இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அதிமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன்,
அதிமுகவையும் இரட்டை இலையையும் பிரிக்க முடியாது. எங்கள் உணர்வில், உயிரில் கலந்தது, எங்கள் ரத்தமும் சதையுமானது இரட்டை இலை. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வராற்று பக்கங்களை திருப்பி பார்த்தால் அதன் முதல் பக்கத்தில் இந்த வீர வரலாறு நிறைந்திருக்கும். திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வருகிறபோது எம்.ஜி.ஆரால் இரட்டை இலை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டு, அன்று ஆளும் கட்சியாக இருந்த திமுகவையும், மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியையும் தேர்தல் களத்தில் பின்னுக்கு தள்ளி புதிதாக அறிமுகமான இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்று நிலையான ஒரு வரலாறை பிடித்து.
அதன் அடிப்படையில்தான் மூன்று முறை தமிழகத்தின் முடிசூடா மன்னனாக எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பிறகு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதன்பிறகு ஜா அணி, ஜெ அணி என பிளவுபட்டு இரட்டை புறா, சேவல் சின்னம் என நின்றது. அதற்கு பிறகு இரண்டு அணியும் இணைந்து இரட்டை இலை சின்னம் கோரப்பட்டு மீண்டும் சின்னம் கிடைத்தவுடன் 91ல் அதிமுக ஆட்சியை பிடித்தது. நான்கு முறை அதிமுகவை ஆட்சிப் பொறுப்பில் கொண்டு வந்தார் ஜெயலலிதா. ஆறு முறை முதல்வராக பதவியேற்றார்.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எதிரிகள் ஒரு பக்கம், துரோகிகள் ஒரு பக்கம் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மகிழ்ச்சியடைகிறோம். இரட்டை இலை சின்னம் கிடைத்ததை வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் வெற்றியாக நினைக்கிறோம். இதனை நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியாகவே பார்க்கிறோம்.
மீண்டும் கட்சியில் பொதுச்செயலாளர் பதவி வருமா?
பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதாதான். அவரைத்தான் நாங்கள் நிரந்தர பொதுச்செயலாளர் என அழைக்கிறோம். அவர் அமர்ந்திருந்த பதவியில் யாரும் அமரக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் கருத்து. அந்த அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் உருவாக்கப்பட்டது. கட்சிக்குள் எந்த மாற்றமும் நிகழாது. இவ்வாறு கூறினார்.