1957 சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 1 கோடியே 16 லட்சத்து 36 ஆயிரத்து 902. இதில் காங்கிரஸ் 49 லட்சத்து 13 ஆயிரத்து 375 வாக்குகளை பெற்றது. அது பெற்ற மொத்த இடங்கள் 151.
போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே திமுக 15 இடங்களில் வெற்றி பெற்று, 16 லட்சத்து 53 ஆயிரத்து 434 வாக்குகளையும் பெற்றது.
ராஜாஜி தலைமையிலான சீர்திருத்த காங்கிரஸ் கட்சி தேர்தல் கமிஷனில் பதிவுபெறாவிட்டாலும் 16 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 12 இடங்களிலும், ஆந்திரா மாநிலம் தனியாக பிரிந்து போனதால் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும் சோசலிஸ்ட் 2 இடங்களிலும் பார்வர்ட் பிளாக் 2 இடங்களிலும் பிரஜா சோசலிஸ்ட் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
அதாவது, பதிவான வாக்குகளில் 48 சதவீத வாக்குகள் மட்டுமே காங்கிரசுக்குஆதரவாக இருந்தது. எதிராக 52 சதவீத வாக்குகள் இருந்தது.
முதல் தேர்தலில் அறிஞர் அண்ணா, க.அன்பழகன், மு.கருணாநிதி, சத்தியவாணிமுத்து, ஏவிபி ஆசைத்தம்பி, களம்பூர் அண்ணாமலை, ஆனந்தன் இருசப்பன், ஏ.கோவிந்தசாமி, ப.உ.சண்முகம், எஸ்.சந்தானம், எம்.பி.சாரதி, எம்.பி.சுப்பிரமண்யம், எம்.செல்வராஜ், என்.வி.நடராசன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். ஈ.வே.கி.சம்பத், தர்மலிங்கம் ஆகியோர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். திமுக ஆதரித்த டாக்டர் கிருஷ்ணசாமி, என்.சிவராஜ் ஆகியோரும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக அறிஞர் அண்ணாவும், துணைத் தலைவராக க.அன்பழகனும், கொறடாவாக மு.கருணாநிதியும், செயலாளர்களாக எம்.பி.சுப்ரமண்யம், ஏ.கோவிந்தசாமி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் சபை நடவடிக்கைகளை கவனிப்பதற்கு வசதியாக சென்னை மவுண்ட் ரோடில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து புதிதாக கட்டப்பட்டிருக்கும் சட்டமன்றக் கட்டிடத்தை காரணம் காட்டாமல் காங்கிரஸ் அரசு புறக்கணித்ததை இந்த முதல் கூட்டம் வன்மையாக கண்டித்தது. அதற்கு பதிலாக காங்கிரஸ் அரசு சென்னை கோட்டையில் உள்ள கட்டிடத்தில் ஆடம்பரச் செலவு செய்யும் ஏற்பாடுகளை கைவிடும்படியும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆக, தமிழக சட்டமன்றம் கோட்டைக்கு இடம் மாறியதில் அன்றைக்கே அரசுப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
(இதேபோல்தான், 2010 ஆம் ஆண்டு திமுக காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு, மிக வசதியாக சட்டமன்றக்கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதிய சட்டமன்றக் கட்டிடத்தை ஜெயலலிதா புறக்கணித்தார் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.)
தந்தை பெரியார் காமராஜருக்கு ஆதரவளித்தார். முந்தைய ஆட்சிப் பொறுப்பில் காமராஜர் தமிழர்களுக்கு உயர்பதவிகளை பகிர்ந்து அளித்திருந்தார். இதன்காரணமாகவே காங்கிரஸ் இந்த அளவுக்கு வெற்றிபெற முடிந்தது என்று அரசியல் பார்வையாளர்கள் கணித்திருந்தனர்.
காமராஜர் தலைமையில் பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், எம்.ஏ.மாணிக்கவேல் நாயக்கர், பி.கக்கன், வி.ராமய்யா, லூர்தம்மாள் சைமன் ஆகிய எட்டு அமைச்சர்கள் தங்கள் பதவிக்காலம் முடியும்வரை பொறுப்பில் இருந்தனர்.
