அமித்ஷாவை கலைஞர் அஞ்சலி நிகழ்ச்சிக்கு அழைக்கலாமா என்ற குரல் இப்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அவரை அழைத்ததன் மூலம் திமுக பாஜக கூட்டணிக்கு அடித்தளம் போடுகிறதா? காங்கிரஸை மிரட்டுகிறதா என்றெல்லாம் விவாதங்கள் தூள்பறக்கின்றன.
திமுகவுக்குள்ளேயே ஒரு குரூப் அமித்ஷாவை அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். கலைஞர் உயிரோடு இருந்தவரை யாரையும் தனக்கு எதிரியாக நினைத்தவரில்லை. அவரை கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட மறுநாள் அவரை அவருடைய இல்லத்தில் நேரடியாக சந்திக்க முடியும் என்ற இலகுத் தன்மையை கடைப்பிடித்தவர் கலைஞர்.
அவருக்கான அஞ்சலிக்கூட்டத்தில் யாரையும் அழைக்காமல் விடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. அந்த வகையில்தான் கலைஞருக்கான ஊடகவியலாளர் அஞ்சலிக் கூட்டத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
அதுபோலத்தான் அரசியல்தலைவர்கள் அஞ்சலி்க் கூட்டத்திற்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. அவர்களில் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஒருவர். அமித் ஷாவை அரசியல் ரீதியாக எதிர்ப்பதில் திமுக முன்னோடியாகவே இருந்திருக்கிறது. இப்போது அஞ்சலிக் கூட்டத்திற்கு அழைக்க வேண்டிய கடைமையை திமுக சரியாக செய்திருக்கிறது. அதற்கு வருவதும் வராமல் இருப்பதும் அமித் ஷாவின் முடிவு. இதை ஏன் இவ்வளவு பெரிய விவாதமாக்குகிறார்கள் என்பது புரியவில்லை.
கலைஞர் அஞ்சலிக் கூட்டத்தில் கலைஞரைப் பற்றி அமித் ஷா என்ன பேசுகிறார் என்பதும், ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்பதும்தான் முக்கியம். மாறாக தனிப்பட்ட அரசியல் நாகரிக நடவடிக்கைகளையும் தேர்தல் அரசியல் நடவடிக்கைகளையும் இணைத்து குழப்பிக் கொள்வது தவறு.
ஆட்சிக்கு வரக்கூடிய பலம் உள்ள கட்சிகள், மத்தியில் ஆளுங்கட்சியாக வரக்கூடிய கட்சிகளைப் பகைத்துக் கொள்வதோ, எதிரி மனப்பான்மையோடு அணுகவதோ ஆபத்து என்பதை உணர்ந்தவர் கலைஞர். அதற்காக, எம்ஜியார் மாதிரி கும்பிடுவதோ, ஜெயலலிதா மாதிரி அளவுக்கதிகமாக பகைத்து காரியங்களைக் கெடுத்துக் கொள்வதோ, திமுகவிடம் இருக்காது. தமிழக நலன்களுக்காக உரிமைகளை பேச்சுவார்த்தை மூலம் பெறவேண்டும் என்று நினைக்கிற கட்சி.
எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளைப் போல நடத்துவது திமுகவுக்கு என்று பழக்கமே இல்லை. பாஜகவினர் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு திமுகவினர் செல்வதைப் போலவே திமுகவினர் வீடுகளுக்கும் பாஜக உள்ளிட்ட மற்ற கட்சியினர் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் அமித் ஷாவை கலைஞர் அஞ்சலிக் கூட்டத்திற்கு அழைத்ததை அரசியலாக்குவதில் அரசியலாக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.
இதில் மேலும் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், பதிவுபெற்ற அனைத்து தேசிய, மாநில கட்சிகளுக்கும் கலைஞர் அஞ்சலிக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.