1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வெற்றிகொண்ட செய்தியை அமெரிக்கா அறிவித்தது. இந்த அறிவிப்பு அமெரிக்கா முழுவதும் மிகப்பெரிய நிம்மதி பேரலையை பரவச் செய்தது.
நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மக்கள் உற்சாகமாக கூடத்தொடங்கினர். மக்களின் உற்சாகத்தை படம்பிடிக்க புகழ்பெற்ற லைஃப் ஆங்கில இதழின் போட்டோகிராபர் எய்ஸென்ஸ்டேட், தனது லெய்கா கேமராவுடன் சதுக்கத்தை சுற்றி வந்துகொண்டிருந்தார். அப்போது அவர் கண்ணில் பட்ட காட்சி அவரை உஷார் படுத்தியது. கேமராவை எடுத்து பளிச்சென்று அதை பதிவு செய்தார்.
ஒரு கப்பல்படை வீரர் தனக்கு எதிரே வந்த வெள்ளுடை அணிந்த நர்ஸ் ஒருவரை மிக இறுக்கமாக வாரி இழுத்து இதழோடு இதழ் பதித்து ஆழமான முத்தம் பதித்தார். அந்தக் காட்சியைத்தான் எய்ஸென்ஸ்டேட் மிக விரைவாக பதிவு செய்தார்.
அந்த வாரத்தில் லைஃப் இதழின் அட்டைப்படமாக வெளிவந்த இந்த புகைப்படம் போட்டோ ஜர்னலிஸத்துக்கு உதாரணமான படமாக கருதப்படுகிறது.
இந்த படத்தில் இருப்பது தாங்கள்தான் என்று 11 பேர் கூறினார்கள். ஆனால், ஃப்ரீட்மேன் என்ற பெண்ணும், மெண்டோன்ஸா என்ற கப்பல்படை வீரரும் மட்டுமே ஆய்வுகளின் அடிப்படையில் பொருத்தமாக இருந்தார்கள்.
முதலில் அந்தப் பெண் ஒரு நர்ஸ் என்றே கருதப்பட்டார். ஆனால், ஃப்ரீட்மேன் தன்னை பல் மருத்துவரின் உதவியாளர் என்று கூறினார். அன்றைய தினம் போர்நிறுத்த அறிவிப்பு வெளியானதும் டைம்ஸ் சதுக்கத்தில் மக்களின் சந்தோஷத்தை காண வந்தேன். அப்போது எனக்கு எதிரே வந்த நபர் நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பலமாக என்னை வாரியணைத்து முத்தமிட்டார். அவ்வளவு ஒரு ஆழமான முத்தத்தை நான் பார்த்ததில்லை. எனக்கு விருப்பம் இல்லாத நிலையிலும் அவருடைய இறுக்கமான பிடியில் இருந்து நான் விடுபட முடியவில்லை என்று தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஃப்ரீட்மேன்.
ஜப்பான் சரணடைந்த செய்தி வெளியான போது டைம்ஸ் சதுக்கத்தின் அருகே உள்ள பாரில் மெண்டோன்ஸா மது அருந்திக் கொண்டிருந்தார். இந்த அறிவிப்பு, இனி போர்க்களத்துக்கு போக வேண்டியதில்லை என்ற நிம்மதியை கொடுத்தது. உடனே, தனது தோழியை தேடி சதுக்கத்திற்கு வந்தார்.
“எனக்கு எதிரே வெள்ளை உடையில் வந்த பெண்ணை நர்ஸ் என்று நினைத்தேன். நர்ஸுகள் மீது எனக்கு எப்போதுமே பிரியம் அதிகம். மது அருந்தியிருந்த நிலையில் போர் நிறுத்த அறிவிப்பை கொண்டாட வேண்டும் என்று பரபரத்தேன். என்ன செய்கிறேன் என்று யோசிக்கவே இல்லை. அந்த பெண்ணை பற்றியிழுத்து முத்தமிட்டேன்” என்று தனது நினைவை சொல்லியிருக்கிறார் மெண்டோன்ஸா.
டைம்ஸ் சதுக்கத்தில் இந்த புகைப்படம் சிலையாக வைக்கப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள மெண்டோன்ஸா, தனது 95 ஆவது வயதில் 2019 பிப்ரவரி 17 ஆம் தேதி இறந்துவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.