ராஜாஜி பதவி விலகியதும் முதல்வராக பொறுப்பேற்ற காமராஜருக்கு தந்தை பெரியாரும், அண்ணாவும் பக்கபலமாக இருந்தனர் என்பதும், ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை ரத்து செய்த காமராஜர், மாநிலம் முழுவதும் பள்ளிகளைத் திறக்க காமராஜர் நடவடிக்கை எடுத்ததும் காங்கிரசின் செல்வாக்கு நீடிக்க வகை செய்தது என்பதையும் மறுக்க முடியாது.
அதுமட்டுமின்றி, அரசுப் பொறுப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக திமுக பிரச்சாரம் செய்ததைத் தொடர்ந்து தமிழக அரசின் முக்கியப் பொறுப்புகளுக்கு தமிழர்களை நியமித்து காமராஜர் உத்தரவிட்டார் என்பதும் முக்கிய காரணமாகும்.
இத்தகைய சூழ்நிலையில் திமுக சார்பில் வெற்றிபெற்ற முதல் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கலைஞர் மு.கருணாநிதியின் வீட்டில் 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி கூடியது. அறிஞர் அண்ணா தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர், துணைத்தலைவர் தேர்தல்களிலும், சபாநாயகர் துணைசபாநாயகர் தேர்தல்கலில் பங்கேற்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
முடிவில், குடியரசுத்தலைவர் தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என்றும் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி புதிய சட்டமன்றம் கூடியது. திமுக உறுப்பினர்கள் அனைவரும் கடமையை சரிவரச் செய்வோம் என்று தமிழில் கூறி உறுதிமொழி ஏற்றனர்.
சட்டப்பேரவையில் சபாநாயகரை வரவேற்று அண்ணா பேசிய பேச்சு அனைத்திந்திய தலைவர்களின் கவனத்தை கவரும் வகையில் அமைந்திருந்தது.
ஆனால், அந்த ஆண்டின் இறுதியில் பிரதமர் ஜவஹர்லால் நேரு தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில், கிழவர்கள் என்றும் நான்சென்ஸ் என்றும், நாடுகடத்தப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
தமிழ்நாட்டின் மீதும், தமிழர் தலைவர்களின் மீதும் மத்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மரியாதயற்ற போக்கு தொடருவதையே நேருவின் பேச்சு உறுதி செய்தது.
இதையடுத்து நேருவுக்கு பாடம் புகட்ட திமுக முடிவெடுத்தது. 1957 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் 1958 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
சென்னையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் திமுகவினர் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
“தென்னக மக்களுக்கு பெருந்தொண்டாற்றும் பெரியார் ஈ.வே.ரா.வை மூட்டை முடிச்சுக்களுடன் நாட்டை விட்டு ஓடச்சொல்லும் – பதட்டம் பேசும் பண்டித நேரு – பஞ்சம் போக்கினாரா? பட்டினி துடைத்தாரா? விலை ஏற்றம் போக்கினாரா? செல்வம் வளரச் செய்தாரா? எதைச் சாதித்து தந்தார் இந்த நாட்டு மக்களுக்கு?” என்று தொடங்கும் அறிக்கையை திமுக வெளியிட்டு, அமைதியான வழியில் கருப்புக்கொடி காட்டி தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும்படி வேண்டுகோள் விடப்பட்டது.
இந்த போராட்டத்தை விளக்கி 1958 ஜனவரி 3 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி கேட்டு திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா, ஈ.வே.கி.சம்பத், இரா.செழியன், ஆசைத்தம்பி ஆகியோர் பேசுவார்கள் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இந்தக்கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். அதாவது 1957 டிசம்பர் 31 ஆம் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அன்றைய போலீஸ் கமிஷனர் அருள் தெரிவித்தார்.
போலீஸ் அனுமதி கிடைக்காவிட்டாலும் திட்டமிட்டபடி ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திருவல்லிக்கேணி கடற்கரையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அதில் தான் கலந்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அறிஞர் அண்ணா தெரிவித்தார். இதுதொடர்பாக அண்ணா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜனவரி 3 பதட்டத்துடன் விடிந்தது. திமுக பொதுக்கூட்டத்தை தடுப்பதற்காக போலீஸ் தீவிரமான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. பொதுக்கூட்டத்திற்காக மேடை ஏற்பாடுகளை செய்வதற்காக சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர்.
