முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தில் (மே-21) ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் வருடாந்திர வழக்கம். தற்போது, கரோனா நெருக்கடி இருப்பதால் ராஜீவ் நினைவிடத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செல்வார்களா? அஞ்சலி செலுத்த அனுமதி கிடைக்குமா? என்கிற சந்தேகத்துடனேயே இருந்தனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.
இந்த நிலையில் இன்று (மே-21) தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர்களான காங்கிரஸ் எம்.பிக்கள் டாக்டர் விஷ்ணுபிரசாத், டாக்டர் ஜெயக்குமார், வசந்தகுமார் உள்ளிட்டோர் ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினர். இதற்காக கே.எஸ்.அழகிரி வாங்கிய அனுமதிதான் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் கோபத்தை கிளற வைத்துக் கொண்டிருக்கிறது.
இது குறித்து காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, ‘’ கரோனா சூழலை விவரித்து அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை தமிழக அரசின் காவல்துறை மறுத்துவிட்டது. அனுமதிக் கேட்டு காங்கிரஸ் தரப்பில் எவ்வளவோ கெஞ்சியும் 21ந்தேதி காலை வரை போலீசார் அனுமதி தரவில்லை. அனுமதி தரப்படவில்லை என்ற தகவலை அறிந்த கே.எஸ்.அழகிரி, உடனடியாக, முதல்வர் எடப்பாடியை தொடர்புகொண்டு பேச, அடுத்த அரை மணி நேரத்தில் அனுமதி கிடைக்கிறது. அந்த அனுமதியை வைத்துக்கொண்டே அஞ்சலி செலுத்தினார் கே.எஸ்.அழகிரி.
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி தர மறுத்த தமிழக அரசை கண்டித்து ராஜீவ் நினைவிடத்திலேயே அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் திடீர் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். போராடுவதன் மூலம் தான் தமிழக அரசின் எதேச்சதிகாரத்தை அம்பலப்படுத்த முடியும். திமுக கூட்டணியில் நாம் இருக்கும் போது அதிமுக அரசின் தயவை நாம் எதிர்பார்க்கக்கூடாது. எடப்பாடி அரசினுடனான நட்பும் நமக்கு தேவைமில்லை. எடப்பாடி அரசை எதிர்ப்பதன் மூலம்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும். டெல்லியில் ராஜிவ் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த மத்திய அரசு அனுமதிக்கும் நிலையில், தமிழகத்தில் அதற்கு அனுமதி மறுக்கும் எடப்பாடியை கண்டித்து போர்க்குரல் உயர்த்தியிருந்தால் இந்த விவகாரம் தேசிய அளவில் எதிரொலித்திருக்கும்.
இப்படிப்பட்ட அரசியலை செய்யத் தவறும் கே.எஸ்.அழகிரி, எடப்பாடியிடம் பேசி அனுமதி பெற்றது ஏற்புடையதல்ல ! அரை மணி நேரத்தில் எடப்படியிடமிருந்து அழகிரி அனுமதி பெற முடிவதால் எடப்பாடிக்கும் அழகிரிக்குமிடையே உள்ள அரசியல் என்ன ? திமுக கூட்டணியிலிருந்து விலகி எதிர்காலத்தில் அதிமுக கூட்டணியை கையிலெடுக்க இப்போதே எடப்பாடியுடன் நட்பை வளர்த்துக்கொள்கிறாரா ? அதற்காகத்தான் எடப்பாடிக்கு எதிராக போராட்ட குரலை உயர்த்தாமல் சமரச அரசியல் செய்கிறாரா ? அழகிரியின் இத்தகைய எடப்பாடி மீதான பாசத்தில் பல சந்தேகங்கள் இருக்கின்றன ‘’ என்கிறார்கள்.