' என்று நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் இஸ்ரேல் குடிமக்களைத் தவிர வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டார்கள். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலேயே சிறு விமானம் போன்ற கருவிகள் மூலமாக ஹமாஸ் குழுவினர் எல்லையைக் கடந்து இசை நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் இறங்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொன்றனர் எனவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.