திருவல்லிக்கேணி கடற்கரையைச் சுற்றிலும் லாரி லாரியாக போலீஸார் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். கடற்கரைக்கு வரும் பொதுமக்களையும் விரட்டிக்கொண்டிருந்தனர்.
பிற்பகல் 2 மணியிருக்கும். திமுக தலைமை நிலையத்தில் அண்ணாவும் மற்றவர்களும் கூடியிருந்தனர். கடற்கரையில் போலீஸ் அட்டூழியத்தை அறிந்த வண்ணம் இருந்தனர். ஏராளமான வெளியூர் தோழர்களும் குவிந்திருந்தனர்.
இந்நிலையில், அண்ணா, ஈ.வே.கி.சம்பத், ஆசைத்தம்பி, இரா.செழியன் ஆகியோருடன் கழகக்கொடி பறக்கும் காரில் புறப்பட்டார். அவர்களைத் தொடர்ந்து நெடுஞ்செழியன், நடராசன், கருணாநிதி, மதியழகன், அன்பழகன், சிற்றரசு ஆகியோரும் காரில் பின் தொடர்ந்தனர்.
போலீஸ் அதிகாரிகள் அண்ணாவையும் மற்றவர்களையும் காரில் பின்தொடர்ந்தனர். கடற்கரையை நெருங்கும் சமயத்தில் அண்ணா உள்ளிட்ட நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
அதைத்தொடர்ந்து, கலைஞர் மு.கருணாநிதி தனது காரை செலுத்தினார். உடனே அவரையும் அவருடன் சென்ற மற்ற தலைவர்களையும் கைது செய்தனர். இதையடுத்து திமுகவின் முன்னணி தலைவர்களை கைது செய்யும் போலீஸ் நடவடிக்கை தொடர்ந்தது.
அதேசமயம் கடற்கரையிலும், அதைச் சுற்றிய வீதிகளிலும் அண்ணாவையும் தலைவர்களையும் எதிர்பார்த்து லட்சக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். அண்ணா கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்ததும் அவர்கள் அண்ணா வாழ்க, காங்கிரஸ் ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்டனர். கட்டுக்கடங்காத இந்த கூட்டத்தை போலீஸார் தடியால் தாக்கியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், குதிரைப்படையை ஏவியும் கலைக்க முயன்றனர். காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். 3 மணிநேரம் போலீஸ் அடக்குமுறை பிரயோகித்த பின்னரே கடற்கரையில் அமைதி திரும்பியது.
தமிழகம் முழுவதும் தடை மீறப்பட்டது. திமுக தலைமை நிலையத்தில் நேரு வரும் 6 ஆம் தேதி வரை போலீஸ் திடீரென புகுவதும், அங்கிருக்கும் தலைவர்களை கைது செய்வதும் தொடர்ந்தது.
எம்ஜியார், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
காமராஜ் அரசாங்கம், தமிழக காவல்துறை ஆகியவற்றின் எல்லா தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி கருப்புக் கொடிகளை மறைத்து எடு்ததுச் சென்று, நேருவுக்கு வரவேற்பு கொடுப்பவர்களைப் போல குவிந்த திமுகவினர் யாரும் எதிர்பாராத வகையில் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அரசும், காவல்துறையும் கடற்கரை மட்டுமின்றி, சென்னை மாநகரம் முழுக்க தேடித்தேடி தடியடி நடத்தியது. இரவு 7 மணி வரை கடற்கரைக்கு வரும் அனைவரையும் விரட்டியடித்தது.
இதைக்காட்டிலும் கருப்புக் கொடி காட்டி கைதானவர்களுக்கு நீதிமன்றம் விதித்த 25 ரூபாய் அபராதத்தை வசூலிக்க காமராஜ் அரசாங்கம் மேற்கொண்ட ஜப்தி நடவடிக்கை மிகக் கேவலமாக இருந்தது.
(திமுகவின் வேகமான வளர்ச்சியும் காங்கிரஸ் அரசாங்கத்தின் வீழ்ச்சியும் பற்றி திங்கள் கிழமை பார்க்கலாம்)
-ஆதனூர் சோழன்
முந்தைய பகுதிகள் :