Skip to main content

வெறுப்பிடம் அன்பைக் கேட்டவர்!

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

 

ஏப்ரல் 4 - மார்ட்டின் லூதர் கிங் நினைவு நாள் 

 

Martin luther


மைக்கேல், மார்ட்டின் ஆனார் 

ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த கருப்பின மக்களின் குரலாக இருந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ஜனவரி 15 ஆம் தேதி 1929 ஆம் ஆண்டு  அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் பிறந்தார். இவரின் நிஜப்பெயர் மைக்கேல் லூதர் கிங். பின்னர் தனது தந்தையின் பெயரில் உள்ள மார்ட்டினை தனது பெயருடன் இணைத்து மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் என்று மாற்றிக்கொண்டார். இவரது தாத்தா அட்லாண்டாவில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர். லூதர் கிங் சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்று பின் சமயக்கல்வியை முடித்து அலபாமாவில் உள்ள டெக்ஸ்டர் அவென்யூ பாப்டிஸ்ட் சர்ச்சின் போதகர் ஆனார். 1955ஆம் ஆண்டு பாஸ்ட்டன் கல்லூரியில் சந்தித்த கோரட்டா ஸ்காட்டை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்

காந்தியின் மாணவர் 

அமெரிக்கா 20 ஆம் நூற்றாண்டில் வளர்ந்த நாடாக தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுவந்தாலும் நிற வேற்றுமை என்ற கொடிய நோய் அமெரிக்காவை தாக்கியிருந்தது. தன் நாட்டில் வாழும் மக்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அதற்கு தெரியவில்லை. கருப்பின மக்களை ஒதுக்கி வைத்து அவர்களைத் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தியது. உணவகங்கள், பேருந்துகள் என எங்கும் தனியிடத்தில் ஒதுக்கியே வைத்திருந்தது. அதனை மீறினால் சிறைதண்டனை வழங்கியது. கருப்பின மக்களும் தங்களின் மீது தொடுக்கப்பட்ட இன ரீதியான தாக்குதலை பொறுத்துக்கொண்டார்கள். 1955ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி ரோசா பார்க் என்ற கருப்பின பெண்மணி பேருந்தில் பயணம் செய்தபொழுது, பேருந்தில் ஏறிய வெள்ளை இனத்தவர்கள் அமர இடமில்லை என்று ரோசா பார்க்கை பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டனர். அது வரை அமைதியாக இருந்த கருப்பினத்தவர்கள், இந்த நிகழ்வை எதிர்க்கும் வகையில் சுமார் ஐம்பதாயிரம் பேர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தியது போலீஸ்.
 

martin luther king



தனது இனமக்களின் மீது இவ்வாறு நடத்தப்படும் தாக்குதலுக்காகவும், நிற வேறுபாடின்றி சம உரிமைக்காக பல போராட்டங்களை அமைதியாகவும், அறவழியிலும் நடத்தினார் லூதர் கிங். இவர் அறவழிப்போராட்டங்களை நடத்தியதற்கு காரணம் மகாத்மா காந்தியின் மீதும் அவரின் அறப்போராட்டத்தின் மீதும் மிகுந்த பற்று வைத்திருந்ததே. அதனால் தன் வீட்டில் காந்தியின் படத்தை வைத்து வணங்கினார். காந்தியடிகளின் அறப்போராட்டத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக 1959 ஆம் ஆண்டு இந்தியா வந்து காந்தியடிகள் பழகிய தலைவர்களுடன் அவரைப் பற்றி தெரிந்து கொண்டார். அதற்காக ஒரு மாத காலம் இந்தியாவிலிருந்தார் லூதர் கிங். இந்த அமைதிப்போராட்டங்களே அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அதனால் லூதர் கிங்கிற்கு கொலைமிரட்டலும், வீட்டின் முன் குண்டு வீச்சும் நடைபெற்றது. ஆனால் இதில் எதற்கும் அஞ்சவில்லை லூதர் கிங்.

எனக்கொரு கனவு உண்டு 

1963 ஆம் ஆண்டு வாஷிங்டனில் மார்ட்டின் லூதர் கிங் மிகப்பெரிய அமைதிப் பேரணியை நடத்தினார். அதில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் கலந்துகொண்டனர். அதில் லூதர் கிங் பேசிய உரை, மிக பிரபலமானது, அனைவரையும் யோசிக்க வைத்தது. அந்த உரையில் லூதர் கிங் கூறியது "எனக்கொரு கனவு உண்டு. ஒரு நாள் இந்த தேசத்தில் என் நான்கு பிள்ளைகளும் அவர்கள் தோல் நிறத்தின் படி அல்லாமல் குணத்தின் படி மதிப்பிடப்பட வேண்டும். என்றாவது ஒருநாள் வெள்ளை நிறத்து பிள்ளைகளும், கருப்பின பிள்ளைகளும் ஒருவரோடு ஒருவர் கைகளை பிடித்துக்கொண்டு நடக்க வேண்டும்" என்றார். இந்த உரை வெள்ளையர்களையும் கவர்ந்தது. 1964ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. லூதர் கிங்கின் தொடர் போராட்டத்தின் காரணமாக 1965 ஆம் ஆண்டு கருப்பினத்தவருக்கு அமெரிக்க அரசு ஓட்டுரிமை வழங்கியது. வெள்ளை இனத்தவர்களும், கருப்பினத்தவர்களும் சமம் என்ற மனித உரிமை சட்டத்தை பிறப்பித்தது. மார்ட்டின் லூதர் கிங் தனது இயக்கத்தில் அனைத்து இனத்தவர்களையும் சேர்த்துக்கொண்டார். அனைவரது மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்புண்டு என்று நம்பினார் லூதர் கிங்.

 

martin at gandhi's memorial

 

காந்தி நினைவிடத்தில் 
 

மரணமும் காந்தி போல 

டென்னிசியில் நடைபெறவிருந்த துப்புரவு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 3 மாலை அங்கு சென்று ஹோட்டலில் தங்கியிருந்து, மறுநாள் ஹோட்டலின் பால் கனியில் நின்று கொண்டிருந்தபொழுது வெள்ளை இன தீவிரவாதி ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியின் வழியில் அகிம்சை வழியில் போராடி வெற்றியை வாங்கிக்கொடுத்த லூதர் கிங்கிற்கும், காந்தியைப் போலவே துப்பாக்கியினால் சுட்டுக்கொல்லப்பட்டார் லூதர் கிங். இதனால் லூதர் கிங்கை கருப்பு காந்தி என அழைத்தனர்.1983ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாவது திங்கள் கிழமை 'மார்ட்டின் லூதர் கிங்' தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது அன்று அரசு விடுமுறையாகும்.

அவரது கனவு இன்று ஓரளவு நனவாகிவருகிறது. காண்பதற்கு முன்பே கண்கள் மூடிவிட்டார்.