பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் 'சர்தார்'. பிரின்ஸ் பிக்சர் பேனரில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், ஷங்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சர்தார் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, "மித்ரன் 'இரும்புத்திரை' என்று ஒரு படம் எடுத்தார். அந்த படம் முடிந்ததற்கு பிறகு எனக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. என் நெஞ்செல்லாம் அடைச்ச மாதிரி இருந்தது. ஒரு பேங்கில் இருந்து வரக்கூடிய மெசேஜ் இவ்வளவு பயமுறுத்த முடியுமா என்பது, அந்த படம் பார்த்ததற்கு பிறகுதான் தெரிந்தது. அந்த படம் எல்லா இடத்திலும் வெற்றிகரமாக ஓடியது. ஹிந்தியில் டப் செய்யப்பட்டு, 3 மில்லியனைத் தாண்டிப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
1980- களில் உளவாளிகளுக்காக சிறிய குழுவை உருவாக்கும்போது, ராணுவ வீரர்களுக்கு எவ்வளோ நடிக்க சொல்லிக் கொடுத்தும், நடிப்பே வரவில்லை. ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், ஒரு நடிகனே ராணுவ வீரராக மாறினால், என்ன என சொல்லி, ஒரு டீம் ஒரு நாடக நடிகனை எடுத்து, பயிற்சி கொடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக மித்ரன் கூறினார். அந்த ஐடியா அவ்வளவு ஸ்டன்னிங்காக இருந்தது. அந்த ஐடியா அதிக ஆர்வமாக இருந்தது. ரொம்ப ஆர்வமாக இருக்கிறது நீங்கள் ஸ்கிரிப்ட் எழுதுங்கள் என்று கூறினேன். ஒரு ஸ்கிரிப்ட் எழுதினார். இரண்டு மூன்று வெர்சன் போயிட்டு வந்தது.
மறுபடியும் என்னை அவர் சந்தித்தபோது, சார் இரட்டை வேடக் கதையாக மாறியுள்ளது. அண்ணா ‘அயன்’ என்ற படத்தில் நிறைய லுக் பண்ணிருக்கார். ஆனால், எனக்கு இந்த சர்தார் படத்தில் லுக் அமைந்துள்ளது. என்னுடைய கரியரில் மிக முக்கியமானப் படமாக இதைப் பார்க்கிறேன். இந்த மாதிரியான லுக்ஸ் எப்படி பண்ணுகிறார்கள், எதுக்காக பண்ணுகிறார்கள் என்பதுதான் அந்த லுக்ஸுக்கு மரியாதை.
நமது ஊர், நமது மண்ணில் இருந்து வந்த ஒருவர் எப்படி சிந்திப்பார்கள். அவர் எப்படி ஆப்ரேட் செய்திருப்பார்? என்ன பிரச்சனைக்காக உள்ளே இறங்கிருப்பார்?, அவர் எடுத்துக்கிட்ட விசயம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது. அதை ரியலாக எப்படி பண்ண முடியும்? என்பதற்காகத் தான் பெரிய மெனக்கெடல் தேவைப்பட்டது. இவ்வளவு வருட அனுபவத்தையும் பரிசோதிக்கும் கதாபாத்திரமாக சர்தார் அமைந்தது.
நடிகர் சங்கத்திற்காக லைலாவிடம் ஒருமுறை பேசியுள்ளேன். அவர் அப்படியே இருக்கிறார். பிதாமகனில் பார்த்த கேரக்டராகவே இன்னும் அதே போலவே இருக்கிறார். அவர் உடனே சரி என்று சொன்னது படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது. சராசரி வாழ்க்கையில் இருந்து வேறுபட்ட விசயமாக காண்பிக்க வேண்டியிருக்கிறது. அதுவும், இன்டலிஜென்டாக இருக்க வேண்டும்; அதற்கு நிறைய மெனக்கெடல் இருந்தது. என்னுடைய கரியரில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மனுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு கார்த்தி பேசினார்.