தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீண்ட காலமாக திமுகவினரால் எதிர்பார்க்கப்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்போலத் தமிழக அமைச்சரவையிலும் சிறிய அளவில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றதைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மேலும் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை விமர்சனமும் செய்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார், இதனை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள், அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதா?
நிச்சயமாக அவர் இந்த பொறுப்பை மிகச்சிறப்பாகக் கையாள்வார். கட்சியில் அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான பதவிகளையும் பொறுப்பாகவே கருதிச் செயல்பட்டு வந்தார். இதை நாம் அனைவரும் நேரில் பார்த்துள்ளோம். குறிப்பாகச் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என இரண்டு தேர்தல்களிலும் அவரின் உழைப்பை நாம் பார்த்துள்ளோம். அவரின் உழைப்புக்கு நல்ல பலன் தேர்தல் முடிவுகளில் கிடைத்துள்ளது. எனவே அவர் இந்த பொறுப்புகளிலும் மிகச் சிறப்பாகச் செயல்படுவார்.
சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசை மிகக் கடுமையாகப் பேசியுள்ளார். குறிப்பாக திமுக அரசு சொல்லும் திராவிட மாடல் அரசு என்பதே கரப்ஷன், கலெக்சஷன் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
திராவிட மாடல் ஆட்சியைக் குறை சொல்லும் முன்பு அவர் பையில் வைத்திருக்கின்ற எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களை நினைவில் வைத்துக்கொண்டு பேச வேண்டும். இன்னும் சொல்லப்போனால் திமுகவை விட அதிமுக அதிக ஆண்டுகள் தமிழகத்தில் பதவியிலிருந்துள்ளது. 67க்கு பிறகு இதுவரை நடைபெற்றுள்ள ஆட்சி என்பது திராவிட இயக்கங்கள் முன்னெடுத்தவைதான். அவர்கள் ஆட்சியில் 4 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தோம் என்றால், எங்கள் ஆட்சியில் இன்னும் அதிகமாகக் கொண்டு வந்தோம் என்று அதிகப்படியான மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம். அதனால் தான் இன்றைக்குத் தமிழகத்தைப் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு அனைத்து தளத்திலும் சிறப்பாக உள்ளது.
இன்றைக்கு அமைச்சரவை மாற்றத்தில் சிலருக்கு துறைகளும் மாற்றப்பட்டுள்ளது. அது என்ன காரணத்துக்காக மாற்றப்பட்டுள்ளது என்று நினைக்கிறீர்கள்?
இரண்டு துறைகள் முழுவதுமாக அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அது மாற்றப்பட்டிருக்கலாம். அதுதொடர்பாக முதல்வருக்குத் தான் தெரியும். அதிமுக ஆட்சியில் போல் திமுக அமைச்சர்கள் இல்லை, அதிமுக அமைச்சரவையிலிருந்த 30 பேருமே விஞ்ஞானிகள், அனைவருமே நோபல் பரிசு பெறக்கூடிய தகுதி படைத்தவர்கள். அவர்களின் விஞ்ஞான பூர்வ அறிவை நாம் அவர்களின் ஆட்சியில் பார்த்தோம். எனவே இந்த மாற்றம் என்பது நிர்வாக ரீதியிலான ஒன்றே தவிர வேறு ஒன்றும் இல்லை.