உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் 140-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.இதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணாவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
ஒரு எதிர்ககட்சி உறுப்பினராக இந்த ஊரடங்கு, கரோனா தொற்று, அதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தக் கரோனா வைரஸ் விஷயத்தில் எதிர்க்கட்சி ஆளும் கட்சி இதெல்லாம் தேவையில்லை. கரோனா வைரஸ்க்கு கருப்பு, வெள்ளை, ஏழை, பணக்காரன் என எதுவும் தெரியாது. அதற்கு மனித இனத்தை மட்டும்தான் தெரியும். அந்த உணர்வோடு இந்த விஷயத்தை நாம் அணுக வேண்டும். மத்திய அரசைப் பொறுத்த வரையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. மற்ற நாடுகளை விட பாலிசி விவகாரத்தை இந்திய அரசு அருமையாக வைத்திருக்கும்.ஆனால் தற்போது அது ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்காத மாதிரியே உள்ளது. தற்போதைய சுழ்நிலையில் இந்த மாதிரியான நோய்களைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்பே நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை. இந்த ஊரடங்கை ஒருவிதத்தில் வரவேற்றாலும் இந்த 21 நாட்களுக்கு மேல் நம்முடைய பொருளாதாரம் தாங்காது. இதை நான் மட்டும் கூறவில்லை பொருளாதார வல்லுநர்களே அதைத்தான் கூறுகிறார்கள்.
இருந்தாலும் இந்த ஊரடங்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதானே?
அப்படி என்றால் ஏழைகளுக்கு அனைவருக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கரோனாவால் உயிரிழப்பவர்களை விட பசியால் உயிரிழப்பவர்கள் அதிகமாகி விடக்கூடாது என்று கவலை கொள்கிறோம்.இன்னும் இந்த ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்றால் அதற்கான முன்னெடுப்புக்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். இந்திய அரசு ஏராளமான உணவு தானியங்களைச் சேமித்து வைத்துள்ளது.
அவற்றை எல்லாம் மக்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். நம்மிடம் மனித உழைப்பு இருக்கின்றது. அதனை மறுபடியும் நம்மால் சேகரித்துக்கொள்ள முடியும். பணத்தைத் தேவையான அளவு கொடுங்கள். 500 ரூபாய் மத்திய அரசு கொடுத்தால் அதனை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். கணவன் , மனைவி மூன்று குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு இது போதுமா? 5 கிலோ அரிசி கொடுப்பதெல்லாம் காணாது. 20 கிலோ கொடுங்கள். ஏழைகளுக்கு அரசாங்கம் துணையில்லை என்றால் வேறு யார் துணை இருப்பார்கள்.