மன்னராட்சி காலத்தில் மன்னர்கள், வீரர்கள் போக்குவரத்துக்கு படையெடுத்து செல்ல குதிரைகள், யானைகள் பயன்படுத்தினார்கள். ராணிகள், ஞானிகள் செல்ல பல்லக்கு பயன்படுத்தப் பட்டது. பழக்கப்பட்ட விலங்கினங்கள் சாரதிகளாகின. மனிதர்களும் பல்லக்கு தூக்கும் விலங்குகளானார்கள். காலப்போக்கில் சாதாரண மனிதர்களும் மாடுகளை பழக்கி வண்டிகளில் பூட்டி பயணம் செய்தனர்.
மிட்டா மிராசுகள் கூட்டு வண்டி வில்லு வண்டிகளில் பயணித்தனர். சாதாரண மனிதர்கள் கால்நடையாகவும், பிறகு மாட்டு வண்டிகளில் பயணித்தனர். இப்படி மனிதர்கள் புலம் பெயர்ந்தனர். போக்குவரத்து சாதனங்கள் ஆங்கிலேயர் காலத்தில்தான் மாறின. குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகள், மோட்டார் வண்டிகள் மூலம் பயணிக்க ஆரம்பித்தனர். கிராமங்களில் 1960 களில் சைக்கிள் வாங்கி ஓட்டியவர்கள் செல்வந்தர்கள். அப்படிப்பட்ட சைக்கிள் ஓட்டும் அதிசயத்தை தாத்தாக்களும், பாட்டிகளும் கன்னத்தில் கை வைத்து வியந்து பேசிக்கொன்டனர். சிறுவர்களோ அந்த அதிசய வாகனத்தை கும்பல் கும்பலாக வேடிக்கை பார்த்தனர்.
கிராமங்களில் திருமணங்கள் நடக்கும்போது பல்லக்கில் மணமக்களை வைத்து தெருக்களில் பவனிவந்தனர். அடுத்து குதிரை பூட்டிய சாரட்டுவண்டிகள், திறந்த வெளி மாட்டு வண்டிகள், ஆங்கிலேய துறைகள் பயன்படுத்திய மோட்டார் வாகனங்கள் பவனி வந்தன. சுதந்திரத்திற்க்கு பிறகு இந்திய செல்வந்தர்கள் கைவசம் ஆடம்பர வாகனங்கள் வலம் வந்தன. அதன் பிறகு மோட்டார் கார்கள் எப்போதாவது அத்திபூத்தார் போல கிராமங்களை நோக்கி வந்து விட்டால் போதும், மக்கள் வானத்தில் பறக்கும் தட்டு கீழே இறங்கி வந்து விட்டது போன்று அதிசயமாகப் பார்த்தனர்.
அம்பாசிடர்கார்கள் கிராமங்களில் தென்பட ஆரம்பித்த காலத்தில் சிறுவர் சிறுமியர் அந்த கார்களின் பின்னால் தொட்டு பார்க்க துரத்திக்கொண்டு ஓடினார்கள். அவர்கள் தொல்லை தாங்காத கார் முதலாலிகள் கார்களின் பின்பக்கம் முள் செடிகளைவைத்து கட்டிக் கொண்டு பறந்தனர். அப்படி அதிசயப் பொருளான கார்களின் இன்றைய நிலை வேடிக்கையாகவும், கேளிக்கையாகவும் உள்ளன.
பெரிய பெரிய கண்ணாடி ஷோரூம்களில் பளபளக்கும் வண்ண விளக்குகள் வெளிச்சத்தில் கார்களை காட்டி மயக்கி விற்பனை செய்த காலம் போய், இப்போது தெருவுக்கு தெரு கார் வாங்கலையோ கார் என கூவி கூவி விற்கிறார்கள்.
