இன்றிருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரைவிடவும் செய்தியாளர்களிடம் மிகுந்த நெருக்கமும், அவர்களுக்கு முக்கியத்துவமும் கொடுத்தவர் கலைஞர். அவரது செய்தியாளர்கள் சந்திப்பு களைகட்டும். அவரை மடக்க வேண்டும் என்று வரும் கேள்விகளை மடக்கி திருப்பி அனுப்பும் திறனே தனி.
ஆட்சியில் இல்லாதிருப்பதே நல்லது...
சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு 7.9.06 அன்று நடைபெற்ற சமயம்.
நிருபர்: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்து கொண்டே இருப்பேன் என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறாரே...!
கலைஞர்: அவர் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்குச் செய்கிற பெரிய நன்மைதானே. அதைத்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார் போலும்.
ஜான்சி ராணி அல்ல...
சென்னையில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது,
ஒருவர்: உலகத்தில் வேறு எந்தத் தலைவரோடும் எங்கள் தலைவியை ஒப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஜான்சிராணி என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்குமென்று, முன்னாள் அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறாரே... அப்படியென்ன அந்த அம்மையார் சாதித்து விட்டார்?
கலைஞர்: அந்த அமைச்சரைப் பற்றி நாவலர்தான் சொல்வார். அவர் பெயரையே அவரால் சரியாக எழுதித்தெரியாதவர் என்று. எனவேதான், டான்சிராணி என அழைப்பதைத்தான், தவறுதலாக ஜான்சிராணி எனச் சொல்லியிருப்பார்...
எனச் சொல்லி முடிப்பதற்குள், நிருபர்கள் கூட்டமே சிரிப்பில் சிக்கி கலகலத்துப் போனது.
இந்து-முஸ்லிம் ஒற்றுமை
நிருபர்கள் கூட்டமொன்றில்,
ஒருவர்: அண்மையில், தாங்கள் ரசித்த துணுக்கு ஒன்றைக் கூறமுடியுமா?
கலைஞர்: கபீர்தாசர், இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். ஆனால், அவரை இந்துக்களும் திட்டினார்கள், முஸ்லிம்களும் திட்டினார்கள். கபீர்தாசர் இதனைக் கண்டு சிரித்தாராம்."இந்துக்களும்-முஸ்லிம்களும் என நாங்கள் இருவருமே உங்களைத் திட்டுகிறோம். நீங்கள் சிரிக்கிறீர்களே ஏன்?" எனக் கேட்டார்களாம். அதற்கு அவர், "என்னைத் திட்டுவதிலாவது நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்கிறீர்களே. அதனால்தான்" என்றாராம். நாகூர் லோகநாதன் என்பவர் எழுதிய இந்தத் துணுக்கு என்னை மிகவும் கவர்ந்தது என்றார்.
(நிருபர்களையும் இது கவரத்தானே செய்யும்).
விக்கி விக்கி அழவில்லை...!
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டபின், அதே ஆண்டு மே திங்களில், சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடப்பதற்கான அறிவிப்பு வந்த நேரம் ஒவ்வொரு கட்சியும் தனது வேட்பாளர்களைத் தீவிரமாகத் தேர்வு செய்தபோது, எம்.ஜி.ஆர். தனது கட்சி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார். ஏற்கனவே, சட்டமன்ற உறுப்பினர்களாகவிருந்தவர்கள் பலர் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்து ஏமாற்றமடைந்திருந்தனர்.
மறுநாள், கலைஞரைச் சந்தித்த நிருபர்களில் ஒருவர், "நேற்றைய அ.தி.மு.க. பட்டியல் பலருக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்துவிட்டன. சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி முழுமைக்கும் ஒரே முனகல். போர்க்கொடி. இன்னும் சொல்லப்போனால், பலர் விக்கி விக்கி அழுது கொண்டே இருக்கிறார்கள் என முடிப்பதற்குள், கலைஞர் இடைமறித்து,"அன்புள்ள நிருபரே, நீங்கள் சொல்வதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். அவர்கள் "விக்கி விக்கி" அழுதிருக்கமாட்டார்கள். 'விஸ்கி விஸ்கி'யாக அழுதிருப்பார்கள் என்றதும் ஒட்டுமொத்த நிருபர்களும் சிரிப்பில் மூழ்கிப் போனார்கள்.
எந்தக் காலகட்டம்?
1998-ம் ஆண்டு ஜூன் மாதம் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களின் சந்திப்பு நடைபெற்ற சமயம்...
ஒரு நிருபர்: நான்கு முறை நீங்கள் முதல்வராக இருந்திருக்கிறீர்கள். இவற்றில் எந்தக் காலகட்டத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறீர்கள்?
கலைஞர்: ஒரு குறிப்பிட்ட காலத்தை மட்டும் நான் சொன்னால் மற்ற மூன்றுக்கும் கோபம் வராதா?
இது போன்ற கேள்விகளை இனி யாரிடம் கேட்போம், இது போன்ற பதில்களை இனி யார் தருவார் என்று நிருபர்கள் கலைஞரை மிஸ் பண்ணுகிறார்கள்.