Skip to main content

நான் விரும்பி வெடிக்கும் வெடி...

Published on 18/10/2017 | Edited on 19/10/2017
நான் விரும்பி வெடிக்கும் வெடி... 
நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி!



'யார் போனாலும் பரவாயில்லை, நான் உங்களுடன் தான் இருப்பேன்' என்று நாஞ்சில் சம்பத், தினகரன் அணியில் இருந்து கொண்டாடும் தலை தீபாவளி இது. இறுக்கமாகவும் கலக்கமாகவும் போய்க்கொண்டிருக்கும் அரசியல் சூழ்நிலையில், கொஞ்சம் கலகலப்பா பேசலாம்னு கூப்பிட்டோம், இன்டர்நெட் இளைஞர்களின் செல்லக் குரல் நா.ச அவர்களை...

மேடையில நீங்க பேசுனா சரவெடியாதான் பேசுறீங்க, அரசியல்ல சில சமயம் புஸ்வானமாகவும் ஆகியிருக்கீங்க...  வீட்டுல தீபாவளிக்கு நீங்க விரும்பி வெடிக்கும் வெடி எது?   

நக்கீரன் வாசகர்களுக்கும், நக்கீரன் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். 

முதலில் தீபாவளி என்ற பண்டிகையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. கொள்கை ரீதியாக அது தமிழர்களின் பண்டிகை அல்ல. ஊரோடு ஒத்து வாழ் என்பதற்காக நானும் அதில் பங்கெடுத்துக்கொள்கிறேன். நான் பெரிய வெடிகளை வெடிக்க மாட்டேன். தரைச்சக்கரம் போன்றவைகளைத்தான் நான் விடுவேன். அதைத்தான் பிள்ளைகளுக்கும் வாங்கிக்கொடுப்பேன். 

உங்க தலை தீபாவளியில், 'மோதிரம் போட்டாதான் தலைக்கு எண்ணெய்  வைப்பேன்'னு பிரச்சனை பண்ணிருக்கீங்களா?   

மாமனார் வீட்டில் கொண்டாடும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. தலை தீபாவளியை என் வீட்டிலேயே நான் கொண்டாடினேன். என்னோட சகோதரர்கள் 4 பேர், தங்கை ஒருவர் என நாங்கள் 6 பேரின் கணவன் - மனைவி, குழந்தைகள் சேர்ந்து பொங்கி சாப்பிட்டு, பட்டாசு வெடித்து ஒன்றாக கொண்டாடினோம். 



தீபாவளி அன்னைக்கு அடிச்சு புடிச்சு முதல் நாள் முதல் காட்சி பார்த்த படம்? 

ஒரு முறை தீபாவளியன்று படம் பாத்தே ஆகணும்னு ரஜினி நடித்த 'சிவாஜி' படம் பார்த்தேன். பாரி மன்னர் பெற்றெடுத்த அங்கவை, சங்கவை இரு பெண்களை கருப்பாக்கி, சந்தையில் விற்கும் உடைகளை வாங்கி போட்டு, அவர்களிடம் பழக வருகிறீர்களா என சாலமன் பாப்பையா அழைக்கிறார். தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே முதல் கையறு நிலை கவிதைகளை எழுதியது அங்கவையும், சங்கவையும். அடுத்த நாள் ஆறுமுகநேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சாலமன் பாப்பையாவை தாளித்துவிட்டேன். கும்பகோணம் சங்கருக்கு தெரியாமல் போகலாம். தமிழ் தெரிந்த சாலமன் பாப்பையாவுக்கு தெரியாமல்போனதா என கடுமையான விமர்சனம் வைத்தேன். இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை என சாலமன் பாப்பையா முடிவெடுததற்கும் ஒரு தீபாவளிதான் காரணமாக இருந்தது. 



வைகோவை விட்டு பிரிஞ்சு வந்தாலும், நீங்க நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ற, அவர் கூட இருக்கும்போது நடந்த சம்பவம் ஏதாவது இருக்கா?

அவரோடு 18 ஆண்டு பயணித்ததில் மறக்க முடியாத சம்பவம், திருநெல்வேலி மாநாட்டில் எனக்கு தலைமை தாங்குகிற வாய்ப்பு தந்து, ஒன்றே முக்கால் மணி நேரம் உயர்ந்த தமிழ் நடையில், உணர்ச்சி பெருக்கில், நான் ஆற்றிய உரையும், அதை அங்கீகரித்த வைகோவின் பெருந்தன்மையும்தான் நான் நினைத்து நினைத்து நெகிழக்கூடிய சம்பவமாக இருக்கிறது. 

இன்னோவா சம்பத் என்பது உங்க இன்னொரு பேரு... இன்னோவா கார்ல உங்கள ஹெவியா அட்ராக்ட் பண்ணது எது?  

இன்னோவா காரில் பயணம் செய்யும்போது வலி தெரிவதில்லை. நீண்ட தூரம் பயணம் செய்தாலும் களைப்பு வருவதில்லை. ஏறி உட்காருவதற்கும், இறங்குவதற்கும் இன்னோவா போன்ற சவுகரியமான கார் எந்த காரும் இல்லை. களைப்பு தெரியாத ஒரு பயணத்திற்கு, நோவாமல் பயணிப்பதற்கு இன்னோவா.

தமிழில் உங்களுக்கு பிடிக்காத வார்த்தை? 

தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை என சொல்ல வேண்டுமானால் 'மலடு'.

பரோல்ல வந்த சசிகலாகிட்ட நீங்க சுந்தரகாண்டம்  படிக்க சொன்னதா சொல்லுறாங்க... என்ன காரணம்?

ஆமாம். சொன்னேன். சீதை சிறைவைக்கப்பட்டபோது அந்த சம்பவங்கள் எல்லாம் வருகிற காண்டம் இராமாயணத்தில் சுந்தரகாண்டம். அதனால் துன்பமும், நெருக்கடியும் ஒரு மனிதனுக்கு வருகிறபோது, அந்த சுந்தரகாண்டத்தை படித்தால் நெருக்கடியும், துன்பமும் தீரும் என்பதைவிட அதனால் வரக்கூடிய வலி தீரும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதிலும் கம்பன் எழுதிய சுந்தரகாண்டத்தைப் படித்தால் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். மனம் ஒரு சமவெளிக்கு வருவதற்கு சுந்தரகாண்டம் நல்லதொரு உபாயம்.

-வே.ராஜவேல்,
வஸந்த் பாலகிருஷ்ணன்

சார்ந்த செய்திகள்