Skip to main content

"எங்களிடம் வாலாட்டினால் அது நாங்கள் வளர்க்கும் மாடாகத்தான் இருக்க வேண்டும்; வேறு யாராவது வாலாட்டினால்..." - கௌதமன் எச்சரிக்கை

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

க

 

சென்னையில் இந்தித் திணிப்புக்கு எதிராக வள்ளுவர் கோட்டம் அருகே கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் கௌதமன் மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக ஆவேசமாகப் பேசினார். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வரலாற்று நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறி மீண்டும் எங்களைப் போராட வைக்காதீர்கள் என்றார்.

 

இதுதொடர்பாக பேசியவர் அவர், " இங்கே பேசியவர்கள் எல்லாம் கூறினார்கள் 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றியும், அதற்கு எதிராக நாம் எப்படி நம்முடைய போராட்டங்களை முன்னெடுத்தோம் என்பதைப் பற்றியெல்லாம் இங்கே பேசியவர்கள் கூறினார்கள். இதிலே முக்கியமான விஷயம் 1965ம் ஆண்டுக்கு முன்பே 1938ம் ஆண்டே இந்தியைத் திணிக்க இவர்கள் முயன்றார்கள். இல்லையென்றால் நாம் ஏன் தாளமுத்து, நடராஜனை இழந்திருக்கப் போகிறோம். ராஜகோபாலச்சாரி காலத்திலேயே அவர்கள் இந்தியைத் திணிக்க முயற்சி எடுத்துத் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்தார்கள். தற்போது இந்திய ஒன்றியம் அதற்கான முயற்சியை எடுத்து வருகிறது.

 

தமிழுக்கு முடிவு கட்டிவிட்டு சமஸ்கிருதத்தைக் கொண்டு வர நினைக்கிறது. இந்தியைத் திணிக்கலாமா என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது. இவர்களுடைய சூழ்ச்சி என்ன? இதை ஒருபோதும் தமிழினம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. எங்கள் விவசாயிகளை டெல்லியில் நிர்வாணமாக ஓட விட்டபோது என்ன நடந்தது? கத்திபாரா பாலத்தில் நடைபெற்றது இந்த உலகத்துக்கே தெரியும். இந்திய ஒன்றியத்துக்கும் தெரியும். நம் வரலாறு இன்று நேற்று தோன்றியது இல்லை.சிந்து சமவெளியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற நாணயத்தில் காளை இருந்ததற்கான வரலாறு நமக்கு உண்டு.

 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன நடைபெற்றது என்று இவர்களுக்கு நினைவில்லையா என்று தெரியவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தே தீரும் என்று பத்திரிகையாளர் மன்றத்தில் நாங்கள் கூறி போராட்டத்தை ஆரம்பித்தோம். அது தீப்பொறி போலப் பற்றி தமிழகம் முழுவதும் போராட்டம் பரவி இந்திய ஒன்றியம் அதிர்ந்து போனது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  உச்சநீதிமன்றம் நீங்கள் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டாம் என்று உத்தரவு போட்டது. இந்திய ஒன்றிய அரசு தமிழர்களைப் பார்த்துக் கைவிரித்து நின்றது. கொக்கரித்தது. கடைசியாக நம்முடைய போராட்டத்துக்கு அடிபணிந்து நீங்கள் உங்கள் சட்டமன்றத்திலேயே சட்டத்தை நிறைவேற்றலாம் என்று கூறி நம்மிடம் பணிந்து போனார்கள். 

 

இந்திய ஒன்றியத்துக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையைக் கொடுக்கிறோம். இந்தப் புரட்சி உங்களுக்கு நல்ல ஒரு பாடத்தைக் கொடுத்திருக்கும். இனிமே எங்களிடம்  வாலாட்டினால் அது நாங்கள் வளர்க்கின்ற மாடாகத்தான் இருக்க வேண்டும். வேறு எவன் வாலாட்டினாலும் இழுத்து வச்சி ஒட்ட நறுக்கிடுவோம். சண்டை நடந்தால் தலைதெறிக்க ஓடுகின்ற கூட்டம் ஒன்றிய கூட்டம். அது எத்தனையோ இடத்தில் நடைபெற்று இருக்கிறது. சண்டை என்றால் அதை நோக்கி ஓடுகின்ற கூட்டம் இந்தப் பச்சைத் தமிழினக்கூட்டம். எங்கள் வரலாறு தெரியவில்லை என்றால் புறநானூறு, திருக்குறளைப் படியுங்கள். இரண்டு வரி தப்புத் தப்பாக மட்டும் படிக்காதீர்கள். அர்த்தத்தை உள்வாங்கிப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்" என்றார்.