இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக நாளை பொறுப்பேற்க உள்ளார் டி.ஒய்.சந்திரசூட். நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்பு பணியைத் துவங்கிய அவர், உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ற இடத்திற்கு தற்போது வந்துள்ளார். 62 வயது ஆகும் அவர் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பணியில் இருக்கப்போகிறார். இவர் தலைமை நீதிபதியாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தான் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதுவரை இவர் வழங்கிய தீர்ப்புகளே இவர் யார் என்பதைச் சொல்வதற்கு போதுமானவை. அப்பா விசாரித்து வழங்கிய தீர்ப்பையே இவர் மாற்றினார் என்றால் எவ்வளவு ஆச்சரியமான ஒன்று. அவரது தந்தை ஒய்.வி சந்திரசூட் அவர்களும் இதே உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் தான். இந்திய நீதித்துறை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் தந்தையும், மகனும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த நிகழ்வு என்பது தற்போதுதான் முதல் முறையாக அமைய இருக்கிறது. பதவி ஏற்கும் முதல் நாளிலேயே இந்த சாதனையைப் புரிய இருக்கிறார் டி.ஒய்.சந்திரசூட்.
அதையும் தாண்டி இவரது தந்தை ஒய்.வி சந்திரசூட் 1985ம் ஆண்டு தலைமை நீதிபதியாக இருந்தபோது சவுமித்ரி விஷ்ணு வழக்கை விசாரித்து இந்திய அரசியலமைப்பு தண்டனைச் சட்டம் ஐபிசி 497 செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தார். அப்போதே மிகுந்த சர்ச்சையைக் கிளப்பிய அந்தப் பிரிவு என்ன என்பதுதான் மிக முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அதாவது திருமணமான ஆண், பெண் மற்றொருவரிடம் திருமணத்தை மீறிய உறவு வைத்துக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டு அது புகாராகப் பதிவு செய்யப்பட்டால் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கும் வகையில் அந்தச் சட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
இதை 1985ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி சந்திரசூட் விசாரித்து, இந்த தண்டனைச் சட்டத்தில் எந்தத் தவறும் இல்லை, இது தொடரலாம் என்று தீர்ப்பளித்தார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தைக்கு வந்த அதே வழக்கு மகன் ஒய்.வி சந்திரசூட் அவர்களிடம் வருகிறது. இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்த அவர், தவறு செய்யும் இருவரில் ஒருவருக்கு மட்டும் தண்டனை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இது அரசியலமைப்புக்கு எதிரான சட்டமாக இருக்கிறது என்று கூறி அந்தச் சட்டத்தை நீக்க உத்தரவிட்டார். தந்தை ஏற்றுக்கொண்டாலும் அதில் தவறு இருக்கும் பட்சத்தில் அதில் உறுதியாக நின்று எதிர்க்குரல் கொடுக்கும் நீதிமானாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறார் அவர். இன்னும் 24 மாதங்கள் அவர் பதவியில் இருக்கப் போகிறார். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக காலம் தலைமை நீதிபதியாக இருக்கப்போகும் சாதனையும் அவர் படைக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.