தமிழக அமைச்சரானதும் உதயநிதி தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் அமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று அதிமுகவின் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், இதுதொடர்பாக மூத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் அவர்களிடம் கேட்டபோது, "உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு இவர்கள் தலைவியாகச் சொல்கிறார்களே, அந்த ஜெயலலிதாவுக்கு அதிமுகவில் பதவி வாங்குவதற்கு என்ன தகுதி இருந்தது என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
திமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1972 இல் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது ஜெயலலிதா கட்சியிலிருந்தாரா? இல்லை. அவர் ஆட்சியிலிருந்த 1977,1980 என இரண்டு முறையும் அவர் கட்சியில் உறுப்பினராகக் கூட இல்லையே, 81 இல் அதிமுகவுக்கு வருகிறார். 84 ஆம் ஆண்டுக்குள் கட்சியில் அனைத்து விதமான முக்கியப் பொறுப்புக்களிலும் நியமிக்கப்படுகிறார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்குச் செல்கிறார். இந்த மூன்று வருடங்களில் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும் கற்றுணர்ந்த ஞானியாக அவர் வந்துவிட்டாரா? இந்த இடைப்பட்ட காலங்களில் அவருக்கு என்ன தகுதி வந்துவிட்டது என்று அதிமுக தலைவர்கள் சொல்வார்களா? அதைக்கூட விட்டுவிடலாம். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு யார் முதல்வராகப் பொறுப்பேற்றது. ஜானகி அம்மையார்தானே. அவர் எம்ஜிஆர் மறைவுக்கு முன்பு என்ன பொறுப்புக்களில் இருந்தார். ஏதாவது கட்சியின் முக்கியப் பொறுப்புக்களிலோ அல்லது அமைச்சரவையில் அமைச்சராகவோ அவர் இருந்தாரா? அப்புறம் எப்படி அவர் முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.
இது எல்லாம் வாரிசு அரசியலில் சேராதா? எம்ஜிஆர் மறைந்த பிறகு தானும் உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று ஜெயலலிதா கூறினாரே? அதை இல்லை என்று எடப்பாடி சொல்வாரா? அதிமுகவின் வரலாற்றை இப்படி வைத்துக்கொண்டு திமுகவில் வாரிசு அரசியல் என்று எடப்பாடிக்குச் சொல்ல எவ்வித தார்மீக தகுதியும் இல்லை. உதயநிதி தற்போது ஒரு புதிய பொறுப்புக்கு வந்துள்ளார். அவர் துறை ரீதியாக ஏதாவது ஒரு குற்றச்சாட்டு இருந்தால் அதை விமர்சனம் செய்யுங்கள். அது எதிர்க்கட்சியாக ஆரோக்கியமான போக்கு. அதை விட்டுவிட்டுத் தனிப்பட்ட திமுக வெறுப்பின் காரணமாக அவரை விமர்சனம் செய்வது எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.