குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தில்லியில் உள்ள அலிகர் மற்றும் ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இந்த விவகாரம் இந்திய அளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக அந்த கல்லூரி மாணவரும், பல்கலை கழக மாணவர் தலைவருமான கவுதம் அவர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
தில்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினார்கள். இதில் பல மாணவர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது அங்கு எந்த மாதிரியான நிலை உள்ளது?
இந்த குடியுரிமை மசோதாவை முன்வைத்து இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜேஎன்யூ, அஸ்ஸாம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், அங்கெல்லாம் இந்த மாதிரியான தாக்குதல் நடைபெறவில்லை. குறிப்பாக இந்த பல்கலைக்கழங்களின் பெயர்களை முன்வைத்து அங்கு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். பிரதமர் இந்த விவகாரம் தொடர்பாக கூறும்போது, கலவரத்தில் ஈடுபடுபவர்களின் உடைகளை வைத்தே கண்டுபிடித்து விடலாம் என்று கூறுகிறார். நான் தற்போது அணிந்திருக்கும் உடையை போன்று இதற்கு முன் அம்பேத்கார் அணிந்திருந்தார், நேதாஜி அணிந்திருந்தார், ஜின்னா அணிந்திருந்தார். ஆகையால் உடைகளை வைத்து எப்படி அடையாளம் காணலாம் என்று தெரியவில்லை.
அலிகார் மற்றும் ஜாமியா பல்கலைக்கழகங்களில் உள்ள முஸ்லிம் மாணவர்கள் தான் இந்த போராட்டத்தை முன் எடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுவதை பற்றி?
இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள், வட கிழக்கில் தொடங்கி தென் மாநிலங்கள் வரை இந்த போராட்டம் தொடர்கின்றது. அப்படி இருக்கையில் அங்கெல்லாம் மாணவர்கள் போராட்டத்தில் எந்த தாக்குதலும் நடக்கவில்லை. இந்த குறிப்பிட்ட இரண்டு பல்கலைகழங்களில் மட்டும் எப்படி அசம்பாவிதங்கள் நடக்கின்றது. சம்பவம் நடந்த அன்று மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தியிருக்கிறார்கள். கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ரப்பர் குண்டுகளை வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். அதில் பல மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு இருக்கிறார்கள். அது முஸ்லிம் பல்கலைக்கழகமாக இருந்தாலும், அனைத்து சமூக மக்களும் அங்கே படிக்கிறார்கள். முஸ்லிம் மாணவர்கள் மட்டுமே அங்கே படிக்கவில்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெருமளவில் படிக்கிறார்கள். இந்து மதத்தை சேர்ந்த நான் அங்கே மாணவர் தலைவனாக இருக்கிறேன். இந்த தாக்குதலுக்கு மதத்தை ஒரு ஆயுதமாக கொண்டு வர காவல்துறையினர் தரப்பு நினைக்கிறார்கள்.