கிராம தெருக்களில் காய் வாங்கலையோ காய், வெண்டைக்காய், கத்ததரிக்காய், மிளகாய், வெங்காயம் என கூடைகளில் சுமந்தப்படி கூவி கூவி விற்றவர்கள் இப்போது தள்ளு வண்டிகளில் விற்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
அந்த காய்கறி போல இன்றைக்கு கார்களையும் தெருவில் நிற்பாட்டி தள்ளுவண்டிகளுடன் சமமாக நிறுத்தி கூவி கூவி விற்க்கும் நிலை பார்த்து சுவாரஸ்யமாக பேசி கொண்டிருந்த பெரியவர்கள் பெரியசாமி, கலியமூர்த்தி ஆகிய இருவரிடம் கேட்டோம்.
அவர்களோ அதோபாருங்கள் என்று டீக்கடையில் இருந்தபடியே கைகாட்டினார்கள். அங்கே தள்ளுவண்டியில் கொய்யாப் பழங்களை விற்பனை செய்யும் வண்டியும், அதன் அருகே கார் விற்பனையும் நடந்து கொண்டிருந்தன. கொய்யா பழம் வாங்க பலர் முன்வந்தனர். ஆனால் கார் நின்றதை யாரும் வேடிக்கை பார்க்க கூட முன்வரவில்லை. திரும்பி பார்க்கவில்லை. கார்வி ற்பனை பிரதிநிதிகள் தெருவில் போவோர் வருவோர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கார் விற்பனை செய்வது வேடிக்கையாக உள்ளது. கிராமங்களில் அதிசய வாகனமாக பார்த்து வியந்த கார்கள் இன்று தெருவுக்கு விற்பனைக்கு வந்து விட்ட அவல நிலையில் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. காரும் கத்திரிக்காயும் தெருவிலேயே கூவி விற்கும் நிலை வந்துவிட்டது. ஐயோ பாவம் கார் முதலாளிகள்.
இதற்கு காரணங்கள் நிறைய இருந்தாலும், வீட்டுக்கு வீடு மாடுகள் வளர்கப்பட்டு வீட்டு வாசல்களில் கட்டப்பட்டிருந்த காலம்மாறி இன்று டூ விலர்களும் கார்களும்தான் வீட்டு வாசல்களில் நிற்கின்றன. இப்படி சாதாரண வாகனங்களாக மாறி புழுத்துபோய் கிடக்கின்றன ஆடம்பர வாகனங்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு வாகனம் அத்தியாவசியமானது. இப்போது ஒரு குடும்பத்திற்கு பல வாகனங்கள் உள்ளன. ஆடம்பரத்தின் விளைவு இது.
முன்பணமாக ரூபாய் 1000, ரூபாய் 2000 கட்டிவிட்டு டூ விலர் வாகனங்களும், ரூபாய் 10 ஆயிரம், ரூபாய் 20 ஆயிரம் கட்டிவிட்டு கார்களும் சுலபமாக வாங்கும் நிலை உள்ளது. இதனால் வாகனப் பெருக்கம் மக்களை சலிப்படைய செய்துவிட்டது. கிராம சாலைகளில் கூட வாகன விபத்துகளில் மனித உயிர் பலிகள் அதிகரித்துவிட்டன. வாகன புகை நாற்றம் சாலை தெரியாத அளவிற்கு அதன் கரும் புகை, சாலையில் ஓட லாயிக்கற்ற வாகனங்களை கூட ஓட்டும் கொடுமைகள். மேலும் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாதவர்கள் கூட வாகன உரிமையாளர்களாக மாறிவிட்ட அவலம்.
எனவே இன்றைக்கும் தெருவிலே விற்கும் காய்கறிக்கு இருக்கும் மதிப்புகூட ஆடம்பர வாகனங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. இது இன்றைய எதார்த்த நிலை. இதற்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தி விபத்துக்களையும் அதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களையும் தடுக்க வேண்டும் என்கிறார்கள் பெரியவர்களான கலியமூர்த்தி, பெரியசாமி ஆகியோர்.