நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, இந்து மதம் தொடர்பாக சில கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும், கிருஸ்தவமும், இஸ்ஸாமும் தமிழர் சமயமே இல்லை என்றும் அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "இன்றைக்கு இந்து மதம் என்று தமிழர்கள் அடையாளப்படுத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்து என்ற மதம் எப்போதிருந்து ஆரம்பமானது. வெள்ளைக்காரன் இங்கே வந்து கையெழுத்து போட்டு நம்மை இந்து மதம் என்ற அடிப்படையில் பிரித்தாண்டார்கள். தமிழன் இந்து மதமே இல்லை. கிருஸ்தவமும், இஸ்ஸாமும் தமிழர் சமயமே இல்லை. ஒன்று ஐரோப்பிய மதம், மற்றொன்று அரேபிய மதம். இந்த இரண்டும் எப்படி தமிழர் சமயம் ஆகும். என்னுடைய சமயம் சைவம், என்னுடைய சமயம் மாலியம், என்னுடைய சமயம் சிவ சமயம். மர செக்கு எண்ணெய்க்குத் திரும்பி வருகிறீர்களே, அதேபோல் தாய் மதத்துக்கு அனைவரும் திரும்பி வாருங்கள்.
எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கிறது, என்னை ஒழிக்க வேண்டும் என்று, அவர்களிடம் நானே சொல்கிறேன். நான் அழிந்துவிடுகிறேன், உங்களை எல்லாம் ஒழித்துவிட்டு. என்னை இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் அனைவரும் திட்டுகிறார்கள். நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் தெரியும். எதற்காக என்னை இப்படி கார்னர் செய்து திட்ட வேண்டும், ஏனென்றால் நான் வளர்ந்துவருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம்முடன் இருந்த ஒரு பையன் இந்த அளவு வளர்ந்து பேசுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் என்னை ஒழித்துத் தள்ள வேண்டும் என்று அலைகிறார்கள். அவர்களை அரசியலில் இருந்து ஒழித்துவிட்டு நானே என்னை ஒழித்துக்கொள்கிறேன். அதுவரை நான் இப்படிதான் இருப்பேன், என்னுடைய கருத்தை சொல்லிக்கொண்டேதான் இருப்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது" என்றார்.